

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. இதில் டெக் மஹிந்திரா, சோழமண்டலம் ஆகிய நிறுவனங்கள் பேமெண்ட் வங்கி தொடங்குவதில்லை என விலகிவிட்டது. அதேபோல ஐடிஎப்சி வங்கி-டெலிநார் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து சன்பார்மா தலைவர் திலிப் சாங்வி தொடங்க திட்டமிட்டிருந்த பேமெண்ட் வங்கியும் தொடங்கப்படவில்லை.
அனுமதி பெற்ற 11 நிறுவனங்களில் மூன்று விலக எட்டு நிறுவனங்களும் விரைவில் தொடங்குவதாக அறிவித்தன. குறிப்பாக பேடிஎம் நிறுவனம் கடந்த தீபாவளிக்கு பேமென்ட் வங்கி தொடங்க திட்டமிட் டிருந்தது. ஆனால் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க முடிவெடுத்திருக்கிறது. ஆனால் அதற்குள் ஏர்டெல் நிறுவனம் முந்திக்கொண்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஏர்டெல் பேமென்ட் பேங்க் ஆகும். இப்போதைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே செயல்படத்தொடங்கும் எனவும் விரைவில் பிற மாநிலங்களில் விரிவுப்படுத்தப்படும் என ஏர்டெல் அறிவித்திருக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
அனைவரையும் வங்கிச்சேவைக் குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக கடந்த 2014-ம் ஆண்டு நிசிகேத் மோர் தலைமையிலான கமிட்டி இந்த பேமென்ட் வங்கிகளை பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பல நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு விண்ணப்பித்தன.
இந்த வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும். கடனோ, கடன் அட்டையோ கொடுக்க முடியாது அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். பேமெண்ட் வங்கிகள் தங்களிடம் உள்ள தொகையில் 75 சதவீதம் வரை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
7.5 சதவீத வட்டி
ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை தொடங்கலாம். வாடிக்கையாளர்களின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகும். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மட்டு மல்லாமல், இதர வாடிக்கையாளர் களும் ஆதார் கார்டு உதவியுடன் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்க முடியும். ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்கள் வங்கி கிளைகளாக செயல்படும்.
இதில் முதலீடு செய்யப்படும் டெபாசிட்களுக்கு 7.5 சதவீத வட்டி வழங்க ஏர்டெல் முடிவெடுத்திருக் கிறது. பொதுவாக சேமிப்பு கணக்கு களில் வைக்கப்படும் தொகைக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை மட்டும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக 6 சதவீத வட்டி வழங்குகின்றது. ஏர்டெல் ஆரம்ப கட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அதிக வட்டி வழங்குவதாக வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதிக வட்டி வழங்குவதினால் மொத்தமாக 1.25 சதவீதம் அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு இல்லை
பேமெண்ட் வங்கிகள் டெபிட் கார்டு வழங்கலாம் என்ற விதியிருந் தாலும், ஏர்டெல் டெபிட் கார்டு வழங்கப்போவதில்லை என அறிவித் திருக்கிறது. டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் ஆகியவை ஏர்டெல் ஸ்டோர்களில் நடைபெறும் என அறிவித்திருக்கிறது. இல்லை எனில் ஏர்டெல் மணி செயலி மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்துகொள்ளலாம்.
பண மதிப்பு நீக்கப்பட்டதை அடுத்து ரொக்கமற்ற பணப்பரிவர்த் தனை குறித்த விவாதம் எழுந் திருக்கிறது. பணப்பரிவர்த்தனைக் கான சந்தையில் நிறைய வாலட்கள் இருந்தாலும் வாலட்களில் இருக்கும் பணத்துக்கு வட்டி கிடையாது. ஆனால் பேமென்ட் வங்கிகளில் இருக்கும் பணத்துக்கு வட்டி இருக்கிறது. ஏர்டெல் அதிக வட்டி நிர்ணயம் செய்திருப்பதால் இனி வரும் பேமென்ட் வங்கிகளுக்கு நெருக்கடி உருவாகி இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.