ஆன்லைன் ஷாப்பிங் ஓடிபி: உஷாரய்யா... உஷாரு…

ஆன்லைன் ஷாப்பிங் ஓடிபி: உஷாரய்யா... உஷாரு…
Updated on
2 min read

நேரடியாகச் சென்று கடை கடையாகஏறி பொருட்களை தரம் பார்த்து வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம்மெல்ல மறைந்து வருகிறது. இன்றைய தொழில்நுட்ப காலம் அனைவரையும் சொகுசான வாழ்க்கைக்கு மாறச் செய்துள்ளது.

தங்கம் முதல் தகரம் வரை: வீட்டில் இருந்தபடியே தங்கம் முதல் தகரம் வரை அனைத்தையும் ஆன்லைனில் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும், கரோனா காலகட்டத்துக்குப் பிறகு ஆன்லைன் சந்தை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இதனால்,மக்களுக்கு நேரம் மற்றும் அலைச்சல் மிச்சமாகிறது. அத்துடன் வாங்கும் பொருளை பல நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வசதிப்படி தேர்வு செய்யவும் தோதாக உள்ளது.

பண்டிகை காலம்: இனி, பண்டிகைக்காலம் வரவிருப்பதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் மிகவும் உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில், முன்பதிவு செய்த பொருள்கள் கைகளில் கிடைக்கும் வரை நாம் செலுத்திய பணத்துக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே. இந்தக்கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் அண்மையில் மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது.

லேப்டாப் ஆர்டர்: அகமதாபாதைச் சேர்ந்தவர் யஷாஸ்வி சர்மா. இவர் தனது தந்தைக்காக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். யஷாஸ்விவேலைக்கு சென்ற நேரத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி பாய் அவரது அப்பாவிடம் கடவுச்சொல்லை (ஓடிபி) பெற்று லேப்டாப் டெலிவரிக்கான பார்சலை ஒப்படைத்து சென்று விட்டார். யஷாஸ்வியின் தந்தை வீட்டுக்குள் சென்று பிரித்து பார்த்தபோதுதான் லேப்டாப்புக்குப் பதிலாக அந்த பார்சலில் சோப்புக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

ஃபிளிப்கார்ட் கைவிரிப்பு: இந்த செய்தி யஷாஸ்வியிடம் தெரிவிக்கப்பட்டதும் அவர் உடனே ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்கியுள்ளார். ஓடிபியை சொல்லி பொருளை பெற்றுக்கொண்டு விட்டதால் இந்த விஷயத்தில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று அந்த அதிகாரி கைவிரித்துவிட்டார். அப்போதுதான் யஷாஸ்வியின் மூளைக்கு உரைத்துள்ளது ஓடிபி குறித்த உண்மையான பயன்பாடு. இதுவரையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்குத்தான் ஓடிபி பயன்படுகிறது என்று அவர் எண்ணி வந்தார். ஆனால், ஃபிளிப்கார்ட் அதிகாரி கூறிய பிறகுதான் ஓடிபி எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொண்டார். ஆன்லைன் நிறுவன டெலிவரி பாய் கொண்டு வரும்பொருளை அவரையே பிரிக்கச் சொல்லி, தான் ஆர்டர் செய்த பொருள்கள் (மொபைல் போன் என்றால் தேர்வு செய்த கலர் உள்பட) அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து வாடிக்கையாளர் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்காகவே ஆன்லைன் நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு ஓடிபி அனுப்பப்படுகின்றன.

உண்மையான பயன்பாடு: நிறைய பேர் அதன் பயன்பாடு தெரியாமல் பொருள்களை பிரித்து பார்க்காமலேயே ஓடிபியை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் ஏற்படும் மோசடிகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பாவர் என்பது யஷாஸ்வி விவகாரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிசிடிவி பதிவின் அதிர்ஷ்டம்: பல்லாயிரம் ரூபாய் நஷ்டம்தான் என நொந்த வேளையில் யஷாஸ்விக்கு அதிர்ஷ்டம் சிசிடிவி கேமரா உருவில் காத்திருந்துள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவன டெலிவரி பாய் பார்சலை கொடுத்தது முதல் யஷாஸ்வியின் தந்தை அதனை பிரித்து பார்த்தது வரை அனைத்து காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

நுகர்வோர் நீதிமன்ற வழக்கு: இந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக யஷாஸ்வி ட்விட்டரில் பதிவிட்டதையடுத்து வேறு வழியின்றி ஃபிளிப்கார்ட் நிறுவனம் அவர் ஆர்டர் செய்து ஏமாந்த லேப்டாப்பை திரும்பவழங்கியது. ஆனால், அனைவருக்கும் இந்த அதிர்ஷ்டக் கதவு திறந்திருக்குமா என்பது சந்தேகமே. எனவே, மதிப்புமிக்க பொருள்களை ஆர்டர் செய்து பணம் செலுத்துவதற்கு முன்பாகவே அவற்றை பிரித்து சரிபார்த்து பெற்றுக் கொள்வதற்கான ஓடிபி ஆப்ஷனை வாடிக்கையாளர்கள் டிக் செய்துவிட்டு பணம் செலுத்த வேண்டும். அத்துடன் நிற்காமல், வீடு வந்து சேர்ந்த பொருள்களை டெலிவரி பாய்களிடமே பிரிக்கச்சொல்லி நாம் ஆர்டர் செய்த பொருள்தானா என்பதை உறுதிப்படுத்திய பின்பே ஆன்லைன் நிறுவனம் அளிக்கும் ஓடிபி எண்ணை அவர்களிடம் தர வேண்டும். அதை மறக்கும்பட்சத்தில் நஷ்டம் நம்மைச் சார்ந்ததே. எனவே, இனி டெலிவரி ஓடிபி குறித்து வாடிக்கையாளர்கள் உஷாராக வேண்டிய தருணம் இது! - அ. ராஜன் பழனிக்குமார்; rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in