Published : 10 Oct 2022 06:42 AM
Last Updated : 10 Oct 2022 06:42 AM

ஜி ஜின்பிங் 3.0 | உலகின் போக்கை மாற்றி அமைக்குமா சீனா?

சீனாவுக்கு இந்த அக்டோபர் மாதம் பல விதங்களில் மிக முக்கியமானது. அக்டோபர் 1-ம் தேதி சீனா அதன் 73-வதுதேசிய தினத்தைக் கொண்டாடியது. அந்தச் சூட்டோடு அக்டோபர் 16-ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற இருக்கிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். சீனாவில் ‘ஒரு கட்சி ஆட்சி’ நடைபெறுகிறது. அந்தவகையில், சீனாவில் அதிபர் பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது சீன அதிபரான ஜி ஜின்பிங்தான் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். இந்நிலையில், நடைபெறவிருக்கும் தேசிய மாநாட்டில் மீண்டும் அவரே பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும் அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு, மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாட்டுத் தலைவர்களிடையே நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், சீனாவின் அதிபராக ஜின்பிங் மீண்டும் பதவி ஏற்பது என்பது சீனாவின் அரசியல் போக்கில் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் போக்கிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

இன்று உலக அளவில் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சீனா முதல் இடம் வகிக்கிறது. 2010-ம் ஆண்டுவரை ஒரு நூற்றாண்டு காலமாக அமெரிக்காதான் இந்தப் பட்டியலில் முதல் இடம்வகித்து வந்தது. வேளாண் தொழிலை பாரம்பரியமாகக் கொண்ட சீனா, 1980-களுக்குப் பிறகுதான் தொழில்கட்டமைப்பில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியது. ஆனால், நாற்பதே ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. இதுவரையில் பொருளாதார தளத்தில் கூடுதல் கவனம் செலுத்திவந்த சீனா, தற்போது அரசியல் தளத்தில் அதே ஆற்றலை செலுத்தத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சூழலில் இன்று சீனாவின் ஒவ்வொரு நகர்வும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

70 ஆண்டுகளுக்கு முன்னால் மிகப் பெரும் சமூக நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இருந்த நாடு, எப்படி உலகின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தது என்பதையும் அதன் வளர்ச்சி ஏன் உலக அரங்கில் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வதன் வழியே, ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக பதவி ஏற்பதன் பின்னால் இருக்கும் சர்வதேச முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

நவீன சீனா பிறந்தது: நவீன சீனாவின் தேசிய வரலாறு 1949-ஆண்டிலிருந்து தொடங்குகிறது. 1912-க்கு முன்பு வரை சீனாவில் முடியாட்சி முறை நிலவியது. முடியாட்சி ஒழிக்கப்பட்டு 1912-ம் ஆண்டு சீனக் குடியரசு உருவானது. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1920-களில் சீனாவில் கம்யூனிஸ்ட் கோட்பாடு தீவிரமடைந்தது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகள் சீனாவில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். இதனால் உள்நாட்டுப் போர் வெடித்தது. பல்வேறு மோதல்களுக்குப் பிறகு மாவோ தலைமையில் 1949-ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ‘சீனக் குடியரசு’ என்று அடையாளப்படுத்தப்பட்டு வந்த சீனா, ‘மக்கள் சீனக் குடியரசு’ என்று மாறியது. இந்த நாள்தான் சீனாவின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மாவோவின் சீனா: கடந்த நூற்றாண்டில் உலக அளவில் தாக்கம் செலுத்தியதலைவர்களில் ஒருவர் மா சே துங் என்ற மாவோ. அவருடைய ஆட்சிக் காலத்தில்தான், நவீன சீனாவின் அரசியல் அடித்தளம் போடப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது சீனா பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்போது வேளாண்மைமுதன்மைத் தொழிலாக இருந்தது. ஆனால், அதன் மூலம் நிலவுடமையாளர்கள்தான் பெரும் லாபம் ஈட்டக்கூடியவர்களாக இருந்தனர். ஏனையோர் கடும் ஏழ்மையில் இருந்தனர். மக்களுக்கு கல்வி அறிவு கிடையாது. நாட்டின் பொருளார வளர்ச்சிக்கான அடிப்படைத் தொழிற்கட்டமைப்பு இல்லை. இந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்த மாவோ, அரசியல் தளத்திலும் பொருளாதார தளத்திலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். உணவு தானிய உற்பத்தியும் எஃகு தயாரிப்பும் சீனாவை மிகப் பெரும் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் என்று மாவோ நினைத்தார்.

நாட்டை கம்யூனிச பாதைக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருந்த மாவோ, அதன் அடிப்படையில் வேளாண் துறையையும் தொழில்துறையையும் வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தனியார் நில உரிமை தடை செய்யப்பட்டது. அனைத்து தொழில் செயல்பாடுகளும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக இல்லாமல், நாட்டின் முன்னேற்றத்துக்காக மட்டுமேஉழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஒருபக்கம் வேளாண்உற்பத்தியை பெருக்க மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். மறுபுறம், தொழில்துறை உற்பத்தியைப் பெருக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் மிகக் குறைந்த கூலிக்கு தொழிற் சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நேர வரைமுறை இல்லாமல் மக்கள் வேலை செய்ய வைக்கப்பட்டனர்.

மாவோ

இந்தக் காலகட்டம் சீனாவின் வரலாற்றில் மிக மோசமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கில் நில உடமையாளர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் பலவந்தமாக தொழிற்சாலைக்கு இழுத்து வரப்பட்டு அதீத உழைப்பு அவர்களிடமிருந்து சுரண்டப்பட்டது. மாவோவின் இந்த நடவடிக்கைகள் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தின. முறையானதிட்டம் இல்லாமல், வேளாண் உற்பத்தியை பெருக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், நாட்டில் 1959 - 1961 காலகட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பஞ்சத்தால் 1.5 கோடி முதல் 5.5 கோடி மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது. அரசின் அதீதக் கட்டுப்பாடுகளாலும் அழுத்தங்களாலும் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த மாபெரும் அழிவின் காரணாமாக, சீனாவில் மாவோவுக்கான ஆதரவு குறைந்தது.

குறைந்த ஆதரவை மீட்டெடுக்கவும், அதிகாரத்தை நிலைநாட்டவும் 1966-ம் ஆண்டு கலாச்சாரப் புரட்சியை மாவோ முன்னெடுத்தார். முழுமையான கம்யூனிச சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால், முதலாளித்துவ சிந்தனை உடையவர்கள் சமூகத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு மாவோ வந்தார். அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் களையெடுக்கப்பட்டனர். உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கையை அனுபவித்து உணர, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, நகர்ப்புற மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். முந்தைய ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பொருளாதார பரிசோதனை முயற்சிகளைப் போலவே கலாச்சாரப் புரட்சியும் மிகப் பெரும் அழிவை சீனாவில் ஏற்படுத்தியது. கடும் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான மாவோ 1976-ம்ஆண்டு தனது 82-வது வயதில் காலமானார். அவரது இறப்புக்குப் பிறகு சீனா புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தது.

உலக தொழிற்சாலையாக சீனா: 1978-ம் ஆண்டு சீன அதிபராக பதவி ஏற்றார் டெங் ஷியாபிங். இன்று சீனா பொருளாதார ரீதியாக அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு அடித்தளம் இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் போடப்பட்டது. மாவோ ஆட்சியில் சீர்திருத்தங்கள் மேலிருந்து கீழாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் டெங் ஷியாபிங் ஆட்சியில் சீர்திருத்தங்கள் கீழிலிருந்து மேலாக மேற்கொள்ளப்பட்டது. மாவோ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தனியார் நில உரிமை மீதான தடை டெங் ஷியாபிங் ஆட்சியில் நீக்கப்பட்டது. தொழில்முனைவோர் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டனர். வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குக் கொடுக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள், கப்பல்கள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட்டன. டெங் ஷியாபிங்கின் சீர்திருத்தத் திட்டங்களால் சீனாவின் பொருளாதாரம் மேம்படத் தொடங்கியது. மக்கள் வறுமையிலிருந்து மீளத்தொடங்கினர்.

டெங் ஷியாபிங்

இன்று சீனா‘உலகின் தொழிற்சாலை’ என்று அறியப்படுவதற்கு டெங் ஷியாபிங்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட தொழில் துறைக் கட்டமைப்புதான் அடிப்படைக் காரணம். மூலப் பொருள்களை வழங்குபவர் – உற்பத்தி செய்பவர் –தயாரிப்பை விநியோகம் செய்பவர் – நுகர்வோர் ஆகியோர் இடையிலான இணைப்பு சரியாக இருக்கும் போது உற்பத்தி செலவு வெகுவாக குறையும். சீனா இந்தக் கட்டமைப்பை மிகுந்தத் திட்டமிடலுடன் உருவாக்கியது. சீனாவின் இந்தத் தொழிற்கட்டமைப்புக் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்பை சீனாவில் மேற்கொள்கிறது. தவிர, குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைத்ததால் மற்றநாடுகளைவிட குறைந்த விலையில் சீனாவால் பொருள்களை தயாரிக்க முடிந்தது. இதனால், உலக நாடுகள் சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்தன. டெங் ஷியாபிங்குக்குப் பிறகு அதிபர் பதவிக்கு வந்தவர்கள், ஒரு சில பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்தாலும், டெங் ஷியாபிங் காலத்தில் போடப்பட்ட பாதையிலே சீனா பயணித்தது. 2012-ல் சீன அதிபராக ஜி ஜின்பிங் பொறுப்பேற்கும் வரையில் அந்தப் பயணம் தொடர்ந்தது.

இரண்டாம் மாவோ: மாவோவுக்குப் பிறகு சீனாவின் அதிகாரமிக்கத் தலைவராக இருக்கிறார் ஜி ஜின்பிங். அவர் சீனாவின் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சீனா உலகின் மிக முக்கியமான அரசியல் சக்தியாகவும் பொருளாதார சக்தியாகவும் உருவெடுத்துள்ளது. உலகம் மேற்கு நாடுகளின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறும் ஜின்பிங், இந்தக் கட்டமைப்பை மாற்றி அமைப்பதை தன் இலக்காகக் கொண்டிருக்கிறார். மாவோ காலகட்டத்தில் போடப்பட்ட அரசியல் அடித்தளத்தையும் டெங் ஷியாபிங் காலகட்டத்தில் போடப்பட்ட பொருளாதார அடித்தளத்தையும் ஒருங்கிணைத்து சீனாவை உலகின் மையமாக மாற்றும் இலக்கில் திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். ஜின்பிங்கை இரண்டாம் மாவோ என்று கூறுகிறார்கள். தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் நாட்டின்முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பது ஜின்பிங்கின் கொள்கை. விளைவாக, சீனாவில் தனியார்நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றன. சமீபமாக தனியார் நிறுவனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன.

ஜி ஜின்பிங்

சீனா பொருளாதார ரீதியாக முன்னுதாரணமற்ற வளர்ச்சியை எட்டினாலும், அதன்வளர்ச்சி உலக அரங்கில் ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுவதில்லை. ஏனென்றால், சீனாஅடிப்படையில் ஜனநாயகமற்ற, கருத்துச் சுதந்திரமற்ற, அடக்குமுறை மிகுந்த நாடாக உள்ளது. அரசை விமர்சிப்பவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. இந்த ஒடுக்குமுறை ஜின்பிங் காலத்தில் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் மனித உரிமை மீறல்கள் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றன. 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அரசு நிகழ்த்தும் வன்முறை இந்நூற்றாண்டின் மிக மோசமான மனித உரிமை மீறலாக அடையாளப்படுத்தப்படுகிறது.

கூகுள், யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப், விக்கிப்பீடியா உள்ளிட்ட உலக அளவில் மிக முக்கியமான தளங்களுக்கு இன்றும் சீனாவில் தடை நிலவுகிறது. ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘பிபிசி’, ‘தி கார்டியன்’உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் சீனா உலகின் பொது ஓட்டத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு, அதேசமயம் தனது நகர்வால் உலகின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியபடி இருக்கிறது. இந்தச் சூழலில் ஹாங்காங், தைவானை மட்டுமல்ல திபெத்தையும் உள்ளடக்கி பரந்துபட்ட சீனாவை உருவாக்கும் கனவில் இருக்கும் ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகும்பட்சத்தில், சீனாவின் இந்நூற்றாண்டு வரலாறு அந்நாட்டின் வரலாறாக மட்டும் இருக்கப்போவதில்லை. உலகின் வரலாறாகவும் இருக்கும்! - முகம்மது ரியாஸ்; riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x