

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு இந்தியர்களின் நினைவிலிருந்து இனி எப்போதும் அகலாது என்றே சொல்லலாம். என் சொத்து, என் உரிமை, என் பலம் என்கிற நம்பிக்கையின் மீது மத்திய அரசு நடத்திய மிகப் பெரிய தாக்குதல் என்றே மக்களின் கருத்தாக உள்ளது. இந்த இரவு கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு தூக்கம் வராது, அடித்தட்டு மக்கள் நிம்மதியாக தூங்குவார்கள் என்றார் பிரதமர். ஆனால் அடுத்த நாள் காலையிலிருந்து வங்கிகளில் வாசலில் நிற்பதென்னவோ அடித்தட்டு மக்கள்தான் என்று பல வாரான செய்திகள் வந்தன.
ஆனால் இந்த தாக்குதலில் தப்பிக்க சில வழிகளும் இருக்கிறது என்பதுதான் உண்மை. அது முழுமையான தீர்வாக இருக்காது என்றாலும், அதைப் பயன்படுத்துவதுதான் இந்த நேரத்தில் சாமர்த்தியமாக இருக்க முடியும். அதுதான் பணமல்லாத பொருளாதார நடவடிக்கைகள். அதாவது மின்னணு முறையில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வது.
கல்வியறிவற்ற, பின்தங்கிய, வங்கிக் கணக்கு இல்லாத, இண்டர்நெட் பயன்படுத்த தெரியாத, கிராமப்புற மக்கள் இவற்றை எப்படி பயன்படுத்துவார்கள் என பல திசைகளிலிருந்தும் கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விகள் நியாயமானவைதான். ஆனால் இந்த விதிவிலக்குகளில் இல்லாத எத்தனை பேர் மின்னணு பரிமாற்றங்களில் ஈடுபடுகிறோம். தங்களது கணினிகளிலோ, ஸ்மார்ட்போனிலோ வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்கள், விளையாட்டு செயலிகளை தீவிரமாக பயன்படுத்துபவர் பணப் பரிமாற்றங்களை மட்டும் மின்னணு முறையில் மேற்கொள்ள ஏன் தயங்க வேண்டும்.?
சமீபத்தில் எனது நண்பர் ஒருவரோடு இது குறித்து பேசியபோது, பணத்தை கையில் எடுத்து செலவு பண்ணினாதான் திருப்தியா இருக்கு என்றார். அவரது டெபிட் கார்டை அதிகபட்சமாக ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் என்றார். நம்மில் அதிகம்பேர் அதற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்பதும் உண்மை.
எதிர்கால எதிர்பார்ப்பு
தொழிநுட்ப வளர்ச்சியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும் நமக்கு மொபைல் பரிவர்த்தனையை கற்றுக் கொள்ள என்ன தயக்கம் இருக்க முடியும். மாநகரம்/ நகரங்களில் ஓரளவு தன்னிறைவான பொருளாதார வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு பணமற்ற வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்தலாம். உயர் மதிப்பிலான நோட்டுகளை தடை செய்ததற்கு பின்னால் பணமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் அரசு ஒரு காரணமாக முன்வைத்ததையும் கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் எதிர்காலம் அதைநோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்திலிருந்து மாறுங்கள் என்று அரசே நெருக்கி தள்ளியுள்ளது. மின் கட்டணம், வரி செலுத்துவது, வங்கித் தவணைகள், வீட்டுத் தேவைகள், ரீசார்ஜ்கள் என பல செலவுகளை பணமல்லாத செலவுகள் மேற்கொள்ளலாம் என்கிறபோது பழமையான நடவடிக்கைகளிலிருந்து மாறுங்கள் என்றே அரசே சொல்கிறது.
தொழில்நுட்ப வசதிகள்
இந்தியாவில் சாதாரண செல்பேசி முதற்கொண்டு ஸ்மார்ட்போன்வரை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் அமெரிக்கா சீனாவுக்கு அடுத்து செல்போனை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். சுமார் 20 கோடி மக்களிடம் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. 2016 மே மாத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்டவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையோ 57 கோடியாக உள்ளது. ஆனால் மொபைல் மூலமான பண பரிவர்த்தனையின் செயல்பாடுகள் 0.3 சதவீதம்தான் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டிஜிட்டல் முறையிலான நிதியியல் நடவடிக்கைகளுக்கு அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்கேற்ப பல தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தபட்டே வருகின்றன. இந்த சேவைகளை வழங்க ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளுடன் பல சேவை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பரிவர்த்தனைகள் மூலம் சட்ட விரோத பரிவர்த்தனைகளை தடுக்க முடியும் என்றும் அரசு நம்புகிறது.
இந்த வகையில்தான் எலெக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (ECS), கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஐஎம்பிஎஸ் என்கிற எலெக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர், நேஷனல் எலெக்ட்ரானிக் டிரான்ஸ்பர் மொபைல் பேங்கிங், யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் (UPI) இ-வாலட்டுகள் என பல டிஜிட்டல் சேவைகள் வந்துள்ளன.
நெட்பேங்கிங்
இணைய வழியாக நமது வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு சேவைகளை இந்த வழியில் பயன்படுத்தலாம். நமது கணக்கிலிருந்து பணத்தை அனுப்புவது முதல் பொருட்களை வாங்குவது, மின்கட்டணம் முதல் அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம். உடனடி பணப் பரிமாற்றச் சேவையின் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம். இந்த வகையிலேயே மொபைல் பேங்கிங் வசதிகளையும் பயன்படுத்தலாம்.
மொபைல் வாலட்
மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் பாஸ்வேட் உள்ளீடு செய்து சென்று கொண்டிருப்பதைவிட, நமது கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பர்சில் வைத்துக் கொள்வதுபோல இ-வாலட் வசதி இது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தை வாலட்டுகளுக்கு பரிமாற்றம் செய்து கொண்டு, வாலட் மூலம் பரிவர்த்தனை செய்வது. பேடிஎம், மொபிக்விக், ஆக்ஸிஜன் போன்ற பல முக்கிய வாலட்டுகள் சிறந்த சேவையை வழங்குகின்றன.
யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் (UPI)
வாலட்டுக்கு அடுத்த மேம்படுத்தபட்ட தொழில்நுட்பம் இது. வாலட்டிலும் பணத்தை எடுத்து வைக்க தேவையில்லை. செல்போனிலிருந்து ஒரு குறுஞ்செய்தி மூலம் பணத்தை பரிமாற்றலாம். நமது இமெயில் முகவரி, மொபைல் எண் போதும். ஒரு கடையில் பொருள் வாங்கினால் நமது செல்போன் எண்ணுக்கு கடைகாரர் செய்தி அனுப்புவார். அதற்கு நாம் ஒகே கொடுத்து. நமது ஒருமுறை பாஸ்வேடை கொடுத்தால் பணம் அவரது வங்கிக் கணக்கிற்குச் சென்று விடும்.
இணைய வழி பணப் பரிமாற்றங்கள், பண அட்டை மற்றும் கடன் அட்டை பயன்படுத்திச் செய்யப்படும் பரிமாற்றங்கள், மொபைல் வாலெட்கள் மூலமாக நடைபெறும் பரிமாற்றங்கள் எல்லாவற்றையும்விட மிக எளிதானது இந்த முறை.
தனி வாலட்டுகள்
தற்போது சில நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைச் செலுத்துவற்கு என்றே தனியாக செயலிகளை வைத்துள்ளன. வோடபோன் எம் பைசா போன்ற செயலிகள் இந்த வகையானது. வோடபோன் வாடிக்கையாளர் தனது எம் பைசா செயலியில் மூலம் தனது செல்போன் கட்டணங்களை செலுத்தலாம். அவரது செல்போனிலிருந்து வேறொருவரது செல்போன் எண்ணுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். பெறுபவர் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து அருகிலுள்ள வோடபோன் ஸ்டோர்களில் பனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தினசரி சிறு செலவுகளுக்கு வேண்டுமானால் பணத் தட்டுப்பாடு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த ஆயிரம் வழிகள் இருப்பதை தெரிந்து கொண்டால் எதிர்கால இந்தியாவில் உங்களுக்கு எந்த நெருக்கடியும் இருக்காது.
-maheswaran.s@thehindutamil.co.in