

சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியின் வளர்ச்சி ஆச்சர்ய மூட்டக்கூடியது. விருதுநகர் வத்தராயிருப்பில் வசித்து வந்த என்.ரங்கா ராவ், அகர்பத்தி வர்த்தகத்தைத் தொடங்க திட்டமிட்டார். பிறகு கர்நாடக மாநிலத்துக்குச் சென்ற அவர், 1948-ல் மைசூரில் ரூ.50 முதலீட்டில் அகர்பத்தி வர்த்தகத்தைத் தொடங்கினார். அவர் தன் தயாரிப்புக்கு வைத்த பிராண்ட் பெயர், ‘சைக்கிள்’. இன்று சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரபலம்.
சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியைத் தயாரிக்கும் என்ஆர் குழுமத்தின் இன்றைய மதிப்பு ரூ.1,700 கோடி. இந்த ராக்கெட் வேக பயணம் எப்படி சாத்தியமானது என்பதை அக்குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான அர்ஜுன் மூர்த்தி ரங்கா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...
ராக்கெட் வேக வளர்ச்சி சாத்தியமானது எப்படி? - எந்தவொரு தொழிலும் ஏதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படும். நன்னெறி வர்த்தக கொள்கைகள்தான் சைக்கிள் பிராண்டுக்கு அடிப்படை. தரமான, தனித்துவமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை. வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
எளிய சைக்கிளை பிராண்டாக தேர்வு செய்ததற்கான காரணம்? - சுதந்திர காலகட்டத்தில் அனைவரிடமும் சைக்கிள் மிகப்பிரபலம். அதைப்பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் உற்சாக ஓட்டம். மேலும், சைக்கிளில் எவ்வளவு விசை செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு வேகமாக செல்லும். அதேபோன்று, வர்த்தகத்தில் நாம் எடுக்கும் கடுமையான முயற்சிகள்தான் வெற்றி எனும் சிகரத்துக்கு நம்மை கூட்டிச் செல்லும். அதேபோன்று பிரார்த்தனையின் வலிமைதான் இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு மூலதனம். இந்த சித்தாந் தங்களை அடிப்படையாகக் கொண்டு தான் சைக்கிள் பிராண்ட் உருவானது.
முன்புபோல் மக்கள் இப்போது அகர்பத்தியைப் பயன்படுத்துகிறார்களா? - முன்பைவிடவும் இப்போது அகர்பத்தி பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அகர்பத்தியை அதிகம் பயன்படுத்தும் நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தியானத்துக்கு அதிக அளவில் அகர்பத்தி பயன்படுத்தப்படுகிறது. இதனால் மனம் சாந்தி நிலையை அடைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பிரேசில், நைஜீரியா, சிங்கப்பூர், மலேசியாவில் பிரார்த்தனையில் அகர்பத்தி பயன்பாடு கணிசமாக உள்ளது. பிரதமர் மோடி யோகாவை உலக அளவில் எடுத்துச் சென்ற பிறகு அகர்பத்தி மதம் சார்ந்த பொருளாக இல்லாமல்
ஆன்மீகம் சார்ந்த பொருளாக மாறிவிட்டது. யோகாசன நிகழ்வுகளின் போது அகர்பத்தி பயன்பாடு தற்போது அத்தியாவசியமானதாக மாறிவிட்டது.
அகர்பத்தி தயாரிப்புகள் சுற்றுச் சூழலுக்கு உகந்ததா? - சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான அங்கீகாரமாகத்தான் உலக அளவில் கார்பன் நடுநிலை (கார்பன் நியூட்ரல்) அகர்பத்தி பொருட்கள் உற்பத்தியாளர் சான்றிதழ் எங்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவில் அகர்பத்திக்கான சந்தை, உங்களது கட்டமைப்பு எப்படி உள்ளது? - இந்தியாவில் அகர்பத்தி துறைக்கான சந்தை ரூ.12,000 கோடியாக உள்ளது. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.1,000 கோடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகத்தில்தான் சைக்கிள் பிராண்டுக்கு சிறப்பான விநியோக கட்டமைப்பு உள்ளது. இந்தியாவில் நிறுவனத்தின் தயாரிப்புகளை மூன்றாம் நிலை நகரங்கள் வரை நேரடியாக கொண்டு சேர்க்க 8 லட்சம் விற்பனையகங்களை உருவாக்கியுள்ளோம். 2,000-க்கும் மேற்பட்ட விற்பனை பிரதிநிதிகள், 5,000 விநியோகஸ்தர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போட்டி நிறுவனங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்? - உள்நாட்டு சந்தையில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் போட்டி அதிகமாக உள்ளது. பெரிய நிறுவனங்களைவிட உள்ளூர் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் போட்டிதான் அதிகமாக உள்ளது. இந்தியாவைப் பொருத்த வரையில் பூஜைப் பொருட்கள் தயாரிப்பில் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்களிப்புதான் மிக அதிகமாக உள்ளது. இதனால், அகர்பத்தி, சாம்பிராணி, குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுக்கான தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை நுகர்வோரிடம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஆன்லைன் விற்பனை சூடுபிடித்து வருவதையடுத்து அதில் மிக கவனம் செலுத்தி வருகிறோம். ஆன்லைன் விற்பனை அல்லாது பல நகரங்களில் சொந்த அங்காடிகளை திறப்பதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறோம். தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்தில் 8 அங்காடிகளையும், நாடு தழுவிய அளவில் 35 அங்காடிகளையும் திறந்துள்ளோம். அதில், 200 தயாரிப்புகளையும் சந்தைப்படுத்தியுள்ளோம்.
அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? - தொழில் நிறுவனங்களுடன் கைகோத்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதையே மத்திய, மாநில அரசுகள் விரும்புகின்றன. எனவே, எப்போதும் அரசிடம் பிரச்சினையை கொண்டு செல்லாமல் அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அரசும் அதை உடனடியாக புரிந்து கொண்டு ஆதரவளிக்கும்.
அடுத்த திட்டம்... ஒவ்வொரு இந்தியரின் பூஜை அறையிலும் சைக்கிள் பிராண்டின் அனைத்து தனித்துவமான தயாரிப்புகளையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்கு ஏதுவாக, அடுத்த ஓராண்டில் 100 அங்காடிகளை புதிதாக திறக்க மின்னல் வேகத்தில் சைக்கிள் சுழன்று வருகிறது. - rajanpalanikumar.a@hindutamil.co.in