

நவீன தொழில்நுட்பங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி கல்வி வழங்கும் நிறுவனங்கள் ‘எட்டெக்’ (EdTech) நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டில் ‘ஆன்லைன் கல்வி நிறுவனங்கள்’ என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கரோனா காலகட்டத்தில் எட்டெக் நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டின. அமெரிக்காவுக்குப் பிறகு, இணையம் வழியே கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இந்திய எட்டெக் சந்தை உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. 2020-ல் இத்துறையின் சந்தை வாய்ப்பு 2.8 பில்லியன் டாலராக (ரூ.22,680 கோடி) இருந்தது. 2025-ல் அது 10 பில்லியன் டாலராக (ரூ.81,000 கோடியாக) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சமீபமாக எட்டெக் நிறுவனங்கள் மிகப் பெரும் இழப்பை எதிர்கொண்டுவருகின்றன. சமீபத்தில் பைஜூஸ் நிறுவனம் அதன் 2020-21-ம் நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டது. அந்த நிதி ஆண்டில் பைஜூஸ் ரூ.4,589 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் அதன் இழப்பு ரூ.232 கோடியாக இருந்தது. இந்நிலையில் ஒரே ஆண்டில் இழப்பு 20 மடங்கு உயர்ந்துள்ளது. பைஜூஸ் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னணி எட்டெக் நிறுவனங்களான அன்அகாடமி, எர்டைடஸ் (Eruditus), அப்கிரேடு, லீடு, வேதாந்து உள்ளிட்ட நிறுவனங்கள் மிகப் பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளன. இந்த இழப்பால், இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதுகுறித்து முதலீட்டாளர்கள் மத்தியில்தயக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம்,தற்போதைய இழப்பு தற்காலிகமானதுதான் என்றும் இந்தியாவில் எட்டெக் துறைக்கான சந்தை வாய்ப்பு தொடர்ந்து பெருகும் என்றும் கூறப்படுகிறது. சரி, உண்மையில் இந்தியாவில் எட்டெக் நிறுவனங்களின் நிலைமை எப்படி இருக்கிறது?
எட்டெக் நிறுவனங்களின் வளர்ச்சி: 2010-க்குப் பிறகு இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு, இணையவசதியும் கிராமங்கள் வரையில் ஊடுருவின. இந்தச் சூழல் இந்தியாவில் எட்டெக்நிறுவனங்கள் காலூன்ற அடித்தளமாகஅமைந்தது. இந்திய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். இந்த மனநிலையை எட்டெக் நிறுவனங்கள் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கின. எட்டெக் நிறுவனங்கள் பள்ளி பாடங்கள் முதல் ஐஏஎஸ், நீட் நுழைவுத் தேர்வு வரையில் கோச்சிங் வழங்குகின்றன. மாணவர்கள் விரும்பியநேரத்தில் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். வகுப்புகள் வீடியோ வடிவில் இருப்பதால், அவற்றைத் திரும்பத் திரும்பப்பார்த்து மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். டேப்லெட், கணினியில் பாடங்கள் கற்பதை பள்ளி மாணவர்கள் சுவாரஸ்யமாக உணர்ந்தனர்.
இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகளும் அதன் கவர்ச்சிகளும் எட்டெக் நிறுவனங்களை நோக்கிமக்களை ஈர்த்தன. போட்டித் தேர்வில் கவனம் செலுத்திவந்த மாணவர்கள்எட்டெக் நிறுவனங்களை நோக்கி நகரத் தொடங்கினர். அதேபோல் கோடிங், டிசைன் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு எட்டெக் நிறுவனங்களை மாணவர்கள் மட்டுமல்லாது ஏற்கனவே வேலையில் இருப்பவர்களும் நாடத் தொடங்கினர். எட்டெக் நிறுவனங்களின் வளர்ச்சியில் கரோனா காலகட்டம் மிக முக்கியமானதாகும். கரோனா ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் எட்டெக் நிறுவனங்களை நோக்கிப் படையெடுத்தனர். 2020-ம்ஆண்டில் இந்திய எட்டெக் நிறுவனங்களில் 1.87 பில்லியன் டாலர்(ரூ.15,147 கோடி) முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்து. அந்நிறுவனங்களின் வளர்ச்சியைப் பார்த்த முதலீட்டாளர்கள், 2021-ல் மட்டும் 5.82 பில்லியன் டாலர் (ரூ.47,142 கோடி) முதலீடு செய்தனர்.
விமர்சனங்கள்: எட்டெக் நிறுவனங்கள் கற்பித்தல் முறையில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. அந்நிறுவனங்களால் தாக்கம்பெற்று மத்திய, மாநில அரசுகளும் தொழில்நுட்பம் வழியிலான கற்பித்தல் முறையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கின. ஆனால், எட்டெக் நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்சினைஎன்னவென்றால், அவை கல்வியைசந்தைப் பண்டமாக மட்டுமே அணுகுகின்றன. எட்டெக் நிறுவனங்கள் கல்வியை விடவும் விளம்பரங்களுக்கு மிக அதிக அளவில் செலவிடுகின்றன. பெற்றோர்கள் மனதில் பேராசையை தூண்டும் வகையில் அவற்றின் விளம்பரங்கள் இருக்கின்றன. ‘6 வயது குழந்தைகளுக்கு கோடிங்க் கற்றுத் தருகிறோம்’ விளம்பரத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். இந்நிறுவனங்களின் விளம்பரங்களில் உள்ள நச்சுத்தன்மை ஒருபுறமென்றால், இந்நிறுவனங்களின் கட்டணங்களும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன.
பல எட்டெக் நிறுவனங்களின் கட்டணம்கல்லூரிப் படிப்புக்கான வருடாந்திரக்கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது. அனைத்து எட்டெக் நிறுவனங்களும் பெரும் லாபத்தை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன என்று கூறிவிடமுடியாது. கல்வியை பரவலாக்க வேண்டும் என்ற இலக்கில் இலவசமாக சேவை வழங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. ஆனால், பெருவாரியான எட்டெக்நிறுவனங்கள் லாப வேட்டையை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை அவற்றின் விளம்பரங்களிலிருந்து உணர முடிகிறது. எட்டெக் நிறுவனங்கள் சார்ந்து இந்தியாவில் உரிய சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. ஆனால் சீனா தன் நாட்டில் எட்டெக் நிறுவனங்களின் அத்துமீறிய போக்கை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
நிறுவனங்களின் சரிவு: தற்போது பள்ளிகள், கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால் எட்டெக் நிறுவனங்களில் சந்தா கட்டி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் எட்டெக் நிறுவனங்கள் கடும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. 2022-ல் மட்டும் இத்துறையில் 4,000 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பைஜூஸ் நிறுவனம் 2,500 ஊழியர்களை நீக்கியதாக செய்திகள் வெளியாகின.
அந்தத் தகவலை பைஜூஸ் மறுத்தது. எனினும், பைஜூஸின் அங்கமான டாப்பர் மற்றும் வொயிட்ஹெட் ஜுனியர் ஆகிய இரு நிறுவனங்களில் 650 ஊழியர்கள் நீக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. தவிர, இவ்வாண்டில் வொயிட்ஹெட் ஜூனியர் நிறுவனத்தில் 1000 பேர் ராஜிநாமா செய்துள்ளனர். அன்அகாடமி 750, வேதாந்து 724 என்ற அளவில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. ஒட்டுமொத்த அளவில் தற்போது எட்டெக் நிறுவனங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. லிடோ (Lido), கிரிஜோ பன் (crejo.Fun), சூப்பர்லேர்ன், உதய் ஆகிய நிறுவனங்கள்திவால் நிலையை எதிர்கொண்ட நிலையில் தங்கள் செயல்பாட்டை நிறுத்தி உள்ளன.
நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்: இந்திய எட்டெக் நிறுவனங்கள் தற்சமயம் தடுமாற்றத்தில் இருந்தாலும், இது நிரந்தரமானது அல்ல. கல்வித் துறையில் தொழில்நுட்பங்களின் இணைவு புதிய சாத்தியங்களைத் திறந்துள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் பல்கலைக்கழங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு உருவாக்கத்தில் எட்டெக் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும். அந்தவகையில் வரும் ஆண்டுகளில் எட்டெக்நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பு பெருகுமே தவிர குறையாது. இந்தச்சந்தை வாய்ப்பை எட்டெக் நிறுவனங்கள் எப்படி பயன்படுத்தப் போகின்றன என்பதே அந்நிறுவனங்கள் மீதான மக்களின் மதிப்பை உயர்த்தும். கல்வியை வெறும் சந்தைப் பண்டமாக மட்டும் அணுகும் மனநிலையிலிருந்தும் அதீத லாப நோக்கத்திலிருந்தும் அந்நிறுவனங்கள் வெளியே வர வேண்டும். நிறுவனங்கள் தானாகஅத்தகைய முடிவுக்குவரும் என்றுஎதிர்பார்க்க முடியாது. அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம்!
| மத்திய அரசின் நடவடிக்கைகள்: ஆன்லைன் மூலம் கல்வி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றுள் ‘ஸ்வயம்’ (SWAYAM) மற்றும் ‘தீக்ஷா’ (DIKSHA) கவனிக்கத்தக்க தளங்களாகும். |
| 9-ம் வகுப்பு கணிதம் முதல் செயற்கைத் தொழில்நுட்பம் வரையில் பல்வேறு பாடங்களை ஸ்வயம் இணையதளம் வழங்குகிறது. வழக்கமான கல்வி தவிர்த்து, குறிப்பிட்ட துறையில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை ஸ்வயம் (swayam.gov.in) வழங்குகிறது. ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், மாணவர்களுக்கு நவீன முறையில் தீக்ஷா தளம் (diksha.gov.in) உருவாக்கப்பட்டிருக்கிறது. |
- சித்தார்த்தன் சுந்தரம் sidvigh@gmail.com