ஹைபிரிட் மாடல்தான் இனி எதிர்காலமா? - வீட்டில் சில நாட்கள்... அலுவலகத்தில் சில நாட்கள்... 

ஹைபிரிட் மாடல்தான் இனி எதிர்காலமா? - வீட்டில் சில நாட்கள்... அலுவலகத்தில் சில நாட்கள்... 
Updated on
5 min read

கரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் வேலைச் சூழல் மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஊழியர்கள் ஊதியத்தைவிடவும் வேலையில் நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊழியர்கள் பெரும் வாய்ப்பாக பார்க்கின்றனர். நிரந்தரமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வாரத்துக்கு இருதினங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். தினமும் அலுவலகத்துக்கு வர வேண்டிய நிர்பந்தம் இல்லாமல், விரும்பிய நாட்களில் வீட்டிலிருந்தும் தேவைப்படும் நாட்களில் அலுவலகத்துக்கு வந்தும் வேலை பார்ப்பது ஹைபிரிட் மாடல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வாய்ப்பை வழங்காத நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இது ஒரு போக்காக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வீட்டிலிருந்து பணிபுரிவது ஊழியரின் அடிப்படை உரிமை என்று கூறி அதை சட்டமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது நார்வே. சமீபத்தில் பிரதமர் மோடி வீட்டிலிருந்து பணிபுரிதலின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். பெண்கள் வேலைவாய்ப்புச் சூழலில் பங்கேற்பதற்கு இத்தகைய நெகிழ்வுத் தன்மைகள் முக்கியமான காரணிகளாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். ஹைபிரிட் மாடலை எல்லா நிறுவனங்களும் ஆதரிக்கின்றனவா? நிச்சயம் இல்லை. ஹைபிரிட் மாடலுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. ஹைபிரிட் மாடலால் ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக அந்த நடைமுறையை எதிர்க்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.உலக அளவில் ஹைபிரிட் மாடல் குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில ஊழியர்களிடமும், நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளிடமும் பேசினோம்…

என் வாழ்க்கையே மாறி இருக்கிறது முகம்மது ஃபாயிஸ், தென்காசி (வாகனபாக வடிவமைப்பாளர்) - நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்காகச் சென்னை வந்து10 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தை நான் நிறைவாக கழித்தேனா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். என் சொந்த ஊரின் கலாச்சாரம், வாழ்வில்முறை குறித்த நினைவுகள் எப்போது என்னுள் ஓடிக்கொண்டிருக்கும். இதனால், என்னால் சென்னையோடு ஒன்றமுடியவில்லை. பிழைப்புக்காக மட்டுமே சென்னையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். இதற்காக சென்னை எனக்கு பிடிக்காது என்று அர்த்தமில்லை. சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நான் வாழ விரும்புவது என் சொந்த ஊரில்தான். இந்தச் சமயத்தில்தான் கரோனா வந்தது. எங்கள் அலுவலகத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும்படி சொன்னார்கள். ஊருக்குச் சென்றதும் என் மனதில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கினேன்.

சென்னையில் ஒரே விதமான வாழ்க்கை. காலையில் எழுந்து வாகன நெரிசல், புகை, தூசி மத்தியில் அலுவலகம் ஓடுவேன். இரவில் பெரும் களைப்போடு அறைக்கு வருவேன். வந்ததும் தூங்கிவிடுவேன். எந்த அர்த்தமும் இல்லாத வாழ்க்கையாக அது இருந்தது. ஆனால், ஊருக்குச் சென்றதும் என் வாழ்க்கை அர்த்தப்பூர்வமானதாக மாறியது. அப்பா, அம்மா மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிட முடிந்தது. நண்பர்களுடன் மாலை நடை செல்ல முடிந்தது. என்னுள் ஏற்பட்ட மனநிறைவால், என்னால் அலுவலக வேலையைமிகுந்த உற்சாகத்துடன் பார்க்க முடிந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்த பிறகு, எங்கள் அலுவலம் திறக்கப்பட்டது.

ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று நிர்வாகம் சொன்னது. உண்மையைச் சொல்லப்போனால், நான் மனதளவில் உடைந்துவிட்டேன். திரும்பவும் சென்னைக்கு வந்து, வீடு பார்த்து தங்குவது என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. அன்றைய தினம் தனியாக அமர்ந்து சிந்தித்தேன். என்ன செய்யலாம்? மனம் ஒன்றாமல் பிழைப்பின் பொருட்டு சென்னையில் வாழ்வதா அல்லது ஊரில் மன நிறைவுடன் வாழ்வதா? நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன். ஒரு நல்ல நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் வேலை கிடைத்தது. இப்போது வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்.

வேறு வழி இல்லாமல் வேலையை விட்டேன் அனுபமா, திருச்சி (பதிப்பகத் துறை) - எனக்கு இரண்டு மகன்கள். இளையவன் மாற்றுத் திறனாளி. இவ்வளவு நாளும் அவனை என் அம்மாதான் பார்த்துக்கொண்டார். நானும் என் கணவரும் வேலைக்குச் சென்றுவிடுவோம். கரோனா சமயத்தில் எனக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது. கணவர் உற்பத்தித் துறையில் பணிபுரிவதால் அவருக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. நான் வீட்டிலிருந்து பணிபுரிந்ததால் என் மகனை என்னால் நன்றாக கவனித்துக்கொள்ள முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு என் அம்மா காலமாகிவிட்டார். பெரும் மனவருத்தத்தில் இருந்த எனக்கு, கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி ஒன்று வந்தது. என்னை அலுவலகத்துக்கு வந்து பணிபுரியச் சொல்லிவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினேன்.

நானும் என் கணவரும் சம்பாதித்தால்தான் குடும்பச் செலவையும் மகனுக்கான மருத்துவச் செலவையும் கவனித்துக்கொள்ள முடியும். என்னால், மகனை தனியாக வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்துக்குச் செல்ல முடியாது. வீட்டிலிருந்தபடியே பணிபுரிய என் அலுவலகத்தில் அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் வேலையை விட்டேன். வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் என்னைப் போன்று குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது மிகப் பெரிய வாய்ப்பு. வீட்டிலிருந்து பணிபுரியக் கூடிய வேலையில் இருந்தும், நிறுவனம் நமக்கு அந்த வாய்ப்பை மறுப்பது வருத்தத்துக்குரிய ஒன்று. இதனால், பல பெண்கள் நிரந்தரமாக வேலையை விட்டு வெளியேற வேண்டியதாக உள்ளது.

ஹைபிரிட் மாடல் குறித்து நாம் முறையாக திட்டமிட வேண்டும் சுரேஷ் சம்பந்தம் கிஸ்ஃப்ளோ நிறுவனர் & சிஇஓ - ஒரு நிறுவனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த சில ஆண்டுகளில் அது ஹைபிரிட் மாடலுக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், ஹைபிரிட் மாடல்தான் இனி எதிர்காலமாக இருக்கப்போகிறது. ஆக, நாம் இனி பேச வேண்டியது ஹைபிரிட் மாடல் வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி அல்ல. ஹைபிரிட் மாடலை எப்படி ஆக்கப்பூர்வமானதாக, பலன்மிக்கதாக மாற்றப் போகிறோம் என்பதைத்தான். ஊழியர்களைப் பொறுத்தவரையில், வீட்டிலிருந்து பணிபுரிவதை வசதியாக உணர்கின்றனர். பயண அலைச்சல் குறைகிறது. சொந்த ஊரில் தங்கிக் கொள்ளலாம். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது வேலைசார் கட்டமைப்பில் நிகழ்ந்திருக்கும் வரவேற்கத்தக்க மாற்றம். அதேசமயம், அதில் ஊழியர்களுக்கு சில பாதக அம்சங்களும் உள்ளன.

அலுவலகத்தில் பலரோடு சேர்ந்து பணிபுரியும்போது ஊழியரின் தொழிற்திறனும் அறிதலும் மேம்படுகிறது. அறிவுப் பகிர்வு அலுவலக கட்டமைப்பில்தான் சாத்தியமாகிறது. ஒருவர் முழுமையாக வீட்டிலிருந்து பணிபுரிந்தால், வேலையில் ஏற்கனவே அவருக்குத் தெரிந்ததைத் தாண்டி வேறு எதையும் கற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக, கல்லூரி முடித்து புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது மோசமான விளைவையே ஏற்படுத்தும். உளவியல்ரீதியாகவும் பிரச்சினைகள் உண்டு. வீட்டிலிருந்து வேலைபார்க்கும்போது பல சமயம் ஊழியர் தன் பணி நேரத்தைத் தாண்டியும் வேலை பார்க்க வேண்டியதாக இருக்கும். இதனால் நிறைய பேர் மன அழுத்ததை உணர்வதாகச் சொல்கின்றனர். அதேபோல் எல்லாருக்கும் வீட்டுச்சூழல் வேலைபார்ப்பதற்கு ஏற்றதாக அமைவதில்லை. இதனால், மூன்று மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டு முடிக்கிறார்கள்.

இந்த மனச் சோர்வு நாளடைவில் ஊழியரை வேலை மீதான ஆர்வத்தை இழக்கச் செய்துவிடும். ஊழியர்கள் அலுவலகத்துக்கு வராமல் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் நிறுவனத்துக்கு செலவு மிச்சம்தான். கட்டிட வாடகை, மின் கட்டணம், தண்ணீர், போக்குவரத்து என பல விஷயங்களில் செலவு மிச்சமாகும். ஆனால், இந்தச் செலவைக் குறைப்பதைவிடவும் நிறுவனம் இயக்கவோட்டத்தோடு இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். நிறுவனம் இயக்கவோட்டத்தோடு இருப்பதற்கு ஊழியர்களின் வருகை மிகவும் அவசியம். ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை நிறுவனம் விரும்புகிறது. அந்த ஒருங்கிணைந்தச் செயல்பாடுதான் நிறுவனத்தின் ஆன்மா. இணையம் வழியாக அந்த ஒருங்கிணைவு நிகழ்ந்தாலும், நிறுவனம் இதை கண்ணெதிரே பார்க்க விரும்பும்.

இதனால்தான், சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யச் சொல்ல தயக்கம் காட்டுகின்றன. ஆக, நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் சாதகமான ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். ஊழியர்களுக்கு மாதத்தில் சில வாரங்கள் அல்லது வாரத்தில் சில தினங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கலாம். அது அவர்களின் உளவியலில் நேர்மறை மாற்றத்தை உண்டாக்கும். அது அவர்களது வேலையிலும் பிரதிபலிக்கும். அவர்கள் அலுவலகம் வரும் நாட்களில் நேரடியாக குழுவோடு இணைந்து செயல்படுவார்கள். இதனால், அவர்களிடையே அறிவுப் பகிர்வு நிகழ்வதோடு அலுவலகமும் இயக்கவோட்டத்தோடுஇருக்கும்.

வீட்டிலிருந்து பணிபுரிவது எனக்கு சிறை மாதிரி ஷாலினி, சேலம் (ஐடி ஊழியர்) - சில பெண்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிவது வரப்பிரசாதம். சில பெண்களுக்கு அது ஒரு சித்திரவதை. நான் இரண்டாவது ரகம். என் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். நான் இப்போது பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கரோனா சமயத்தில் ஓராண்டாக வீட்டிலிருந்துதான் பணிபுரிந்தேன். பெங்களூர் போன்ற நகரில் சுதந்திரமாக இருந்த எனக்கு, சாதி, ஆணாதிக்கம் தீவிரமாக நிலவும் என் கிராமச் சூழல் மிகுந்த மன அழுத்தத்தைத் தந்தது.

என் ஊர்ச் சூழல் என்னை வெறும் பெண்ணாக குறுக்கியது. என்னால் அந்தச் சூழலை சகித்துக்கொள்ள முடியவில்லை. எப்போது மீண்டும் அலுவலகம் திறப்பார்கள் என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். முதல் அலை ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு எங்கள் அலுவலகம் திறக்கப்பட்டது. இப்போது எங்கள் அலுவலகம் ஹைபிரிட் மாடலை கடைபிடிக்கிறது. ஆனால், நான் தினமும் அலுவலகம் செல்கிறேன். நான் வேலை என்பதை வருவாய் ஈட்டுவதற்கான ஒன்றாக மட்டும் பார்க்கவில்லை. என்னை மேம்படுத்திக் கொள்வதற்கான பயணம் அது.அந்த வகையில் அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்கும்போது என் ஆளுமை மேம்படுவதாக உணர்கிறேன்.

அடிமை வாழ்க்கையிலிருந்து விடுபட்டதுபோல் உணர்கிறேன் திணேஷ், சென்னை (கல்விசார் மொழிபெயர்ப்பாளர்) - வீட்டிலிருந்து பணிபுரிதல் குறித்து விவாதிக்கப்படும் சமயங்களில், சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மையாக அந்த வாய்ப்பை எதிர்பார்ப்பதாக பலர் பேசுகின்றனர். அப்படி இல்லை. நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம் சென்னையில்தான். எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால், கரோனாவுக்கு முன்பு வரையில் அலுவலக வேலை நேரம் காரணமாக என்னால் எங்குமே செல்ல முடியாமல் இருந்தது. அலுவலகப் பணி 9 மணி நேரம். வீட்டிலிருந்து அலுவலகம் சென்றுவர 2 மணி நேரம். வாரத்துக்கு ஒரு நாள்தான்விடுமுறை. இது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு பெரும் சோர்வு அளித்தது. இதனால், வேலையைத் தாண்டி என்னுடைய தனிப்பட்ட ஆர்வங்களுக்கு என்னால் நேரம் செலவிட முடியவில்லை.

கரோனாவுக்குப் பிறகு எங்கள் நிறுவனம் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறைக்கு மாறியது. இப்போது ஹைபிரிட் மாடலைக் கடைபிடிக்கிறது. மாதம் இரு வாரங்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதுமானது. இப்போதுதான் முதன்முறையாக என் வேலையை வெறுக்காமல் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறேன். மனதளவில் சுதந்திரமானவனாக உணர்கிறேன். இப்போதெல்லாம் நான் விரும்பியபடி பயணம் செய்கிறேன்.சமீபத்தில்கூட, ஊட்டிக்குச் சென்று நண்பன் வீட்டில் தங்கி வேலைபார்த்தேன். வாழ்வதற்குத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கை இல்லை. ஆனால், இந்தியாவில் பெரும்பாலோனரின் வாழ்க்கையே வேலையாகத்தான் இருக்கிறது. வெளிநாட்டில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் நலனை முன்னிலைப்படுத்தி வேலை நேரக் கொள்கையை அமைக்கின்றன. இந்தியாவில் ஐடி துறை ஓரளவுக்கு முன்னுதாரணமாகச் செயல்படுகிறது. ஆனால், பல துறையினர் இன்னும் முதலாளி - தொழிலாளி மனநிலையிலே இருக்கின்றனர். இந்தச் சூழல் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்.

riyas.ma@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in