

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளி குறைவாக இருக்கிறது என்றால், அந்நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஏற்றுமதியை விட இறக்குமதி மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார இயக்கம் பிரதானமாக ஏற்றுமதியை சார்ந்து இல்லை. உள்நாட்டு தேவையை மையமாக கொண்டே இந்தியாவின் பொருளாதாரம் இயங்குகிறது. எனினும், இந்தியா பொருளாதாரரீதியாக வலுவான நாடாக மாற வேண்டுமென்றால், அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி குறைய வேண்டும்.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் இந்தியா 19,351 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், 31,800 கோடி டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது. அந்தவகையில், வர்த்தகப் பற்றாக்குறை என்று அழைக்கப்படும் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளி இந்தியாவில் 12,449 கோடி டாலராக உள்ளது.
சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 5,878 கோடி டாலராக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி அதிகரித்து செல்வது இந்தியாவுக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால், வர்த்தக இடைவெளி அதிகரிக்கும் போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும்.
இதனால், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும். அது பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு 45 சதவீதமாக உள்ளது. தற்போதைய ஏற்றுமதி தடுமாற்றத்தால் இந்நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.