

பி.கே. முருகன், நிர்வாக இயக்குநர், பிரதீப் பைனான்சியல் சர்வீசஸ்
விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட நிச்சயமற்ற தற்போதைய பொருளாதார சூழல்களால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை கணிக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், அவர்களுக்கு பெரிதும் கைகொடுப்பது டைனமிக் பாண்ட் ஃபண்டு முதலீடுகளாகும். டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் என்பது ‘கடன் பரஸ்பர நிதியங்கள்’ என அழைக்கப்படுகிறது. இவை, வெவ்வேறுகால அளவுகளில் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற கடன் மற்றும் பணச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்வதாகும். இந்த வகை நிதியங்களில் முதலீடு செய்யும் பத்திரங்களுக்கு காலம் அல்லது முதிர்வு குறித்த எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்களது நிதி தொகுப்புகளை வரிசைப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவை இந்த டைனமிக் பாண்ட் ஃபண்டுகளாகும்.
இந்த வகை திட்டங்களில் முதலீடுகளை நிர்வகித்து வரும் நிறுவனங்கள் வட்டி விகித மாறுபாடுகளிலிருந்து பயனடைய முற்படுகின்றன. முதலீட்டு காலத்தை மாற்றியமைப்பதன் மூலமாக வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வழிகளை அவர்கள் கண்டறிகின்றனர். இவ்வகை திட்டங்களில் மேற் கொள்ளப்படும் முதலீடுகளுக்கான காலத்தை அவ்வப்போது மாற்றியமைப்பதன் மூலமாக பாதுகாப்பான மற்றும் அதிகமான வருமானத்தை பெற முடியும். இதற்கான, உத்தரவாதத்தை நிதி மேலாளர்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கி அதற்கேற்பதிட்டமிட்டு செயலாற்றுகின்றனர். டைனமிக் பாண்ட் ஃபண்டு பலனைப் பெறுவதற்கு காலத்தின் அருமையை முதலீட்டாளர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். டைனமிக் ஃபண்டை நிர்வகிக்கும் மேலாளரின் நோக்கமானது வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்களின் முதலீட்டு தொகுப்பு
களுக்கான கால அளவைக் குறைப்பதாகும். வட்டி விகிதம் கூடுமா அல்லது குறையுமா என்பதை மதிப்பிடுவதானது அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களுக்கு ஒதுக்கப்படும் முதலீட்டு தொகையின் அளவை தீர்மானிக்க பெரிதும் உதவுகிறது.
தற்போது சில்லறைப் பணவீக்கத்தின் அளவு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் தொடர்ந்துஅதிகரித்தே காணப்படுகிறது. சர்வதேச வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இது, டைனமிக் பாண்ட் ஃபண்டு திட்டங்களில் முதலீட்டை அதிகரிப்பதற்கு உண்டான சூழலை உருவாக்கியுள்ளது. டைனமிக் பாண்ட் ஃபண்டு நிர்வாகத்தில் ஐசிஐசிஐயின் ஆல் சீசன்பாண்ட் ஃபண்ட் தற்போதைய சூழலில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் திட்டமாக உள்ளது. அதன் கால அளவு 2.47 ஆண்டுகளாகும். இவ்வகை திட்டங்கள் மூன்றாண்டு காலசுழற்சி அடிப்படையில் 7.9 சதவீத வருவாயை வழங்குகின்றன. அதேசமயம், பாரம்பரிய முதலீட்டு திட்டங்களிலிருந்து இதே காலகட்டத்தில் 4.6 சதவீத வருவாய் மட்டுமே ஈட்டப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.