2047-ல் வளர்ந்த நாடாக மாறுமா இந்தியா?

2047-ல் வளர்ந்த நாடாக மாறுமா இந்தியா?
Updated on
3 min read

உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது சர்வதேச கவனம் பெற்று இருக்கிறது. அடுத்தப் பத்தாண்டுகளில் இந்தியா இந்தப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜிடிபி) 1996-ல் உலக நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில்15-வது இடத்தில் இருந்தது. அதை 2020-ல் 4-ஆவது இடத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தினார்.

அவரது விருப்பம் இப்போது நிறைவேறத் தொடங்கியுள்ளது. இந்தத் தருணத்தில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று இவ்வாண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி ஏற்றுள்ளார். வளர்ந்த நாடாக மாறு
வதற்கு இந்தியா முன் என்னென்ன சவால்கள் இருக்கின்றன?

1.சுயசார்பு பொருளாதாரம்

இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பயணம் சுயசார்பு பொருளாதாரத்திலிருந்து தொடங்குகிறது. குண்டூசி முதல் ராக்கெட் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே சுயசார்பு திட்டத்தின் அடிப்படை நோக்கம். முன்பு வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பல பொருள்கள் தற்போது உள்நாட்டிலே தயாரிக்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு பொம்மை தயாரிப்பை எடுத்துக்கொள்ளலாம். 2018-19 நிதி ஆண்டில் இந்தியாவின் பொம்மை இறக்குமதி 65 கோடி டாலராகஇருந்தது. 2021-22-ல் அது 40 கோடி டாலராக குறைந்துள்ளது. தற்போது மொபைல்போன்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்றன. மொபைல்போன் முதல்கார் தயாரிப்பு வரையில் இன்றியமையாததாக விளங்கும் செமிகண்டக்டர் விரைவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

ஆனால், நடைமுறையில் இந்தியா முன் பல்வேறு சவால்கள் உள்ளன. இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே செல்கிறது. ஏற்றுமதியைவிட இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. கடந்த ஆகஸ்ட்
மாதத்தில் இந்தியா 33,000 கோடி டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், 62,000 கோடி டாலர் அளவில் இறக்குமதி செய்துள்ளது.இந்த இடைவெளியை குறைப்பது இந்தியாவின் முன்னிருக்கும் பெரிய சவால் ஆகும்.

முன்னேறும் நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது எரிசக்தி இறக்குமதி. எரிபொருள் இறக்குமதிக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளதால் வளர்ச்சி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க முடியாத கையறு நிலையில் பல நாடுகள் உள்ளன. இந்தியா அதன் எரிபொருள் தேவையில்85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

தற்போது உலகம், மின் வாகனத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதனால், பேட்டரி சார்ந்த ஆராய்ச்சிகளில் வளர்ந்த நாடுகள் அதிக முதலீடுகள் செய்கின்றன. சீனா பேட்டரி தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இந்தியா பேட்டரி தயாரிப்பிலும் அது தொடர்பான ஆராய்ச்சியிலும் மிகவும் பின்தங்கியே உள்ளது. கடந்த ஆண்டு லித்தியம் பேட்டரிகளின் இறக்குமதி 55 சதவீதமும், சோலார் உபகரண இறக்குமதி 102 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இந்தியா தற்போது சேவைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதே அளவுக்கான முக்கியத்துவத்தை உற்பத்தித் துறைக்கும் கொடுக்க வேண்டும். அதேபோல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிலும் ஒருங்கிணைந்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இது, சுயசார்பு பொருளாதாரத்துக்கு மிகவும் அடிப்படையானது.

2.தனிநபர் வருமானம்

இந்தியா பொருளாதார ரீதியாக பிரிட்டனை முந்தியுள்ளது என்றாலும், பிரிட்டனின் தனிநபர் வருமானத்துக்கும் இந்தியாவின் தனிநபர் வருமானத்துக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. பிரிட்டனில் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு 50,000 டாலராக உள்ள நிலையில், இந்தியாவில் அது வெறும் 2,200 டாலராக மட்டுமே உள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி 12,000 டாலர் தனிநபர் வருமானம் உடையவை வளர்ந்த நாடுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தனிநபர் வருமானம் தற்போதைய அளவிலேயே வளர்ச்சி அடையும் பட்சத்தில், அடுத்த 25 ஆண்டுகளில் வெறும் 8,800 டாலர் அளவிற்கே உயரும்.
அமெரிக்கா(70,000 டாலர்), சிங்கப்பூர் (70,000 டாலர்), ஜப்பான் (40,000 டாலர்), கொரியா (35,000 டாலர்) ஆகிய நாடுகள் உலக வங்கி வரையறையை விட அதிகபட்ச தனிநபர் வருமானத்தைக் கொண்டிருக்கின்றன.

இந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் வருமானம் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், அதன் மொத்த தேசிய வருமான வளர்ச்சி விகிதம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சராசரியாக 8.9% என்ற அளவில் வளர்ச்சி காண வேண்டும். இதற்கான வழிமுறையை திட்டமிட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

3. அடிப்படைப் பிரச்சினைகள்

மிக மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வு இந்தியாவில் நிலவுகிறது. தேசிய வருவாயில் 57 சதவீதம் பொருளாதார ரீதியாக மேலடுக்கில் உள்ள 10 சதவீதத்தினரை சென்றடைகிறது. எஞ்சியுள்ளதில் 13 சதவீத வருவாயை மட்டுமே 50 சதவீத மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர் என உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022-ல்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், வேலையின்மை பிரச்சனையும் தீவிரமாக நிலவுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் இந்தியா மிகவும் பின் தங்கிய இடத்தில் உள்ளது. மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழும் நாடுகளின் பட்டியலிலும், கருத்துச் சுதந்திரமிக்க நாடுகளின் பட்டியலிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது. பாலின பாகுபாடு,சுகாதார கட்டமைப்பு, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு என இந்தியா முன் இருக்கும் அடிப்படையான சவால்கள் ஏராளம்.

பொருளாதாரரீதியாக வளர்வது மட்டும் வளர்ச்சி இல்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அடையாளம்தான் நாட்டின் உண்மையான வளர்ச்சியை எடுத்துக்காட்டக் கூடியது. அதனை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், 2047-ல் வளர்ந்த நாடு எனும் இந்தியாவின் கனவு நனவாகும்!

அ. ராஜன் பழனிக்குமார்
rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in