கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்: ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிவிட்டு சமாதானம் பேசுமா?

கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்: ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிவிட்டு சமாதானம் பேசுமா?
Updated on
2 min read

கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிவிட்டு சமாதானம் பேசுமா?

ஐரோப்பிய நாடுகள் மிகச் சிக்கலான தருணத்தை எதிர்கொண்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யாவின் செயல்பாட்டைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.

மற்ற நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஐரோப்பிய நாடுகள் அதன் எரிவாயு தேவைக்கு ரஷ்யாவைத்தான் நம்பி இருந்தன. இதனால், உடனடியாக இல்லாமல், இவ்வாண்டு இறுதிக்குள் ரஷ்யாவிட மிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை முற்றிலும் குறைத்துவிடுவதாக ஐரோப்பிய நாடுகள் கூறின. எனவே, அந்நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தாலும், எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து பெற்றுவந்தன.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இந்தப் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா பெரிய பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா தன் மீது பொருளாதாரத் தடைவிதித்த ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகித்துவந்த எரிவாயுவை ரஷ்யா தற்போது நிறுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதத்திலே, சில நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியது. விநியோகக் குழாயில் ஏற்பட்டதொழில் நுட்பக் கோளாறு காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டதாக ரஷ்யா காரணம் கூறியது.

ஆனால், இம்முறை மிக வெளிப்படையாகவே ரஷ்யா தனது நோக்கத்தை அறிவித்துள்ளது. தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் நீக்காத வரையில், அந்நாடுகளுக்குமுழுமையான அளவில் எரிவாயுவை விநியோகிக்க மாட்டோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மிகப் பெரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி இருக்கின்றன.

சீனாவின் தயவை நாடும் ஐரோப்பா

இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. இதில் என்ன சுவாரஸ்ய மென்றால், ஐரோப்பிய நாடுகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் எரிவாயுவானது சீனாவின் எரிவாயு இல்லை. அது ரஷ்யா எரிவாயு. எரிவாயு இறக்குமதியில் சீனா உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாகஉள்ளது.

கடந்த ஓராண்டில் ரஷ்யாவிடமிருந்து சீனாவின் எரிவாயுஇறக்குமதி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சீனாவின் கைவசம் பெருமளவில் எரிவாயு இருப்பு உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த எரிவாயுவைப்பயன்படுத்த முடியாத நிலையில் சீனா உள்ளது. கரோனா பரவலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சீனா செயல்பட்டுவருகிறது.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் ஊரடங்கு தொடர்கிறது. இதனால் சீனாவின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தச் சூழலிலே சீனா அதன்வசம் உபரியாக இருக்கும் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கிவருகிறது.

இந்த ஏற்றுமதி சீனாவுக்கு பெரும் லாபத்தை ஈட்டித்தருகிறது. ஏனென்றால், ரஷ்யாவிடமிருந்து வாங்கிய எரிவாயுவை இரண்டு மடங்கு விலை வைத்தே ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட ஐரோப்பா, வேறுவழி தெரியாமல் சீனாவிடமிருந்து அதிகவிலை கொடுத்து, ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.

இந்தியாவை விமர்சித்த ஐரோப்பா

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த அமெரிக்கா, தனது தடையைப் பின்பற்றி இந்தியாவும் ரஷ்யாவிட மிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக்கூடாது என்று எதிர்பார்த்தது. ஆனால், இந்தியா, முன்னெப்போதும் இல்லாத அளவில் ரஷ்யா
விடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது.

ஏனென்றால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தடைவிதித்ததையடுத்து, கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவரும் இந்தியாவுக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்தது. முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து 2 சதவீத அளவிலே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு தனது இறக்குமதியை 13 சதவீதம் அதிகரித்தது.

இந்தியாவின் இந்த நகர்வை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்தன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண் டிக்காமல், சலுகை விலைக்காக ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது என்றும் இந்தியா வழங்கும் பணம் ரஷ்யாவின் போருக்கு உதவியாக அமையும் என்றும் உலக அரங்கில் இந்தியா மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா ஐரோப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதியை முற்றிலும் குறைத்துவிடுவதாக ஐரோப்பிய நாடுகள்தெரிவித்திருந்தன. ஆனால், நடைமுறையில் அந்நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு விநியோகம் சில நாட்கள் தடைபட்டாலே பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிகின்றன.

தற்போது அந்நாடுகள் சீனாவிடமிருந்து எரிவாயு இறக்குமதி செய்து தங்கள் தேவையை நிறைவேற்றி வந்தாலும், அது நிரந்தரமானது அல்ல.

ஏனென்றால், சீனா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதனாலயே தனது உபரி எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. பொருளாதார நெருக்கடி சரியாகிவிட்டால் சீனாவின் எரிவாயு பயன்பாடு அதிகரித்துவிடும். அதன் பிறகு, சீனாவால் ஐரோப்பிய நாடு
களுக்கு எரிவாயுவை வழங்க முடியாது.

அது அந்நாடுகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக அமையும். இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் நிபந்தனையை ஏற்று ரஷ்யாவின் மீதான தங்கள் பொருளாதாரத் தடைகளை நீக்கி விட்டு அந்நாட்டிலிருந்து எரிவாயுவை மீண்டும் இறக்குமதி செய்யத் தொடங்கி விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியொரு முடிவை ஐரோப்பிய நாடுகள் எடுக்கும்பட்சத்தில், உலக அரங்கில் அந்நாடுகளின் தார்மீகம் கேள்விக்கு உள்ளாகும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in