

நிறுவனங்கள் போனஸ் பங்குகள் வெளியிடுவது இவ்வாண்டு அதிகரித்து இருக்கிறது. 2010 மற்றும் 2018 ஆண்டுகளில் நிறுவனங்களின் போனஸ் பங்கு வெளியீடு உச்சமாக இருந்தது.
2010-ம் ஆண்டில் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 2018 – ம் ஆண்டில் 75 -க்கு மேற்பட்ட நிறுவனங்களும் போனஸ் பங்குகளை வெளியிட்டன.
இந்த ஆண்டில் இதுவரையில் 70 – க்கு மேற்பட்ட நிறுவனங்கள் போனஸ் பங்குகளை வெளியிட்டுள்ளன. பேனஸ் பங்குகள் என்றால் என்ன? ஏன் நிறுவனங்கள் போனஸ் பங்குகளை வெளியிடுகின்றன? அதனால், பங்குதாரர்களுக்கு என்ன லாபம்?..சுருக்கமாகப் பார்க்கலாம்.
போனஸ் வெளியீடு
ஒரு நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இலவசமாக கூடுதல் பங்குகளை ஒதுக்கீடு செய்வதுதான் போனஸ் வெளியீடு என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் 50 பங்குகளை வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனம் 1:1 என்ற விகிதாச்சாரத்தில் போனஸ் வெளியீடு மேற்கொள்ளும்போது உங்கள் பங்கு எண்ணிக்கை 100 ஆக மாறிவிடும்.
ஏன் நிறுவனங்கள் போனஸ் பங்குகளை வெளியிடுகின்றன?
ஒரு நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்குவதற்குப் பதிலாக போனஸ் பங்குகளை வழங்கக்கூடும். ஈவுத்தொகை செலுத்தும் போது அதற்கு விநியோக வரி உள்ளது. ஆனால், போனஸ் வழங்குவதற்கு அத்தகைய வரிவிதிப்பு இல்லை. அதேபோல், ஒரு நிறுவனம் தனது நிதி கட்டைமைப்பில் மாற்றம் செய்ய விரும்பும்போது போனஸ் பங்குகளை வெளியிடும். போனஸ் பங்குகளை வழங்குவதற்கு, நிறுவனம் அதன் ரிசர்வ் கணக்கிலிருந்து பங்கு மூலதனக் கணக்கிற்கு நிதியை மாற்றும்.
எனவே நிறுவனத்திடமிருந்து நிதி வெளியேறாது. நிறுவனம் போனஸ் பங்குகளை வெளியிடும் போது சந்தையில் அந்நிறுவனத்தின் மீதான நல்மதிப்பு அதிகரிக்கும். பலர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வருவார்கள்.போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கு நிறுவனம் செபியின் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
நிறுவனம் ஏதேனும் முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள் அல்லது பகுதியளவு மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களைக் கொண்டிருந்தால், அத்தகைய பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கான பங்குகளின் விகிதாசார கையிருப்பு நீட்டிக்கப்பட வேண்டும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, போனஸ் போன்ற சட்டரீதியான நிலுவைத் தொகைகளை நிறுவனம் செலுத்த தவறியிருக்கக் கூடாது போன்றவை போனஸ் பங்குகள் வெளியீடு தொடர்பான செபியின் முக்கியமான நிபந்தனைகள் ஆகும்.
பங்குதாரர்களுக்கு என்ன லாபம்?
நிறுவனங்கள் வெளியிடும் போனஸ் பங்குகள் தானாகவே பங்குதாரரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். பங்குதாரர் தான் விரும்பியபடி பங்குகளை விற்கலாம். நிறுவனங்கள் போனஸ் பங்குகள் வெளியிடுவதை, பொதுவாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் வரவேற்கிறார்கள்.
ஆனால், கூர்ந்து நோக்கினால் போனஸ் வெளியீட்டின் காரணமாக ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை புரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.1,000 மதிப்புள்ள பங்குகளை 50 எண்ணிக்கை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
அவர் முதலீடு செய்த தொகை ரூ.50,000-ஆக இருக்கும். நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் வெளியிட்டால் அவர்வசம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை100-ஆக உயரும். ஆனால், இப்போது அந்தப் பங்குகளின் மொத்தவிலை ரூ.1 லட்சமாக மாறாது. மாறாக, முன்னதாக ரூ.1,000-ஆக இருந்த ஒரு பங்கின் விலை, போனஸ் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு பாதியாக குறைந்துவிடும்.
அதாவது ரூ.1,000-ஆக இருந்த ஒரு பங்கின் விலை ரூ.5,00-ஆக குறைந்துவிடும். அப்படியென்றால், பங்குதாரர்களுக்கு என்ன லாபம்? போனஸாக வழங்கப்படும் பங்குகளுக்கு வரி விதிக்கப்படாது. நிறுவனத்தின் பங்கு மதிப்பு பின்னர் உயரும்பட்சத்தில் பங்குதாரர்களுக்கு லாபம் கிடைக்கும்.
எஸ் கல்யாணசுந்தரம் வங்கி ஊழியர் (ஓய்வு)
1952kalsu@gmail.com