மின்கழிவுகளை  என்ன செய்யப் போகிறது இந்தியா?

மின்கழிவுகளை  என்ன செய்யப் போகிறது இந்தியா?
Updated on
1 min read

இந்தியாவில் மின்கழிவுகள் பெருக்கம் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. உலக அளவில் அதிக மின்கழிவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஸ்மார்ட்போன், கணினி,ஃபிரிட்ஜ், வாஷிங்மிஷின் ஆகியவற்றின் விற்பனை உச்சம் தொடுகிறது. ஆனால், அவற்றின் பயன்பாட்டுக் காலம் முடிந்து அப்புறப்படுத்தப்படும்போது அந்தக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்குமான முறையான கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை. மின்கழிவுகள் அவற்றின் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

வெள்ளை, சாம்பல், பழுப்பு, ஃபிரிட்ஜ், வாஷிங்மிஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் வெள்ளை வகையின் கீழும், கணினி, மொபைல்போன் போன்ற தகவல்தொழில்நுட்ப சாதனங்கள் சாம்பல் வகையின் கீழும் தொலைக்காட்சி, கேமரா போன்றவை பழுப்பு வகையின் கீழும் வருகின்றன.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால், மக்களின் நுகர்வும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.75 கோடி மொபைல்போன்கள், 1.45 கோடி ஃபிரிட்ஜ்கள், 70 லட்சம் வாஷிங்மிஷின்கள் விற்பனை ஆகின்றன. இவற்றில் ஸ்மார்ட்போன்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மின்கழிவுகளாக மாறுகின்றன. மற்றவை 9 ஆண்டுகளுக்குப் பிறகு மின்கழிவுகளாக மாறுகின்றன. மக்களின் நுகர்வு அதிகரித்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் மின்கழிவுகளின் அளவும் அதிகரித்துவருகிறது. 2019 ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 32 லட்சம் டன் மின்கழிவுகள் உருவாகின. ஆனால், அவை அடுத்தப் பத்தாண்டுகளில் 4 மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மின்கழிவுகள் உருவாக்கத்தில் சீனா மற்றும் அமெரிக்க முதல் இரண்டு இடங்களில் இருந்தாலும் அந்நாடுகளில் மின்கழிவுகளை கையாளுவதற்கான கட்டமைப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மின்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 472தான். இவற்றின் மூலம் 15 சதவீத மின்கழிவுகளை மட்டுமே மறு சுழற்சி செய்ய முடியும்.

மின்கழிவுகளைப் பொறுத்தவரையில் என்ன பிரச்சினை என்றால், அவற்றில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மூலப்பொருள்கள் உள்ளடங்கி இருக்கின்றன. மின்கழிவுகளில் எஃகு மற்றும் இரும்பு 50 சதவீதம் அளவில் பங்கு வகிக்கின்றன. பிளாஸ்டிக் 21 சதவீதமும், காப்பர், அலுமினியம் போன்றவை 13 சதவீதமும்,லெட், மெர்குரி, லித்தியம் உள்ளிட்ட தனிமங்கள் 16 சதவீதமும் பங்குவகிக்கின்றன. மின்னணு சாதன உருவாக்கத்தில் இன்றியமையாதவையாக இருக்கும் லெட், மெர்குரி, லித்தியம், காடியம், பிளாஸ்டிக்ஸ், நிக்கல்,பாரியம், குரோமியம் ஆகியவை சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்து விளைவிக்ககூடியவை. இவற்றில் பெரும்பாலானவை பேட்டரிகளிருந்து வருபவை.

தற்போது இந்தியா மின்வாகனப் பயன்பாட்டை நோக்கி வேகமாக நகர்ந்துவருகிறது. இதனால் வரும் ஆண்டுகளில் மின்கழிவுகளில் ஆபத்தான சேர்க்கைகளின் அளவு அதிகமாக வாய்ப்புள்ளது.அந்தவகையில் இந்தியா மின்கழிகளை கையாளுவதற்கான கட்டமைப்பை உடனடியாக உருவாக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில்த்தில் இருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in