தமிழ்நாட்டின் மீன் சுவையை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்! - ‘மீன் சட்டி’ நிறுவனர்கள் அரவிந்த் சுரேஷ், ரிச்சி ரிச்சர்ட் பேட்டி

தமிழ்நாட்டின் மீன் சுவையை சர்வதேச தளத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்! - ‘மீன் சட்டி’ நிறுவனர்கள் அரவிந்த் சுரேஷ், ரிச்சி ரிச்சர்ட் பேட்டி
Updated on
3 min read

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கிறது ‘மீன் சட்டி’. இது ஒரு உணவு ஸ்டார்ட்அப் நிறுவனம். தற்போது மீன் உணவுப் பிரியர்களின் மத்தியில் இந்த ஸ்டார்ட்அப் பிரபலமாகி வருகிறது. நேரடியாக கடையிலே வந்து சாப்பிடலாம் என்றாலும், ஆன்லைன் மூலமான டெலிவரிதான் அதிகம். மண்பானையில் மீன்குழம்பு நிரப்பி, கூடவே சூடாக சோறு, ரசம், வறுத்த மீன்தூண்டுகள், சாப்பாடு முடிந்த பிறகு சுவைப்பதற்கு இனிப்பு. எல்லாவற்றையும் அழகானஅட்டைப் பெட்டியில் வைத்து அனுப்புகிறார்கள். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே ‘மீன் சட்டி’ என்பது ஒரு பிராண்டாக அடையாளம் பெறத் தொடங்கியுள்ளது.

ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களுக்கு வயது 24-தான். அரவிந்த் சுரேஷ் மற்றும் ரிச்சி ரிச்சர்ட் இவர்கள் இருவர்தான் இந்நிறுவனத்தின் நிறுவனர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கல்லூரி முடித்தார்கள். ஆனால், இப்போது ஒரு நிறுவனத்தையே தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். எப்படி இந்தச் சிறுவயதிலே இது சாத்தியமானது, என்ன விதமான சவால்களை அவர்கள் எதிர்கொண்டார்கள்? பகிர்ந்துகொள்கிறார்கள் இருவரும்...

எப்படி தொடங்கியது இந்தப் பயணம்?

அரவிந்த்: நானும் ரிச்சர்ட்டும் கல்லூரி நண்பர்கள். கல்லூரியில் படிக்கும்போதே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால், என்ன தொடங்கப்போகிறோம் என்பது குறித்து தெளிவு இல்லை. இந்தச் சமயத்தில் கல்லூரி படிப்பு முடிந்ததும் ரீடெயில் துறையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரிச்சர்ட் வேலைக்குச் சேர்ந்தான். நான் ஒரு சிறிய விபத்துக்கு உள்ளாகி வீட்டில் முடங்கி இருந்தேன்.

ஒரு நாள் ரிச்சர்ட் போன் செய்து, “டேய்எனக்கு கம்பெனில வேலை பார்க்க பிடிக்கல.சீக்கிரமே எதாவது தனியா ஸ்டார்ட் பண்ணலாம்.யோசிடா” என்றான். அப்போது என் அப்பா, அம்மாவுடன் நான் ஹைதராபாத்திலிருந்து சென்னையைநோக்கி காரில் வந்துகொண்டிருந்தேன். ஒரு முன்னணி பர்கர் நிறுவனத்தின் கிளையை எடுத்துநடத்தலாம் என்று நான் அவனிடம் சொன்னேன்.அப்போது என் அருகில் இருந்த அப்பா “ஏன் இன்னொரு பிராண்டை எடுத்து அதில் உங்கள் ஆற்றலை செலவழிக்கிறீர்கள். நீங்களாக சொந்தமாகஒரு பிராண்டை உருவாக்கி அதை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தலாமே” என்றார். அந்தப் பயணத்திலேயே யோசிக்க ஆரம்பித்தேன்.

என் அம்மா நன்றாக சமைப்பார்கள். குறிப்பாக மீன் குழம்பு. என் பாட்டி வழியாக என் அம்மாவுக்கு பாரம்பரியமாக வந்தடைந்த செய்முறை அது. கிட்டத்தட்ட 25 வருட பாரம்பரியம் என் அம்மாவின் மீன் குழம்பு செய்முறைக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அசைவப் பிரியர்களுக்கு கடைகளில் நல்ல மீன் சாப்பாடு கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. ஏன் நாம்நல்ல மீன் சாப்பாடு வழங்கக்கூடாது என்று தோன்றியது. உடனே ரிச்சர்டுக்கு போன் செய்து சொன்னேன், “டேய் ஐடியா ரெடிடா. மீன் சாப்பாடு கடைஆரம்பிக்கப்போறோம். சாதாரண கடை மாதிரி இல்லை. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மாதிரி” என்று சொன்னேன். இப்படியாகத்தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது.

ஐடியா உருவாக்கம் சரி. அதை நிறுவனமாக நடைமுறைப்படுத்தும்போது என்ன விதமான சவால்கள் இருந்தன?

ரிச்சர்ட்: நாங்கள் மீன் குழம்பை மண்பானையில் வைத்து அழகாக கொடுக்க விரும்பினோம். அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டோம். எங்கள் முன் மூன்று சவால்கள் இருந்தன. முதலாவது, பேக் செய்து அனுப்புவதற்கு ஏற்ற அளவில் மண்பானை இருக்க வேண்டும். இரண்டாவது, விநியோகம் செய்யும்போது குழம்பு கீழே கொட்டாமல் இருக்கும் வகையில் பேக்கிங்கை வடிவமைக்க வேண்டும். மூன்றாவது, மீன் கொள்முதல்.

மண்பானை, பேக்கிங்கை எங்கள் நிறுவனத்தின் தனித்துவமாக முன்வைப்பதால் இவைஇரண்டில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்து மண்பானை செய்பவர்களிடம் பேசினோம். எங்களுக்கு ஏற்ற வகையில் மண்பானை செய்து தர வேண்டும் என்றோம். முதலில் எங்கள் இருவரைப் பார்த்து விட்டு, “நீங்க கேக்கிறமாதிரியெல்லாம் செய்ய முடியாது. செஞ்சுவைச்சிருக்கிறத வாங்கிட்டுப் போங்க”என்றார்கள். பிறகு நாங்கள் எங்கள் நிறுவனம் மூலம்மண்பானை விற்பனை எவ்வளவு தூரம் பெருகும் என்று விவரித்தோம். அதன் பொருளாதாரப் பயன்களைப் புரிந்தவர்கள் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்த அளவில் மண்பானை தயாராகிவிட்டது. பல கட்ட ஆய்வுக்குப் பிறகு எங்களுக்கான பேக்கிங்க் ஸ்டைலை கண்டுபிடித்தோம். மீன் கொள்முதலைப் பொறுத்தவரையில் நாங்கள் கொடுவா மீன் மட்டுமே பயன்படுத்துகிறோம். சென்னை, கடலூர், தூத்துக்குடி என தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்குச் சென்று மீன் கொள்முதலுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டோம்.

சுவையான மீன் குழம்பை சமைக்க வேண்டுமே. சமையல் கலைஞர்களுக்கு என்ன செய்தீர்கள்?

அரவிந்த்: சமையலைப் பொறுத்தவரையில் எங்களுக்குப் பெரிய சவால்கள் எதுவும் இல்லை. என் அம்மாவின் சமையல் வழிமுறையை அறிவியல் மயப்படுத்தினோம். அதாவது, எவ்வளவு அளவில் மசாலா, புளி, உப்பு, தண்ணீர் சேர்க்க வேண்டும் என்பதை கணிதச் சூத்திரங்களாக மாற்றினோம். இதுவரையில் சமையலறைப் பக்கம் எட்டிப் பாத்திராதவர்கள் கூட இந்தவிதிமுறைகளைப் பயன்படுத்தி மிக அருமையான மீன் குழம்பை தயார் செய்ய முடியும்.

உங்கள் தந்தை சுரேஷ் சம்பந்தம் (மென்பொருள் நிறுவனமான ‘ஆரஞ்ச்கேப்’பின் நிறுவனர்) கோடிகளில் புழங்கும் ஒரு தொழில்முனைவர். நிறுவன உருவாக்கத்தில் உங்கள் தந்தை உதவி எந்த அளவுக்கு இருந்தது?

அரவிந்த்: பலரும் என் தந்தையால்தான் நாங்கள் இந்த நிறுவனத்தை உருவாக்க முடிந்தது என்று நினைக்கிறார்கள். என் தந்தை கோடிகளில் புழங்கும் தொழில்முனைவோராக இருக்கலாம். அது நிதி சார்ந்துஎங்களுக்கு பலமாக இருக்கலாம். ஆனால், ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது என்பது நிதி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. அது நீங்கள் உங்கள் சொந்தக் காலில் நிற்பது போன்றது. தந்தையிடமிருந்து தொடர் உதவியை நீங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள். இந்த நிறுவனத்துக்காக ஐடியாவை உருவாக்கியது முதல் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் திட்டமிட்டு சந்தைப்படுத்தியது வரையில் என்னுடைய உழைப்பும் ரிச்சர்ட்டின் உழைப்பு மட்டும்தான் இருக்கிறது.

அடுத்த இலக்கு என்ன?

எங்களுக்கு எப்போதும் ஒரு வருத்தம் உண்டு.நாம் பர்கர் சாப்பிடுகிறோம், கோக் குடிக்கிறோம். பிரெஞ்ச் பிரைஸ் சாப்பிடுகிறோம். ஆனால், தமிழ்நாட்டின் எத்தனை சுவைமிக்க உணவுகள் சர்வதேச அளவில் அடையாளம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் மீன் சுவை தனித்துவமானது. இதை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது. அமெரிக்காவின் மெக்டொனால்ட்ஸ் போல, கோகோ கோலா போல தமிழ்நாட்டின் ‘மீன் சட்டி’யை சர்வதேச பிராண்டாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு. அதை நோக்கித்தான் எங்கள் பாதையை அமைக்கிறோம். ‘மீன் சட்டி’ இணையதளம்: meensatti.com

- முகம்மது ரியாஸ் | தொடர்புக்கு riyas.ma@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in