

கடந்த வாரத்தில் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு ஒட்டுமொத்த மக்களையும் பீதியில் தள்ளியிருக்கிறது. பொதுவாக ஏடிஎம் கொள்ளைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அடிக்கடி இந்தியாவில் ஏடிஎம் கொள்ளைகள் நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு படி மேல் தற்போதைய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆம் இந்தியாவில் உள்ள வங்கி பயனாளிகளின் ஏடிஎம் விவரங்களை பயன்படுத்தி சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் ஜூலை மாதம் 10 தேதி வரை பயனாளிகளின் விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 32 லட்சம் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் 65 லட்சம் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் பெரும்பாலானவை விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளைச் சேர்ந்தவை என்றும், மீதமுள்ள கார்டுகள் ரூபே கார்டுகள் என்று தெரியவந்துள்ளன. தகவல் திருடு போன பெரும்பாலான கார்டுகள் எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கிகளைச் சேர்ந்தவை.
கடந்த மார்ச் மாதம் அசோசேம் மற்றும் மஹிந்திரா எஸ்எஸ்ஜி கூட்டு ஆய்வில், இந்தியாவில் இப்படிப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக தகவல் திருட்டுகள் நடக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அது பெரிதாக எடுத்துக் கொள் ளப்படவில்லை. சுமார் 32 லட்சம் கார்டு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாக புகார் வந்ததை அடுத்து நிதியமைச் சர் அருண் ஜேட்லி இது குறித்து வங்கி கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரிய அளவில் நிதி இழப்புக்கு காரண மானதுடன், நமது சைபர் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
இதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பைச் பங்குச் சந்தை அலுவலகத்தில் மூன்று கணினிகளில் வைரஸ் தாக்கியிருக்கிறது. இது வேலையினால் அல்லது மற்ற பழுதினால் ஏற்பட்டதல்ல என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் மற்ற கணினிகளில் இதுபோன்ற வைரஸ் கள் தாக்கவில்லை. குறிப்பிட்ட மூன்று கணினிகளில் மட்டும் வைரஸ் தாக்கி யிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது.
இதுபோல் பல்வேறு வகைகளில் இந்தியாவில் நாளுக்கு நாள் இணைய வழி திருட்டு அதிகமாகிக் கொண்டே வருகிறது. உலகளவிலான இணைய வழி தகவல் திருட்டில் அமெரிக்கா, ஜப்பா னுக்கு அடுத்த நிலையில் இந்தியாதான் மிகப்பெரிய இலக்காக அமைந்துள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
டெபிட் கார்டு விவரங்கள் திருடப் பட்டுள்ளது எனத் தெரிந்த உடனேயே வங்கிகள் துரித நடவடிக்கையை எடுத் தன. எஸ்பிஐ வங்கி 6 லட்சம் கார்டுகளை முடக்கி புதிய கார்டுகளை வழங்கியது. இதேபோல் பல்வேறு வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டை மாற்றித் தந்துள்ளன. இது வரவேற்கவேண்டியதுதான் ஆனால் இது நிரந்தர தீர்வாகாது.
இணைய தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய நிறுவனம் யாகூ. தற் போதைய நிலவரப்படி 100 கோடி மக்கள் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த மாதம் வெளிவந்த செய்தி யாகூ நிறுவனத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத் துள்ளது. கிட்டத்தட்ட 50 கோடி பயனாளி களின் சுய விவரங்கள் யாகூவிலிருந்து திருடப்பட்டுள்ளன. யாகூவில் பயனர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த நாள் விவரங்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளன. இதுதான் உலகத்தில் நடந்த மிகப் பெரிய தகவல் திருட்டு என்று துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகத்திலேயே மிகப் பெரிய தொழில் நுட்ப நிறுவனமான யாகூவுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சைபர் அட் டாக்கை எதிர்கொள்வதில் மிக ஆரம்ப நிலையில் உள்ள இந்தியாவின் நிலை மையை பற்றி யோசித்து பாருங்கள்.
இந்தியாவில் நிதித்துறையில் நடைபெறும் முறைகேடுகள் மூலமாக 1.26 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று அசோசேம் மற்றும் பிடபிள்யூசி இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது. டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதிலும் 1.32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை மிகச் சிறிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் பெரிய அளவில் இணைய வழி திருட்டுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏடிஎம் விவரங்கள் திருடப்பட்டதே இந்திய அளவில் பெரிய அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளன. ஆதார் எண் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 107,10,63,289 ஆதார் கார்டுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கை ரேகை, கண்விழி என பல்வேறு தனி மனித விவரங்கள் அனைத்தும் ஆதார் எண் மூலமாக சேமிக்கப்பட்டுள்ளன. ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் மத்திய, மாநில அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு வகைகளில் ஆதார் எண் தேவையை அதிகப்படுத்தி வருகின்றன. அனைத்து விவரங்களும் தகவல் திரட் டாக உள்ளன. உலகத்திலேயே மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய மக்களின் அனைத்து விவரங்களும் களவு போனால் இந்தியாவின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்தியாவில் 50 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. டிஜிட்டல் யுகம் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். ஆனால் அதற்கேற்ப டிஜிட்டல் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மேலும் மக்களுக்கும் இணைய குற்றங்கள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவுக்கென்று பிரத்யேகமான தகவல் பாதுகாப்புச் சட்டம் இல்லை. இச்சட் டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். மேலும் சர்வ தேச தரத்தில் இணைய குற்றங்கள் தடுப்பு கொள்கையை உருவாக்க வேண்டும். புதியமுறையில் டிஜிட்டல் போர் தொடங்கிவிட்டது. அடுத்த பத்தாண்டு களில் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம். மத்திய அரசு விழித்துக் கொள்ளுமா?
- பெ. தேவராஜ்
devaraj.p@thehindutamil.co.in