எப்போது பல ‘அமுல்’கள் உருவாகப் போகின்றன?

எப்போது பல ‘அமுல்’கள் உருவாகப் போகின்றன?
Updated on
4 min read

சில மாதங்களுக்கு முன்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. ‘ஒற்றுமையே பலம்' எண்ணம் விவசாயிகளிடையே எந்த அளவுக்கு காணப்படுகிறது என்ற தலைப்பில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஒருவர் பேசினார்: “வளர்ந்த நாடுகளில் விவசாயிகளிடையே இருக்கும் கூட்டுறவு போல் வளரும் நாடுகளில் இன்னமும் உருவாகவில்லை.

அப்படியே அங்கு உருவாகி இருந்தாலும், அவை அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இருக்கின்றன” என்றார். உடனே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் எழுந்து, “அப்படியென்றால்
இந்தியாவின் அமுல் நிறுவனத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்” என்று கேட்டார்.

அந்த அறிஞர் ஒரு நிமிடம் நிதானித்தார். பிறகு தொடர்ந்தார், “அமுல் நிறுவனத்துக்கு மட்டும் எனது முந்தைய கருத்தில் இருந்து விலக்கு தருகிறேன். இந்தியாவில் கூட்டு வணிகம் விவசாயிகளிடையே சாத்தியமா என்று பலரும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அதை சாத்தியப்படுத்தியது அமுல். இன்று இந்தியாவின் மாபெரும் அடையாளமாக மாறி,பால் பண்ணை விவசாயிகளின் வெற்றிகரமான கூட்டு வணிகத்துக்கு அடையாளமாகவும் அமுல் இருந்துவருகிறது.

ஆனால், இந்தியாவில் அமுல் போன்ற வணிக கூட்டுறவு நிறுவனங்கள் எத்தனை இருக்கின்றன” என்ற கேள்வியோடு முடித்தார். இந்திய சுதந்திரத்தை ஒட்டிய காலகட்டத்தில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. ஆனால், இன்று பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதன்மையானதாக விளங்குகிறது. இதற்கு அடித்தளமிட்டது அமுல்தான்.

பால் பிரிவில் அமுல் உருவாகி வந்ததுபோல், வேறு தளங்களில் வெற்றிகரமான கூட்டுறவு நிறுவனங்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் உருவாகாமல் போனது பெரும் துரதிருஷ்டம்தான். இன்று இந்திய வேளாண் துறை மிகப்பெரும் மாறுதல்களுக்கு ஊடாக பயணிக்கிறது. 1960-களில் நவீன இயந்திரங்கள், அதிக விளைச்சல் தரும் நவீனரக விதைகள் வேளாண் துறையில் நுழைந்து எப்படி பெரும் புரட்சியை ஏற்படுத்தியதோ, அப்படியான ஒரு தருணத்துக்குத்தான் தற்போது வேளாண் துறை தயாராகிக்கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் ஏனைய துறைகளில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியதுபோல வேளாண் துறையிலும் மாற்றங்களை நிகழ்த்திவருகிறது. இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு விவசாயிகள் புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்வதன் வழியாகவே காலவோட்டத்தோடு சேர்ந்து பயணிக்க முடியும். விவசாயிகள் உதிரிகளாக இல்லாமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது. அமுல் நம் முன் இருக்கும் மிகப் பெரும் உதாரணம். அதைத் தாண்டி சமகாலத்தில் தனிநபர்கள் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு நிறுவனங்கள் நமக்கு சில வழிகளைக் காட்டுகின்றன.

அமெரிக்க உதாரணம்

அமெரிக்காவில் ‘விவசாயிகள் வணிக கூட்டமைப்பு’ (Farmers Business Network)நிறுவனம் விவசாயிகளிடையே பெரும் மாற்றத்தை உண்டாக்கிவருகிறது.

2014-ஆம் ஆண்டு தொழில்நுட்பம் அறிந்த இளம் விவசாயிகள் சிலர் கூட்டாக இணைந்து இந்நிறுவனத்தை ஆரம்பித்தனர். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், பயிர் சாகுபடி தொழில்நுட்பம், விலை முன்னறிவிப்பு, சந்தை வசதி போன்றவற்றை வழங்கவும் அவற்றில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் அவர்கள் முயற்சிகள் எடுத்தனர்.

இதனால், அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இந்தக் கூட்டமைப்பில் இணைந்தனர். தற்பொழுது இக்கூட்டமைப்பில் 33,000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 80 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் இக்கூட்டமைப்பின் கண்காணிப்பில் உள்ளது.

விவசாயிகளின் இடுபொருள் செலவை எப்படிக் குறைப்பது, விவசாயத்தில் தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாள்வது மற்றும் சந்தையில் நல்ல விலைக்கு பொருள்களை விற்கும் முறை போன்றவற்றை இக்கூட்டமைப்பு பிரதான சேவையாக வைத்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண் தொழில்நுட்ப நிபுணர்களை வைத்து விவசாயிகளுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு, தற்போது மக்காச் சோளம் விதைத்தால் இன்னும் மூன்று மாதங்களில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்
பதை தரவுகள் மூலம் ஆராய்ந்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

மேலும், விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை நேரடியாக நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்து அந்தக் கூட்டமைப்பில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பால், அமெரிக்க விவசாயிகளின் வணிகச் செயல்பாடு அடுத்த தளத்ததை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்திய உதாரணம்

தனிநபர்கள் முன்னெடுப்பிலான, விவசாய கூட்டு வணிகத்துக்கு இந்தியாவின் சமீபத்திய உதாரணம் சயாத்திரி ஃபார்ம்ஸ் (Sahyadri Farms) என்று அழைக்கப்படும் சயாத்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். விவசாயிகள் பழம் மற்றும் காய்கறிகளை கூட்டு வணிகமாக மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில், 2010-ம் ஆண்டு விலாஸ் ஷிண்டே, சயாத்திரி ஃபார்ம்ஸை உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக தொடங்கினார்.

ரூ.1 லட்சம் முதலீட்டில் 100 விவசாயிகளுடன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் தற்போது 8,000 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தின் கீழ் 24 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலம் உள்ளது. 42- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் தற்போது ரூ.500 கோடியைத் தாண்டுகிறது. இந்தியாவில் அதிக அளவிலான தக்காளி கொள்முதல் மற்றும் அதிக அளவிலான திராட்சை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் என்கிற சிறப்பையும் சயாத்திரி ஃபார்ம்ஸ் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள், பயிர் சாகுபடி முறை, சந்தை வசதி,பண்ணை இயந்திரங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றித் தருவதுடன், விவசாயிகளின் உற்பத்தியை இடைத்தரகர்கள் இன்றி, மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் நுகர்வோர்களுக்கு நேரடியாக கொண்டும் சேர்க்கிறது. இங்கு கவனிக்கத்தக்க மிகமுக்கியமான அம்சம் என்னவென்றால், இந்நிறுவனம் வணிகச் செயல்பாட்டில் வெளிப்படத்தன்மையை உருவாக்கியுள்ளது.

உதாரணத்துக்கு, நாம் வாங்க விரும்பும் வேளாண்பொருளை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்தால், அது எந்த விவசாயின் தோட்டத்தில் எப்போது அறுவடை செய்யப்பட்டது என்பது முதல் அதற்கு நாம் செலுத்தும் பணத்தில் இருந்து அந்த விவசாயிக்கு எவ்வளவு செல்கிறது என்பது வரை காட்டி விடும். இத்தகைய வெளிப்படத்தன்மைமிக்க கூட்டு வணிகம், விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கச் செய்து, அவர்களது வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துகிறது.

ஒற்றுமையே பலம்

இந்தியாவில் அமுல் போல அரசு முன்னெடுப்பிலான விவசாயிகள் கூட்டுறவு அமைப்பும், சயாத்திரி போல தனிநபர்கள் முன்னெடுப்பிலான கூட்டுறவு அமைப்பும் அதிக எண்ணிக்கையில் உருவாக வேண்டியது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும். மத்திய அரசின் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு குறிப்பிடத்தக்க ஒரு முன்னெடுப்பு ஆகும்.

உழவர் உற்பத்தியாளர் அமைப்பு என்பது, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தாங்களே வணிகம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் கட்டமைப்பு ஆகும். 2022-23-ஆம் ஆண்டுக்குள் பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆரம்பிக்கும் இலக்கோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இது முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன.

ஆனால் சிறப்பாக செயல் படுபவை என்றால் விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அளவிலேயே உள்ளன. எண்ணிக்கையை விடுத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் தரத்தினை மேம்படுத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு தரலாம்.

வளர்ந்த நாடுகளைக்காட்டிலும், இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள் அதிகம். உடனடி வருமானம்தான் அவர்களின் தேவை. அதைக் கருத்தில்கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இத்தகைய சிறிய சீர்திருத்தங்கள் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்.

கூட்டு வணிகக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் அரசுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. ஒற்றுமையே பலம் என்பதை இந்திய விவசாயிகள் உணர வேண்டும். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு வரலாறு காணாத போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அதே ஆற்றல், கூட்டு வணிகத்தை நோக்கித் திரும்பும்போது இந்திய வேளாண் துறை முன்னுதாரணமிக்கதாக மாறும்!

செ.சரத்
saraths1995@gmail.com வேளாண் ஆராய்ச்சியாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in