

மாற்று ஏற்பாட்டை நோக்கி நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக, நிறுவனங்களில் ஊழியர்களின் பணி விலகல் அதிகரித்து இருக்கிறது. இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சமீபத்தில் பிடபிள்யூசி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் 34 சதவீத ஊழியர்கள் அடுத்த ஓராண்டுக்குள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து விலகி வேறு நிறுவனத்துக்கு செல்லும் மனநிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இப்படி ஊழியர்கள் பணியிலிருந்து விலகிச் செல்வது நிறுவனங்களுக்கு பெரும் சவாலானதாக மாறியுள்ளது. ஏனென்றால், ஊழியர்களின் பணிவிலகலால் நிறுவனத்தில் திறன் இழப்பு ஏற்படுகிறது. இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குகின்றன. எனினும், திறன் இழப்பை சமாளிக்க நிரந்தரமான கட்டமைப்பின் தேவையை அவை உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள்.
தற்போது ஐடி நிறுவனங்கள் தங்கள் வேலைகளை நிரந்தர ஊழியர்களை மட்டும் சாராமல், ஃப்ரீலான்ஸர்களை கொண்டும் முடித்து வருகின்றன. ஃப்ரீலான்ஸர் களுக்கென்று தனி கட்டமைப்பை ஐடி நிறுவனங்கள் உருவாக்கிவருகின்றன.டிசிஎஸ் நிறுவனம் இந்த கட்டமைப்பை ‘டேலன்ட் கிளவுட்’ (Talent Cloud) என்று அழைக்கிறது.
விப்ரோ நிறுவனம் ஃப்ரீலான்சர்களுக்கு என்று ‘டாப் கோடர்’ (Topcoder) என்ற தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் 15 லட்சம் ஃப்ரீலான்சர்கள் உள்ளனர். இந்தியாவில் தற்போது ஐடி துறையில் மட்டும் 1.5 கோடி ஃப்ரீலான்ஸர்கள் உள்ளனர். 2025-ல் இந்தியாவில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி 35 கோடிஃப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் முழு நேர ஊழியர் என்ற வகைமையே இருக்காது என்று சொல்கிறார்கள்.