கல்லூரி முடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி… 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி…

கல்லூரி முடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி… 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி…
Updated on
1 min read

கடந்த வாரத்தில், டீம்லீஸ் நிறுவனம் இந்தியாவில் 18 துறைகளில் 865 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயம், கல்லூரி முடித்து வேலைவாய்ப்புச் சூழலுக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. வரும் மாதங்களில், நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் கல்லூரி படிப்பை முடித்த புதியவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பாக, 2022 ஜூலை - டிசம்பர் மாதங்களில் புதியவர்களை வேலைக்கு சேர்ப்பது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில்மூன்று மடங்கு உயரும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சென்ற ஆண்டில் 17 சதவீத நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பில் தாங்கள் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தது.

ஆனால், இவ்வாண்டு 59 சதவீத நிறுவனங்கள் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது.
குறிப்பாக, ஐடி, இ-காமர்ஸ், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கின்றன. இந்தியாவில் 5ஜி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் இணையம், தொலைத்தொடர்பு சார்ந்து அதிக வேலைவாய்ப்புகள் உருவாகிவருகின்றன. பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஐம்பதைத் தாண்டியவர்களுக்கு சிக்கல்

புதியவர்களுக்கு சாதகமாக இருக்கும் தற்போதைய வேலைவாய்ப்புச் சூழல், 50வயதைத் தாண்டியவர்களை கலக்கத்துக்குத் தள்ளி இருக்கிறது. முன்பு நிறுவனங்களில் நீண்ட கால அனுபவமிக்கவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவந்தது. அவர்களுக்கென்று தனி மரியாதை உண்டு.

ஆனால், இப்போது 50 வயதைத் தாண்டினாலே, ஒருவருக்கு வேலை உத்தரவாதமற்றதாக மாறிவிடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களில் 50 வயதைத் தாண்டிய ஊழியர்களின்எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரண்டு காரணங்கள்.

நிறுவனங்கள் தற்போது நீண்ட கால அனுபவத்தைவிடவும், புதிய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன. இளைஞர்களால்தான் தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. இதனால், 50 வயதைத் தாண்டியவர்களுக்கு அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் அதிகம் ஊதியம் வழங்குவதைவிட, நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் இரண்டு புதியவர்களை பணிக்கு எடுக்கின்றன.

சேவைத்துறையில் 2017-ம் ஆண்டு 50 வயதைத் தாண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை 9.37 சதவீதமாக இருந்தது. தற்போது அது 1.29 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் இளம் ஊழியர்களின் எண்ணிக்கை 10.35 சதவீதத்திலிருந்து 35.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறை, மருந்துத் துறை என பல துறைகளிலும் நிலைமை மாறிவருகிறது. தற்போது ஓய்வு பெறும் வயது 60 என்றாலும், 50 வயதுக்கு மேல் வேலையில் தாக்குப்பிடிப்பதே சவாலாக உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in