

பிரபாகரன், நிர்வாக இயக்குநர், சாய் வெல்த் கிரியேட்டர்ஸ்
திட்டமிட்ட முதலீடு எவ்வளவு முக்கியமானது என்பதை நிதி மேலாண்மை ஆலோசகர்கள் திரும்பத் திரும்பப் சொல்லிவருகின்றனர். சம்பாதிப்பது, அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வது, மீதமுள்ளவற்றை செலவு செய்வது.
இந்த வழிமுறை சொல்வதற்கு எளிதானது. ஆனால், நடைமுறைப்படுத்தும்போதுதான் பலரும் திணறுகின்றனர். சரி, பிறகு எப்படித்தான் முதலீட்டை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்துவது? அதற்கான சிறந்த வழிகளில் ஒன்றுதான் ‘முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம்’ (Systematic Investment Plan – SIP)
அப்படியென்றால்?
குறிப்பிட்டத் தொகையை, சந்தை நிலவரத்தைப் பொருட்படுத்தாது ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதுதான் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் ஆகும். அந்த முதலீடு வாரம் அல்லது மாதம் ஒருமுறையானதாக இருக்கலாம்.
அல்லது காலாண்டுக்கு ஒருமுறையாகக்கூட இருக்கலாம். அதிக லாபம் சம்பாதிக்கும் பேராசை அல்லது இழப்பைச் சந்தித்துவிடுவோம் என்ற பயம் இவற்றின் தாக்கம் இல்லாமல், தொடர்ந்து முதலீடு செய்ய முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் உதவுகிறது.
ஐசிஐசிஐ புருடென்சியல் ஃப்ரீடம் சிப்
நீங்கள் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின்கீழ் முதலீடு செய்ய விருப்பம் என்றால், மாதாந்திர முதலீட்டிலிருந்து தொடங்கலாம். 8, 10, 12, 15, 20, 25, 30 ஆண்டுகள் என வெவ்வேறு கால அளவுகளை ஐசிஐசிஐ வழங்குகிறது.நீங்கள் உங்கள் வசதிக்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் முதலீட்டு கால அளவு முடிந்த பிறகு, நீங்கள் விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், உங்கள் முதலீட்டுத் தொகை மற்றொரு திட்டத்துக்கு மாற்றப்படும். இது இலக்குத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இலக்குத் திட்டத்திலிருந்து உங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு தொகையை மாதாமாதம் உங்களது சேமிப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஐசிஐசிஐ-யின் ஃப்ரீடம் சிப் திட்டத்தின் கீழ், நீங்கள் ஒன்று முதல் மூன்று மடங்கு வரையில் வருவாய் பெற முடியும். உதாரணத்துக்கு நீங்கள் 12 ஆண்டுகால திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், முதலீட்டுக்காலம் முடிந்த பிறகு மாதாமாதம் ரூ.20,000 (2*10,000) உங்கள் சேமிப்பிலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, சந்தைப் போக்கைப் பற்றி கவலைகொள்ளாமல், முறைப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டம் வழியே உங்கள் முதலீட்டைத் தொடங்கலாம்.