இந்தியா 75: இந்திய சில்லரை வணிகம்

இந்தியா 75: இந்திய சில்லரை வணிகம்
Updated on
3 min read

இன்றைக்கு சில்லரை வணிகத்தில் இருக்கும் போட்டியில் கடுகளவுகூட நம் நாடு சுதந்திரமடைந்த சமயத்தில் இருந்ததில்லை. இந்திய சில்லரை வணிகத்தின் மதிப்பு இன்றைக்கு ரூ.72 லட்சம் கோடியாகும். இந்தத் துறையில் ‘அண்ணாச்சிக் கடைகள்’, ‘கிராணா' (kirana), ‘மாம் & பாப்' (mom & pop) என பல பெயர்களில் அழைக்கப்படும் பாரம்பரியமான பலசரக்குக் கடைகளும், மாடர்ன் ரீடெயில் என அறியப்படுகிற சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விற்பனை செய்யும் ஆன்லைன் கடைகளும் அடங்கும்.

சில்லரை வணிகத்தில் 80 சதவீத விற்பனை பலசரக்குக் கடைகள் மூலமும், 15 சதவீதம் சூப்பர் மார்க்கெட்டுகள் மூலமும் மீதமுள்ள 5 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் ஆன்லைன் மூலமான வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது.

சங்கிலித்தொடர் கடைகள்

சுதந்திரத்துக்கு முன்பு, இந்தியாவில் சில்லரை வணிகத்தை சிறிய பலசரக்குக் கடைகள்தான் ஆக்கிரமித்திருந்தன. ஆங்கிலேய வணிகர்கள் சிலர் சேர்ந்து ஸ்பென்சர்ஸ், ஆர்மி & நேவி ஸ்டோர்ஸ் போன்றவற்றை ஆரம்பித்து அன்றாடத் தேவைக்கான பொருள்களை விற்பனை செய்துவந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைத்ததையொட்டி சங்கிலித்தொடர் கடைகள் (chain stores) ஆரம்பிக்கப்படலாயின. அதாவது ஒரு நிறுவனம் ஒரே பெயரில் பல இடங்களில் திறக்கும் கடைகள் சங்கிலித்தொடர் கடைகள் என்று அழைக்கப்படுகின்றன.

1948-ல் அன்றைய பம்பாயில் ‘அப்னா பஜார்’ என்ற பெயரில் தொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கிலித்தொடர் கடைகளை தாதாசாகேப் சர்ஃபாரே திறந்தார். 1966 - ல் புதுடெல்லியில் மத்திய அரசு சார்பாக ‘சூப்பர் பஜார்’ என்ற பெயரில் சங்கிலித் தொடர் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் கர்நாடக அரசாங்கத்தால் ‘ஜனதா பஜாரும்’, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால் (என்டிடிபி) ‘சஃபல்’ (safal) கடைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

உதயமாகின வணிக வளாகங்கள்

இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக, 1985-ல் சிங்கப்பூரைச் சேர்ந்த சில வணிகர்களால் சென்னையில் ‘ஸ்பென்சர் பிளாசா’ வணிக வளாகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு டில்லியில் ‘அன்சால் பிளாசா’, மும்பையில் ‘கிராஸ்ரோட்ஸ்’ என பல வணிக வளாகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்குப் பிறகு மாடர்ன் ரீடெயில் என அழைக்கப்படும் நவீனமயமான கடைகளான ஸ்டாப்பர்ஸ் ஸ்டாப், பாண்டலூன், வெஸ்ட்சைட் போன்ற ஆடை மற்றும் வாழ்வியல் சம்பந்தமான பொருள்களை விற்கும் கடைகளும் காளான்கள் போல பெருக ஆரம்பித்தன. இசை சம்பந்தமான பொருள்களை விற்க ‘பிளாண்ட்-எம்’, புத்தகங்கள் விற்பனை செய்ய ‘கிராஸ்வேர்ட்’ ஆகிய சங்கிலித்தொடர் கடைகளும் திறக்கப்பட, இந்தியாவில் சில்லரை வணிகத் துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன.

சுபிக்‌ஷாவும் பிக் பஜாரும்

1990-களின் பிற்பகுதியில் சென்னையில் ‘சுபிக்‌ஷா’ என்ற பெயரில், அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை விற்பனை செய்வதற்கென்று சங்கிலித்தொடர் கடைகள் திறக்கப்பட்டன. வெகுவிரைவிலேயே சென்னை தவிர்த்து இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் சுபிக்‌ஷா கால் பதிக்க ஆரம்பித்தது. மாடர்ன் ரீடெயில் துறையின் பிதாமகனாக இருந்தவர் ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன். ஆனால் நிதி மேலாண்மையில் ஏற்பட்டக் குளறுபடிகளால் சுபிக்‌ஷா 2009 -ம் ஆண்டு அதனுடைய 1600 கடைகளை மூடும்படி ஆனது.

2001 -ம் ஆண்டு கிஷோர் பியானி ‘பிக்பஜார்’ என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டுகளை ஆரம்பித்தார். அது சில்லரை வணிகத் துறையில் தனக்கென்று முத்திரை பதிக்க ஆரம்பித்தது.பிக் பஜாரைத் தொடர்ந்து வணிக வளாகங்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும் பல்கி பெருக ஆரம்பித்தன. வணிக வளாகங்களில் பொழுதுபோக்குக்கு என்று திரையரங்குகளும், சாப்பாட்டுக் கூடங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இவையெல்லாம் ஷாப்பிங் செய்யும் நுகர்வோர்களுக்கு புது அனுபவமாக இருந்தது.

சில்லரை வணிகத் துறையில் இருக்கும் வாய்ப்புகளை நன்கு அறிந்து கொண்ட பிரபல குழுமங்களான ஆதித்ய பிர்லா (மோர்),
ரிலையன்ஸ், ஆர்பிஜி கோயங்கா (ஸ்பென்சர்ஸ்) ஆகியவையும் களத்தில் இறங்கின. மாடர்ன் ரீடெயிலுக்கு சுப்பிரமணியன் பிள்ளையார் சுழி போட்டாலும் கிஷோர் பியானிதான் ‘ரீடெயில் கிங் ஆஃப் இண்டியா’ என அறியப்படுகிறார்.

ஆனால், அவராலும் கால ஓட்டத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பிக் பஜார் உட்பட அவரது சில்லரை வணிகத்தை உள்ளடக்கிய ஃப்யூச்சர் குழுமம் திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. விளைவாக, தற்போது பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டுகள் ரிலையன்ஸ் வசம் செல்லத் தொடங்கியுள்ளன.

இ-காமர்ஸின் முன்னோடி

இப்படி வணிக வளாகங்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும் பெருகி வந்த நிலையில் இ-டெயில் என அறியப்படும் ஆன்லைன் வர்த்தகமும் தனது முத்திரையைப் பதிக்க ஆரம்பித்தது.

1999 -ம் ஆண்டே கே. வைத்தீஸ்வரன் ‘ஃபேப்மார்ட்.காம்’ என்ற பெயரில் ஆன்லைன் ரீடெயிலை ஆரம்பித்தார். பிற்பாடு இது ‘இண்டியாபிளாசா.காம்’ என்று பெயர் மாற்றம் கண்டது. ஆனால், காலத்தின் தேவைக்கு முன்பாக ஆரம்பித்ததால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

எனினும், இந்தியாவில் இ-கமார்ஸின் தந்தை என்றே கே.வைத்தீஸ்வரன் அறியப்படுகிறார். அவர் ஃபேப்மால் என்ற பெயரில் ஆரம்பித்த சங்கிலித்தொடர் கடைகளைத்தான் ஆதித்ய பிர்லா குழுமம் வாங்கி ‘மோர்’ என்று பெயர்மாற்றம் செய்தது.

பிறந்தது ஃபிளிப்கார்ட்

2007-ல் அமேசானில் வேலை பார்த்து வந்த பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் அதிலிருந்துவிலகி ஆன்லைன் தளமாக ‘ஃபிளிப்கார்ட்’டை ஆரம்பித்தனர்.

அதைத்தொடர்ந்து மிந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற ஆன்லைன் தளங்கள் நுகர்வோர்களின் தீராப்பசிக்கு தீனி போட ஆரம்பித்தன. ஆன்லைன் மூலம் புத்தகங்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஃபிளிப்கார்ட்’, இன்றைக்கு இத்தளத்தில் கிடைக்காத பொருள்களே இல்லை என்ற அளவுக்கு தன்னை விரிவாக்கியிருக்கிறது.

இணைய பயன்பாடு அதிகரித்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் நுகர்வோர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.
2018-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ‘வால்மார்ட்’ நிறுவனம் ‘ஃபிளிப்கார்ட்’டை வாங்கி இந்தியாவில் தன்னுடைய இருப்பை வலுவாக்கிக் கொண்டது.

அதுபோல் மற்றொரு அமெரிக்க நிறுவனமான ‘அமேசான்’, சங்கிலித்தொடர் கடைகளான ‘மோர்’ கடைகளை நடத்தி வரும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் பங்குகளை வாங்கி இந்தியாவில் தன்னுடைய பலப்படுத்திக் கொண்டது.

இது தவிர்த்து, ரிலையன்ஸ் ரீடெயில் தனது சங்கிலித்தொடர் கடைகளோடு ஆன்லைன் வணிகத் தளமாக ‘ஜியோ மார்ட்’டை ஆரம்பித்து, இந்திய மற்றும் வெளிநாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாளராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஹோம் டெலிவரி

மாடர்ன் ரீடெயிலும், ஆன்லைன் வர்த்தகமும் கரோனாவுக்குப் பிறகுபெரும் வளர்ச்சி அடைந்து வருகிற நிலையில், இந்தப் போட்டிச் சூழலில் தாக்குப்பிடிக்க பாரம்பரியமான பலசரக்குக் கடைகளும் ‘ஹோம் டெலிவரி’ சேவையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதில் சுவராசியம் என்னவெனில், ஆன்லைன் வர்த்தகத் தளங்களும் தங்களின் விநியோக மேம்பாட்டுக்காக பலசரக்குக் கடைகளுடன் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

இந்த மாதிரியான ஒரு கூட்டுறவு பல ‘ஹைப்பர்லோக்கல்’ சில்லரை வர்த்தகர்கள் உருவாக வழிவகுத்திருக்கிறது. இதில் டன்சோ, சுவிக்கி, சொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சில்லரை வணிகத்தின் எதிர்காலம் மத்திய அரசு சில்லரை வணிகத் துறையில் லட்சக்கணக்கான சிறிய உள்ளூர் கடைகளையும் நுகர்வோர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ‘ஓஎன்டிசி’ (Open Network
for Digital Commerce) கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ‘அமேசான்’, ‘ஃபிளிப்கார்ட்’ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். அந்தவகையில் இனி இந்திய சில்லரை வணிகத் துறை என்பது பலசரக்குக் கடைகளும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஆன்லைன் வர்த்தகமும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதாக இருக்கும்.

சித்தார்த்தன் சுந்தரம்
sidvigh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in