பங்குச் சந்தை நாயகன்

பங்குச் சந்தை நாயகன்
Updated on
2 min read

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்பட்டுவந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த ஆகஸ்ட் 14 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை அடுத்து, பிரதமர் மோடி தொடங்கி, புதிதாக பங்குச் சந்தையில் முதலீட்டில் நுழைந்துள்ள இளைய தலைமுறையினர் வரையில் அவரது பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தனர்.

ஏன்? அவர் ரூ.46 ஆயிரம் கோடி சொத்துமதிப்பைக் கொண்ட இந்திய பில்லியனர் என்ற காரணத்தினாலா? நிச்சயமாக இல்லை. இவ்வளவு சொத்தையும் அவர் பங்குச் சந்தை முதலீடு வழியாகவே உருவாக்கினார் என்பதனால்தான் அவர் பேசப்படலானர்.

1985-ல் ரூ.5,000-த்தைக் கொண்டு பங்குச் சந்தை முதலீட்டை தொடங்கினார் ஜுன்ஜுன்வாலா. இன்று அவரது பங்குகளின் மதிப்பு ரூ.32,000 கோடி. இந்த வளர்ச்சி, இந்த மாயாஜாலம்தான் அவரை பங்குச் சந்தை உலகில் நாயகனாக நிலைநிறுத்தியது...

1. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 1960-ல் ஹைதரா பாத்தில் பிறந்தார். ஆனால், வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். அவரது தந்தை வருமான வரித்துறை ஆணையராக இருந்தார். தந்தை அவரது நண்பர்களுடன் பங்குச் சந்தை குறித்து காரசாரமாக பேசக் கூடியவர். இந்தப் பேச்சுகள் வழியாகத்தான் சிறுவயதிலே ஜுன்ஜுன் வாலாவுக்கு பங்குச் சந்தை குறித்து அறிமுகம் கிடைத்தது. பங்குச் சந்தையின் புரியாத சூத்திரங்கள் அவரை வசீகரித்தன. தொடர்ந்து அதுகுறித்த தேடலில் ஈடுபடலானார்.

2. மகனின் ஆர்வத்தைக் கண்ட தந்தை, மகனுக்கு பங்கு சந்தை முதலீடு குறித்து கற்றுத்தர ஆரம்பித்தார். ஆனால், சில கட்டுப்பாடு
களை விதித்தார்: “பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒருபோதும் வீட்டில் பணம் கேட்கக் கூடாது. நண்பர்களிடமும் கடன் வாங்கக் கூடாது.” இதனால், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அவரது செலவுக்கு வீட்டில் தரும் பணத்தை சேமிக்க ஆரம்பித்தார். ஆனால், அது போதவில்லை.

உடனே, சகோதரரின் நண்பர்களிடம் சென்று, “நீங்கள் எனக்கு பணம் தாருங்கள். நான் அதிக லாபத்துடன் அதை உங்களுக்குத் திருப்பித் தருகிறேன்” என்று பேசினார். இப்படியாகத்தான் ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தை முதலீட்டில் நுழைந்தார்.

3. பங்குச் சந்தையில் அவர் பெற்ற முதல் லாபம் டாடா நிறுவனம் மூலம்தான். 1986-ல் டாடா டீ நிறுவனத்தின் 5,000 பங்குகளை ரூ.43 மதிப்பில் வாங்கினார். பிறகு அந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.143 ஆக உயர்ந்தது. மூன்று மடங்கு லாபம். இது அவரை பங்குச் சந்தையை நோக்கி மேலும் உந்தித் தள்ளியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தை மூலம் அவர் ரூ.25 லட்சம் வரையில் லாபம் ஈட்டினார்.

4. ஜுன்ஜுன்வாலா கல்லூரியில் பட்டயக் கணக்கராக பயிற்சி பெற்றிருந்தார். இதனால், நிதி நிர்வாகம் சார்ந்து அவருக்கு கூடுதல் புரிதல் இருந்தது. இது அவருக்கு பங்குச் சந்தை முதலீட்டில் கை கொடுத்தது.

5. பங்கின் போக்கு எப்படி இருக்கும் என்பதை அதன் ஆரம்பநிலையிலே கணிக்கும் திறன் அவரிடமிருந்தது. அடிப்படையில் அவர் தன் உள்ளுணர்வை நம்பக்கூடியவர். மிகுந்த நினைவாற்றல் உடையவர். பங்குச் சந்தையில் ஏற்படும் சரிவு குறித்து கவலைப்படாதவர். அவர் பங்குச் சந்தை முதலீட்டை ஒரு கலையாக அணுகினார்.

6. ஜுன்ஜுன்வாலா மிக வெளிப்படையாக தன்னுடைய முதலீட்டை அறிவிப்பவர். எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு பங்கு வாங்கினார், ஏன் வாங்கினார் உட்பட அனைத்து விவரங்களை பொதுவெளியில் முன்வைப்பவர்.

7. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரது மனைவி ரேகாவும் சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளர்தான். இருவருக்கும் 1987-ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து முதலீடுகள் மேற்கொள்ளத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் முதலீட்டுக்கென்று தனியே நிறுவனம் ஆரம்பித்தனர்.

நிறுவனத்தின் பெயர் ரேர் என்டர்பிரைசஸ் (Rare Enterprises). Rakesh என்பதிலிருந்து முதல் இரண்டு எழுத்துகளையும் (Ra), Rekha என்பதிலிருந்து முதல் இரண்டு எழுத்துகளையும் (Re) இணைத்து நிறுவனத்துகு Rare என்று பெயரிட்டனர்.

8. டி-மார்ட் நிறுவனரும் பங்குச் சந்தை முதலீட்டில் முன்னோடியுமான ராதாகிஷான் தமனியை ஜுன்ஜுன்வாலா தனது பங்குச் சந்தைக் குருவாக கொண்டிருந்தார். ஆனால், ராதாகிஷான் தமனி உலக பில்லியனர்களில் பட்டியலில் இணைவதற்கு முன்பே, ஜுன்ஜுன்வாலா அந்தப் பட்டியலில் (2008) இடம் பிடித்தார். 2017-ல்தான் ராதாகிஷான் உலக பில்லியனர்கள் பட்டியலில் இணைந்தார்.

9. ஜுன்ஜுன்வாலாவுக்கு பாலிவுட் திரைப்படங்கள் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இங்க்லீஷ் விங்க்லீஷ், ஷமிதாப் (shamitabh), கி & கா (Ki & Ka) ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அவர்தான்.

10. நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் பெரும் முதலீடுகளைக் கொண்டிருந்தார். உச்சபட்சமான முதலீடு டாடா நிறுவனத்தில்தான். டைட்டன் (ரூ.11,083 கோடி), ஸ்டார் ஹெல்த் (ரூ.7,014 கோடி), மெட்ரோ பிராண்ட்ஸ் (ரூ.2,232 கோடி), டாடா மோட்டார்ஸ் (ரூ.1,857 கோடி), ஃபெடரல் பேங்க் (ரூ.848 கோடி), கிரைஸில் (ரூ.900 கோடி), இண்டியன் ஹோட்டல்ஸ் (ரூ.819 கோடி), கரூர் வைசியா வங்கி (ரூ.230 கோடி) ஆகிய நிறுவனங்களில் அவரது பங்கு கணிசமானது.

11. ஆரம்ப முதலே முதலீடு தொடர்பாக துணிச்சலான முடிவுகளை எடுப்பவராக அவர் இருந்தார். அது அவரது இறுதிக் காலம் வரையில் தொடர்ந்தது. கரோனாவால் விமானத் துறை பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையிலும், அவர் கடந்த ஆண்டு, புதிதாக தொடங்கப்பட இருந்த ‘ஆகாஸா ஏர்’ நிறுவனத்தில் ரூ.260 கோடி முதலீடு செய்து 40 சதவீத பங்குகளைப் பெற்றார். சில நாட்களுக்கு முன்புதான் அந்நிறுவனத்தின் விமான சேவை தொடங்கியது.

12. ‘ஒரு நிறுவனம் அதன் தகுதிக்கு மீறி அதிக மதிப்பைப் பெறும்பட்சத்தில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.’ இதுதான் பங்குச் சந்தை முதலீடு சார்ந்து அவர் கொண்டிருந்தத் தத்துவம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in