

இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் முழுநேர ஊழியராக இருக்கும் ஒருவர், மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்ய முடியாது. அப்படி வேலை செய்வது விதிமீறலாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ஸ்விக்கியில் 5,000 முழு நேர ஊழியர்கள் உள்ளனர். (உணவு டெலிவரி செய்யும் நபர்கள் இந்த ஊழியர்களின் பட்டியலில் வருவதில்லை. அவர்கள் ஃப்ரீலான்ஸர்கள்.
ஸ்விக்கியில் ஃப்ரீலான்சர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டுகிறது.) இனி தங்கள் முழு நேர ஊழியர்கள் அலுவலக நேரம்போக மீத நேரங்களில் வெளிநிறுவனங்களில் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று ஸ்விக்கி அறிவித்துள்ளது. இது மூன் லைட்டிங் பாலிசி (moonlighting policy) என்று அழைக்கப்படுகிறது.
வேலைசார் கட்டமைப்பில் இது மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. கரோனாவுக்கு பிறகு உலக அளவில் வேலைசார் கட்டமைப்பு மாறி வருகிறது. ஊழியர்கள் சம்பளத்தைவிடவும் நெகிழ்வுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, வீட்டிலிருந்து பணிபுரிதல் உள்ளிட்ட வசதியை எதிர்பார்க்கின்றனர். நெகிழ்வுத் தன்மை இல்லாத நிறுவனங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வெளியேறுகின்றனர். கரோனாவுக்குப் பிறகு ஊழியர்களின் பணிவிலகல் ஒரு போக்காவே மாறியுள்ளது.
இந்தச் சூழலில், ஊதிய உயர்வில் தொடங்கி வீட்டிலிருந்து பணிபுரிதல் வரையில் ஊழியர்கள் விரும்பும் வசதிகளை வழங்கி, அவர்களை தக்க வைக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஏற்கனவே, ஸ்விக்கி அதன் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று அறிவித்திருந்தது.
இப்போது ஒருபடி மேலே சென்று, தங்கள் ஊழியர்கள், அலுவலக நேரம் போக, மீத நேரங்களில் வெளிநிறுவனங்களில் வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. தொழில்
ரீதியாக ஸ்விக்கிக்கு போட்டியாக இருக்கும் நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடாது. அதேபோல், ஸ்விக்கியில் வேலை செய்யும் நேரத்தில் பிற வேலைகளைப் பார்க்கக் கூடாது.
இந்த முடிவு குறித்து ஸ்விக்கி நிறுவனம் இப்படி தெரிவித்துள்ளது: “இனி எங்கள் ஊழியர்கள் அவர்களுக்கு விருப்பமான விஷயங்களில் கவனம் செலுத்தி கூடுதலாக வருவாய் ஈட்டிக் கொள்ளலாம். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்யும் போது அவர்களின் தொழில்திறன் மேம்படவே செய்யும்.
இனி இதுதான் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது.” குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கும், தங்கள் ஓய்வு நேரங்
களில் விரும்பிய வேலையில் ஈடுபட்டு அதன் மூலம் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கும் இந்த அறிவிப்பு மிகப் பெரும் வாய்ப்பாகும். ஸ்விக்கியைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்தப் பாதைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.