

பண்டைய காலத்திலிருந்தே அரசர்கள் கடல் வழியாக வாணிபம் நடத்தி வந்துள்ளனர். இதில் துறைமுகங்கள் முக்கிய பங்கை வகித்து வந்துள்ளன. அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கடல்வழியாக சரக்கு போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றது. ஆனால் சுதந்திரத்துக்கு பிறகு துறைமுகங்களும் சரக்கு போக்குவரத்தும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. மொத்தம் இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளாக துறைமுக மேம்பாட்டிற்கும் சரக்கு போக்குவரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடல்வழி சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. விழிஞ்சம், இனையம் போன்ற இடங்களில் புதிதாக துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் துறைமுகங்கள் உருவாகி வருகின்றன. துறைமுகங்கள் பற்றியும் சரக்கு போக்குவரத்து பற்றியும் சில தகவல்கள்….
2014-15-ம் ஆண்டு நிலவரப்படி 12 பெரிய துறைமுகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் 1500 கோடி ரூபாய். இதை அடுத்த இரண்டு வருடங்களில் 2500 கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
16 - கடல்வழி போக்குவரத்தில் இந்தியாவின் இடம்
12 - இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை
48 - மஹாராஷ்டிராவில் உள்ள சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை
42 - குஜராத்தில் உள்ள சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை
200 - இந்தியாவில் உள்ள சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை
7516 - இந்திய கடற்கரையின் நீளம் (கிலோ மீட்டர்)
1052 - இந்திய துறைமுகங்கள் கையாளக்கூடிய சரக்குகளின் திறன் (மில்லியன் டன்)
இந்தியாவில் கோவாவில் உள்ள மொருமுகோ துறைமுகத்தில் இருந்துதான் அதிகமான இரும்பு தாதுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சில முக்கிய நிறுவனங்கள்
குஜராத் பிபாவாவ்
கிரேட் ஈஸ்டர்ன்
பிபாவாவ் டிபென்ஸ்
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
எஸ்ஸார் ஷிப்பிங்
அதானி போர்ட்ஸ்
சர்வதேச அளவில் அதிக பயணிகள் வந்து செல்லக்கூடிய துறைமுகங்கள்...
மியாமி துறைமுகம், அமெரிக்கா
பைரையூஸ் துறைமுகம், கிரீஸ்
டோவர் துறைமுகம், இங்கிலாந்து
ஹெல்சிங்கி துறைமுகம், நெதர்லாந்து
கலாசிஸ் துறைமுகம், பிரான்ஸ்
குளச்சல் துறைமுகம்
தமிழ்நாட்டில் குளச்சல் அருகில் இனையத்தில் நான்காவதாக ஒரு துறைமுகத்தை அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்துறைமுகம் அமைப்பதற்கு முதல்கட்டமாக 25 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டுள்ளது.
சாகர்மாலா திட்டம்
சாகர்மாலா திட்டமானது துறைமுக மேம்பாட்டுதிட்டம். தொலை நோக்கு அடிப்படையில் துறைமுகங்களை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்துக்கு துறைமுகம் பெரும் உதவியாக இருக்கும். துறைமுக மேம்பாடு மட்டுமின்றி துறைமுகத்தோடு இணைந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்), ரயில் இணைப்பு, விமான போக்குவரத்து வசதி, நீர் வழி இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டும். இதுவே சாகர்மாலா திட்டமாகும். இதில் குளிர் பதன கிடங்கு மற்றும் பொருள் சேமிக்கும் கிடங்குகளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதும் அடங்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 பெரிய துறைமுகங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்