Published : 15 Aug 2022 10:09 AM
Last Updated : 15 Aug 2022 10:09 AM

நேரு முதல் மோடி வரை: இந்தியாவின் 75 ஆண்டு பொருளாதாரப் பயணம்!

‘இனி இந்த நாடு எப்படி பிழைத்திருக்கப் போகிறது?’ இந்தியா சுதந்திரமடைந்த சமயத்தில் இந்தக் கேள்விதான் உலக நாடுகளின் மத்தியில் இருந்தது. தொழில், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு என நாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை முதலிலிருந்து உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது.

ஆனால், அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொருளாதார மூலதனமும் சமூக மூலதனமும் இந்தியாவிடம் இல்லை. நாட்டு மக்களில் 88 சதவீதத்தினர் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தனர். அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் ரூ.1,029 கோடிதான் இருந்தது. அனைத்துக்கும் மேலாக, மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்திசெய்யும் நிலையில்கூட இந்தியா இல்லை. வெளிநாடுகளிலிருந்துதான் உதவி பெற்றுவந்தது.

இன்று இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. உலகின் மிகப் பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.45.35 லட்சம் கோடியாக உள்ளது.

உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாக மட்டுமல்ல, அதன் ஏற்றுமதியிலும் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. இனி பிழைத்திருக்குமா என்ற சந்தேகிக்கப்பட்ட ஒரு நாடு, எப்படி 75 ஆண்டுகளில் உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக தன்னை வளர்த்துக்கொண்டது?

சோசலிசக் கனவு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேருவின் முன் இருந்த மிகப் பெரிய சவால், நாட்டு மக்களின் உணவுத் தேவையைபூர்த்தி செய்வதுதான். வேளாண் துறையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு 1951-ம் ஆண்டு அவர் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். நேரு எதிர்பார்த்த வளர்ச்சியை முதல் ஐந்தாண்டு திட்டம் தந்தது.

ஆனால், பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால், வேளாண் துறையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. தொழில் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் அடிப்படையான தொழில் கட்டமைப்பை உருவாக்குவதை இலக்காகக்கொண்டு இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப்பட்டது. சோசலிச அடிப்படையிலான நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை நேரு கொண்டிருந்தார்.

அதன் பகுதியாகவே உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், மின்தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படலாயின. அணைக்கட்டுகள், நீர்மின் நிலையங்கள், எஃகு ஆலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஐஐடிகள் தொடங்கப்பட்டன. இப்படியாக இந்தியாவின் தொழிற்துறையின் வளர்ச்சிக்கான அடித்தளம் நேருவின் காலகட்டத்தில் போடப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி சார்ந்து மட்டுமல்ல, காந்தியின் வழியில், கிராமப்புற மேம்பாட்டுக்கும் நேரு முக்கியத்துவம் அளித்தார்.

நேருவின் காலத்தில் இந்தியா தொடர்ச்சியாக பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. 1962-ல் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா – சீனா இடையே போர் மூண்டது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை பெரும் சீர்குலைவுக்கு உள்ளாக்கியது.

தனது இறுதி மூச்சு வரையிலும், இந்தியாவை முன்னெடுத்து செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நேரு மேற்கொண்டார். இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து தற்காத்து, அடிப்படையான கட்டமைப்புகளை உருவாக்கி பிற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட நேரு, 1964-ல் காலமானார்.

போரும் பஞ்சமும் கூடவே ஒரு புரட்சியும்

நேருவின் மறைவை அடுத்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக நியமிக்கப்பட்டார். 1964 -1966 வரையில் இரண்டு ஆண்டுகள்தான் அவர் பதவியில் இருந்தார். ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இரு பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஒன்று, கடும் உணவுப் பஞ்சம். மற்றொன்று, போர்.

எந்த அளவுக்கு அப்போது உணவுப் பஞ்சம் நிலவியது என்றால், பொருளாதார வாய்ப்புள்ள மக்கள் வாரம் ஒரு நாள் தங்கள் ஒருவேளை உணவை தியாகம் செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்து, அதை முதலில் தன் வீட்டிலிருந்துத் தொடங்கினார். பல உணவகங்கள் வாரத்தில் ஒரு நாள் மாலைவேளையில் உணவகத்தை மூடின.

1965-ல் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டது. ஏற்கனவே சீனாவுடனான போரினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு போர். பொருளாதாரரீதியாக நாடு மிகப் பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது.

அதேசமயம், லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சி காலத்தில் வேளாண் துறையில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிக விளைச்சல் தரக்கூடிய நவீனரக விதைகள், வேளாண் இயந்திரங்கள் இந்திய வேளாண் துறையில் அறிமுகமாக ஆரம்பித்தன.

லால் பகதூர் சாஸ்திரி இந்த மாற்றத்தை ஊக்குவித்தார். பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோதுமை உற்பத்தி மிகப் பெரும் அளவில் அதிகரித்தது. இந்தியாவில் பசுமை புரட்சி தொடங்கியது. பால் துறையில் ஏற்பட்ட வெண்மை புரட்சிக்கும் லால் பகதூர் சாஸ்திரிதான் தூண்டுகோலாக இருந்தார்.

இருவேறு இந்திரா காந்தி

அடுத்தடுத்து இரண்டு போர்கள். கூடுவே, கடும் பஞ்சம். இந்த சமயத்தில் (1966), பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி,பொருளாதாரரீதியாக அதிரடி அறிவுப்புகளை வெளியிட்டார். இந்தியா ஏற்றுமதியில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் ஏற்றுமதியை அதிகப்படுத்த, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை 57% குறைத்தார். ரூ.4.76 ஆக இருந்தடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த நடவடிக்கைக்குப் பிறகு ரூ.7.50 ஆக வீழ்ந்தது.

அந்நிய செலாவணி குறைந்துவிடும் என்ற ஆபத்துக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார். வேளாண் துறைக்கு கடன் வழங்கலை அதிகரிக்கும் நோக்கில் 1969-ம் ஆண்டு 14 தனியார் வங்கிகளை அவர் நாட்டுடமை ஆக்கினார். வங்கிகளை நாட்டுடமை ஆக்கியதானது, இந்திரா காந்தி அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.

1970-க்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை மாறத் தொடங்கியது. பசுமை புரட்சி இந்தியாவில் உச்சம் தொட்டதால், தானிய உற்பத்தி அதிகரித்தது. இதனால் உணவு தட்டுப்பாடு நெருக்கடியிலிருந்து இந்தியா மீளத் தொடங்கியது. தானிய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்பட்டன.

இதனால், மற்ற யங்களில், அதாவது வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏழ்மை ஒழிப்பு, தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு உருவானது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டை இந்திரா காந்தி தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.

அவசரநிலை பிரகடனத்தால் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடையவும், அடுத்த பிரதமராக பதவியேற்றார் மொராஜி தேசாய். 2016-ல் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னோடி மொராஜி தேசாய்தான். அவரது ஆட்சிக் காலத்தில் ரூ.1,000, ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை செல்லாததாக்கினார்.

அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், அந்நிய நிறுவனங்கள் சார்ந்து கொண்டுவந்த கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்க நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் ஐபிஎம் இந்தியாவிலிருந்து வெளியேறின.

1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா காந்தி. ட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவர் இருந்தார். முந்தைய ஆட்சிக்காலங்களில் சோசலிச அடிப்படையிலான கொள்கைகளை அறிவித்த அவர், இம்முறை தாராளமயக் கொள்கையை நோக்கி நகர்ந்தார்.

தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளைத்தளர்த்தினார்; இறக்குமதி வரிகளைக் குறைத்தார். நேருவின் சோசலிச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு இந்தியா தாராளமய பொருளாதார கட்டமைப்பை நோக்கி நகரத் தொடங்கியது.

சோசலிசத்துக்கு விடைகொடுத்தது இந்தியா

1984-ல் இந்திரா காந்தியின் மறைவை அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற, அவரது மகன் ராஜீவ் காந்தி, தாராளமயத்தை நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தினார். இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தில் முக்கியமான சில முன்னெடுப்புகளை மேற்கொண்டவர் ராஜீவ் காந்தி. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறை கட்டமைப்புக்கு அவர்தான் அடித்தளமிட்டார்.

நூற்றாண்டு முடியும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், உலக அளவில் பொருளாதாரப் போக்குகள் மாறிக் கொண்டிருந்தன. அந்தப் போக்குடன் இந்தியாவை இணைக்கும் முயற்சியை ராஜீவ் காந்தி மேற்கொண்டார். உற்பத்தியையும், முதலீட்டையும் பெருக்குவதற்கு சாத்தியமிக்க அனைத்து வழிகளையும் அவர் திறந்தார். அப்போது வி.பி. சிங் நிதித்துறை அமைச்சராக இருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்தியா நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

அதன் காரணமாக இந்தியா மாபெரும் சந்தையாக உருவெடுக்கலானது. உள்நாட்டில் வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ராஜீவ் காந்தியோடு சோசலிச பொருளாதாரக் கொள்கைக்கு இந்தியா முற்றிலுமாக விடைகொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்பு இந்தியாவில் நிகழ்ந்தது. 1989-ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவி ஏற்ற வி.பி.சிங், மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினார். பின்தங்கிய சமூகத்தினர் கல்விரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் முன்னேறி வருவதற்கு அது வழிவகுத்தது.

புதிய இந்தியா பிறந்தது

பொருளாதாரக் கட்டமைப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே புதிய பரிணாமத்துக்கு உள்ளான காலகட்டம் 1991. வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது. தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி போலான ஒன்று. வெறும் 1.2 பில்லியன் டாலர்தான் அந்நிய செலவாணி இருப்பாக இந்தியாவிடம் இருந்தது.

இந்தத் தொகையை வைத்துக்கொண்டு மூன்று வாரங்களுக்கான இறக்குமதியை மட்டுமே சமாளிக்க முடியும். இந்நிலையில் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடன் பெறுவதற்கு பொருளாதாரக் கொள்கையில் மிகப் பெரும் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

அதன் பகுதியாகவே இந்தியா பொருளாதார சீர்திருத்தத்துக்குத் தயாரானது. அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், நிதி அமைச்சர் மன்மோகன் சிங்கை அழைத்து இந்தியாவை மீட்டெடுக்கும் பொருளாதார சீர்திருத்தங்களைத் திட்டமிடச் சொன்னார். புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவான கொள்கைகள் வகுக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்
களில் தனியார் முதலீடுக்கு வழிவகை செய்யப்பட்டது. தாரளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் எல்லாம் ஒருசேர நடந்தன.
புதிய பொருளாதாரக் கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வரத்தொடங்கின.

அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. தொழிற்துறை நவீனமாகத் தொடங்கியது. ஏற்றுமதி அதிகரித்தது. 1991-92-ல் இந்தியாவில் அந்நிய முதலீடு 132 மில்லியன் டாலராக இருந்தது. 1995-96-ல் அது 5.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. வாகனத் துறை, தொலைத்தொடர்புத் துறை, மென்பொருள் துறை, மருத்துத் தயாரிப்புத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சி காணத் தொடங்கின. புதிய இந்தியா பிறந்தது.

புதிய நூற்றாண்டில் இந்தியா

புதுப்பொலிவுடன் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியா அடியெடுத்து வைத்தது. 1998-2004 வரையில் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தாராளமயமாக்கத்தை முடுக்கிவிட்டார். தங்கநாற்கர சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் வழியே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையத் தொடங்கியது.

இந்திய நகர்புறங்கள் நவீனமடையத் தொடங்கின. மென்பொருள் துறை இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது. வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தொலைதொடர்புக் கொள்கையானது, இந்தியாவில் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரும் வளர்ச்சி காண்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

வாஜ்பாயைத் தொடர்ந்து, 2004-ல் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றார். அடுத்தப் பத்து ஆண்டுகள் பிரதமராக அவர் தொடர்ந்தார். 1991-ல் போடப்பட்ட பாதையிலே இந்தியாவின் பொருளாதாரப் பயணம் தொடர்ந்தது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரும் நோக்கில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை அவர் கொண்டுவந்தார்.

2006-ல் இந்தியா உச்சபட்ச பொருளாதார வளர்ச்சியை எட்டியது. ஜிடிபி வளர்ச்சி 9 சதவீதத்தை தொட்டிருந்தது. 2007-2008 –ல் சர்வதேச அளவில் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மோசமான சரிவைக் கண்டது. இந்த நெருக்கடியிலிருந்து மன்மோகன் சிங் தனது பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவை மீட்டெடுத்தார்.

டிஜிட்டல் இந்தியா

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகான எட்டு ஆண்டுகளில், இந்தியா பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ‘அரசின் வேலை நாட்டை நிர்வகிப்பதுதான். நிறுவனங்களை நடத்துவதல்ல’ என்ற கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் விற்கும் முயற்சிகளை மோடி தீவிரமாக தொடங்கிவைத்தார். அதன் உச்சபட்ச நகர்வாக, தற்போது நாட்டின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன.

கடந்த எட்டு ஆண்டுகளில் உள்நாட்டு தொழிற்செயல்பாடுகளை ஊக்குவிக்க பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டுத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவரப்பட்டது. நிறுவன வரி குறைக்கப்பட்டது. 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக மாற்றப்பட்டன.

மோடியின் மூன்று பொருளாதார அறிவிப்புகள் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பணமதிப்பிழப்பு (2016), ஜிஎஸ்டி (2017), மூன்று வேளாண் சட்டங்கள் (2020). பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையின் நீட்சியாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியது. 2015-16 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜிடிபி, 2019-20 நிதி ஆண்டில் 4 சதவீதமாக சரிந்தது.

மோடியின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த இரு முக்கியமான மாற்றங்களாக டிஜிட்டலை நோக்கிய நகர்வையும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பெருக்கத்தையும் குறிப்பிட முடியும். இணையத்தின் ஊடுருவலையும் ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, டிஜிட்டலை நோக்கிய நகர்வை மோடி தீவிரப்படுத்தினார்.

கடந்து எட்டு ஆண்டுகளில் அரசு சேவைகள், வர்த்தகம், கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் நிகழ்ந்த டிஜிட்டல்மயமாக்கம் இந்தியர்களின் அன்றாடத்தை மேம்படுத்தியது.

யுபிஐயானது இந்தியாவின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. டிஜிட்டல்மயமாக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. இன்று இந்தியாவில் 75,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களால் பல தளங்களில் பொருளாதார வாய்ப்புகள் தூண்டப்பட்டுள்ளன.

கரோனா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும்,விரைவிலே நாடு அதிலிருந்து மீளத் தொடங்கியது. தற்போது பணவீக்கம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு ஆகிய நெருக்கடிக்கு மத்தியிலும், உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.

75-வது ஆண்டில் இந்தியா: 1951-ல் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு ரூ.800 கோடியாக இருந்தது. இன்று அது ரூ.32 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 1950-ல் உணவு தானிய உற்பத்தி 5.5 கோடி டன்னாக இருந்தது. இன்று அது 30 கோடி டன்னைக் கடந்துள்ளது.

1948-ல் இந்தியாவில் அந்நிய முதலீடு ரூ.256 கோடியாக இருந்தது. இன்று அது ரூ.6.5 லட்சம் கோடியாக உள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றாட உணவுத் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருந்த இந்தியா, இன்று சிரமத்தில் இருக்கும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது!

முகம்மது ரியாஸ், riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x