

சாலையில் சர்ரென்று நம்மை கட் அடித்து சீறிப் பாயும் இளைஞர்களின் பைக், அது எழுப்பும் ஓசை இவை கண்டு மிரளாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் அதே காற்றை விட வேகமாய், சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிள்களை பந்தய மைதானத்தில் பார்க்கும் போது உற்சாகம் பீரிடுவது இயற்கையே.
இத்தகைய அனுபவம் கடந்த வாரம் புத் சர்க்யூட்டில் நடந்த ஆசிய ட்ரீம் கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தைப் பார்க்கும் போது கிடைத்தது.
வெறுமனே உயர் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளைத் தயாரிப் பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், பந்தய ஆர்வலர் களை ஒருங்கிணைத்து அதற்கான போட்டிகளை நடத்துவதிலும் தங்க ளுக்கு பங்குண்டு என்பதை ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் உணர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காணும்போது அது வெளிப்பட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா, தாய் லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளின் முன்னிலை வீரர்கள் பங்கேற்ற ஆசியா ரோடு ரேசிங் மோட்டார் சைக்கிள் பந்தயம் அக்டோபர் 1, 2 தேதிகளில் நடந்தது. அதன் ஒரு பகுதியாக ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் நடத்திய ஆசியா ட்ரீம் கோப்பை போட்டியும் நடந்தது. இதில் இந்தியா சார்பில் 3 பந்தய வீரர்களை ஹோண்டா களமிறக்கியது. ஹரி கிருஷ்ணன், சேது ராஜீவ், மதன குமார் ஆகியோர் பந்தயத்தில் பங்கேற்றனர். மூன்று பேருமே சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இதில் 22 வயதாகும் ஹரி கிருஷ்ணன் மெக்கானிக்கல் இன்ஜினீய ரிங் முடித்தவர். 2012 முதல் பைக் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். ஹோண்டா சார்பில் பல்வேறு பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
பைக் பந்தய வீரர்களிலேயே மிகவும் இளையவர் ராஜீவ் சேது. 17 வயதுதான் ஆகிறது. 2014-ம் ஆண்டு முதலே பைக் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். கோவையில் நடந்த ஒரு பந்தயத்தின் போது, ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தாலும் அதில் இருந்து மீண்டு விட்டார்.
மதனகுமார் 2011-ம் ஆண்டு முதல் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இவரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பை வென்றிருக்கிறார்.
சென்னையை அடுத்த, ஸ்ரீபெரும்பு தூர் அருகேயுள்ள, இருங்காட்டுக் கோட்டை மோட்டார் ரேஸ் ட்ராக்கில், கடந்த ஆகஸ்டில் தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது. ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியின் ஓபன் பிரிவில், மதனகுமார், சேது ராஜீவ் சாதனை படைத்தனர். புரோ - ஸ்டோக் 165 பிரிவில், ஹரி கிருஷ்ணன் முதலிடத்தையும், ராஜீவ் சேது இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
`மோட்டார்சைக்கிள் பந்தயம் என்பது இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு விளையாட்டு. இதில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மோட்டார்சைக்கிள் வீரர்களாவதை விரும்புவதில்லை. ஆனால் இத்துறையில் சாதிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது' என்கிறார் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ்.
`விளையாட்டைப் பொருத்தவரை கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல் என மற்ற பிரிவுகளை விரும்பும் பெற்றோர், பைக் ரேஸை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் இதில் உள்ள அபாயம்தான். ஆனால் முறையான பயிற்சி பெற்று, பாதுகாப்பு அம்சங்களோடு களம் இறங்கினால் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்கிறார் நாகராஜ். அவர் மேலும் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே பைக் ரேஸில் ஆர்வம் உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறோம். சாலையில் பைக்கை வேகமாக ஓட்டுவது வேறு, டிராக்கில் ஓட்டுவது வேறு. வேகமும் வேறுபடும். அதற்கேற்ப தீவிரமான பயிற்சி அளிப்போம். வீரர்களுக்கு உடல் வலு அவசியம். அதற்காக பைக் ரேஸ் இல்லாத காலங்களிலும் தினமும் காலையும் மாலையும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கிறோம். ஓட்டப் பயிற்சியில் தொடங்கி, சைக்கிளிங், கார்டியோ பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பைக் ரேஸ் பந்தய வீரர்கள் இவர்களுக்கு ஆலோசனை அளிப்பதோடு பயிற்சியை யும் கண்காணிப்பார்கள்.
இந்தியாவை பொருத்தவரை 3 இடங்களில் மட்டுமே ரேஸ் ட்ராக் உள்ளது. சென்னையில் இருங்காட்டுக் கோட்டையில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட் கிளப்புக்கு சொந்தான ட்ராக்,
கோவையில் பிரபல கார் பந்தய வீரர் கரிவரதன் பெயரில் அமைந்துள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே,நொய்டாவில் ஜேபி குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இவைதான் அவை. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பயிற்சி பெறுவது கடினமான காரியமாக உள்ளது. புவனேசுவரத்தில் ஒரு ட்ராக் விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 250 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடிகிறது. புதிதாக மேலும் பல டிராக்குகள் உருவாகும்போது, அதிகம் பேருக்கு பயிற்சி அளிக்க முடியும்.
சமீபகாலமாக இளம் பெண்களும் பைக் ரேஸில் ஆர்வமாக உள்ளனர். கோவையில் கடந்த ஜூன் மாதம் நடந்த மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற போட்டியை ஹோண்டா நிறுவனம் நடத்தியது. 10 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மேலும் பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
சாதாரண பின்னணியில் இருந்து வருபவர்கள் அவ்வளவு எளிதில் பைக் ரேஸ் வீரராகி விட முடியாது. காரணம் அதற்கு நிறைய செலவாகும். பைக் விலை, ஹெல்மெட், உடை என எல்லாமே செலவு மிகுந்த விஷயம். இந்த நிலையில்தான், ஆர்வமோடு வரும் இளைஞர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். இவர்களுக்காகவே ஒரு ஹெல்ப்லைன் ஆரம்பித்திருக்கிறோம் என்கிறார் நாகராஜ்.
எந்த வேலையில்தான் ரிஸ்க் இல்லை. எல்லா வேலையிலும் இருக்கிறது. அதேபோல், பைக் ரேஸிலும் இருக் கிறது. நவீன பாதுகாப்பு சாதனங்கள் இருப்பதால் உயிருக்கு ஆபத்தில்லை. வெற்றி பெற்றால், பணமும், புகழும் குவியும். பைக் ரேஸ் வீரராக இருந்து முடித்த பின்பு, பயிற்சியாளராக அடுத்த களத்தை நோக்கி பயணம் செய்யலாம். பைக் நிறுவனங்களும் தங்களின் பிராண்ட்டை பிரபலப்படுத்த இத்துறை யில் பணத்தை வாரி இறைக்கின்றன. இதைப் பயன்படுத்தி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் முன்னேறலாம்.
பைக் வீரராக ஆசையா..
ஹோண்டா நிறுவனம் பைக் ரேஸ் பிரியர்களை தேர்வு செய்யும் வகையில் ஹெல்ப்லைனை ஆரம்பித்துள்ளது. பைக் ரேஸில் விருப்பம் உள்ள இளைஞர்கள் 0124-6712863 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால், அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது நிறுவனம். அவர்களுக்கு பயிற்சி அளித்து, ரேஸ் நடத்தி, அதில் முன்னணியில் இருப்பவர்களை தேர்வு செய்கிறது. தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. அதில் சாதனை படைப்பவர்களை, ஜப்பானில் உள்ள தனது பைக் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெற வைக்கிறது. அதன் மூலம் பைக் ரேஸில் சர்வதேச அளவில் இந்திய வீரர்களை உருவாக்கி வருகிறது ஹோண்டா நிறுவனம்.
ravindran.s@thehindutamil.co.in