

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த 5ஜி ஏலம் சமீபத்தில் முடிந்தது. ஜூலை 26-ல் தொடங்கிய ஏலம், 7 நாட்கள் நீடித்து ஆகஸ்ட் 1 முடிவடைந்தது. 72 ஆயிரம் மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று கூறப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. தற்போது மொத்தமாக 51,236 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
ஜியோதான் அதிகபட்ச அளவில் ஏலம் எடுத்துள்ளது. மொத்தமாக, ஜியோ ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் ரூ.212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளன.
2008-ம் ஆண்டில் 2ஜி அலைக்கற்றை ரூ.10,772 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உண்மையான மதிப்பை டவும் மிகக் குறைந்த விலைக்கு 2ஜி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதனால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது 14 ஆண்டுகள் கழித்து, ரூ.4.3 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்ட அதிநவீனமான 5ஜி அலைக்கற்றை ரூ.1.5 லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போயிருக்கிறது. இந்நிலையில், 5ஜி ஏலத்தில் மிகப் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்றும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.