அரை சதம் அடித்த டொயோடா கொரோலா!

அரை சதம் அடித்த டொயோடா கொரோலா!
Updated on
1 min read

ஆட்டோமொபைல் துறையில் புதிய பிராண்டுகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அரை நூற்றாண்டுகளாக வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று வெற்றி கரமாக வலம் வருகிறது டொயோடா நிறு வனத்தின் கொரோலா மாடல் கார்கள். அரை சத நாயகன் கொரோலாவைக் கவுரவிக்கும் வகையில் டொயோடா நிறுவனம் ஒரு தனி இணையதளத்தையே உருவாக்கியுள்ளது.

1966-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி டொயோடா நிறுவனத்தின் கொரோலா மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரையில் உலகம் முழுவதும் 4 கோடியே 40 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன.

ஐம்பது ஆண்டுகளில் இதுவரை 11 தலைமுறை மாடல்கள் கொரோலாவில் வெளிவந்துள்ளன. இந்த கார் தற்போது 13 நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. 150 நாடுகளில் விற்பனையாகிறது. ஆண்டுக்கு 13 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன.

அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் வரை அமெரிக்காவுக்கு இந்தக் கார் ஏற்றுமதி செய்யப்படவில்லை. அறிமுகம் செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளில் இதன் சர்வதேச விற்பனை 10 லட்சத்தை எட்டியது.

பூமியைச் சுற்றி வருவதற்கு 90 லட்சம் கார்கள் தேவை என்ற கணக்கின்படி கொரோலா கார்கள் இதுவரை 4.7 தடவை இந்தப் புவியை வலம் வந்துள்ளதாக டொயோடா நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

நிறுவனம் உருவாக்கியுள்ள இணையதளத்தில் கொரோலா காரின் சிறப்பம்சங்கள், வாடிக்கையாளர்களின் நினைவலைகள், காரின் பாரம்பரியம், இதன் உருவாக்கம் மற்றும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் கொரோலா மாடல் கார்கள் இந்தப் பிரிவில் 42 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது என்று டொயோடா கிர்லோஸ்கரின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் என். ராஜா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அறிமுகமான கொரோலா ஆல்டிஸ் மாடல் கார்கள் இந்தியாவில் ஒரு லட்சம் விற்பனையாகியுள்ளன.

அரை நூற்றாண்டாக ஆதிக்கம் செலுத்தும் கொரோலாவின் பெருமையை இந்தியா மட்டும் அறியாமலிருக்குமா என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in