

காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில் உலக நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்வாகனங்களை நோக்கி தீவிரமாக நகர்ந்துவருகின்றன. இதனால், உலக அளவில் வாகனத் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துவருகிறது. இந்திய சூழல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
சந்தையும் இலக்கும்
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் 4.20 லட்சம் மின்வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.இவற்றில் இரு சக்கர வாகனங்கள் 2.3 லட்சம், மூன்று சக்கர வாகனங்கள் 1.78 லட்சம், நான்கு சக்கர வாகனங்கள் 19,500 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன. இது 2020-21-ம் நிதி ஆண்டு விற்பனையைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் 80 சதவீதம் மின்னாற்றலில் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கார்களில் 30 சதவீதம் மின்னாற்றலில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த வகையில் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மின்வாகனச் சந்தையின் மதிப்பு 90 சதவீதம் உயர்ந்து 150 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா எலெக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, மகிந்திரா எலெக்ட்ரிக், ஒலெக்ட்ரா க்ரீன்டெக், அசோக் லேலண்ட், ஒகினாவா, ஆம்பியர் ஆகிய நிறுவனங்கள் மின்வாகன தயாரிப்பில் இறங்கியிருக்கின்றன.
இதில் டாடா, ஹுண்டாய், அசோக் லேலண்ட், மகிந்திரா, ஒலெக்ட்ரா போன்ற நிறுவனங்கள் நான்கு சக்கர வாகன தயாரிப்பிலும் மற்ற நிறுவனங்கள் இரண்டு சக்கர வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றன.
இந்தியாவில் தற்போதைய இரு சக்கர மின்வாகனச் சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் 32 சதவீதம், ஒகினாவா 21 சதவீதம், ஏதர் எனர்ஜி 11 சதவீதம் பங்கு வகிக்கின்றன. நான்கு சக்கர மின்வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் 71 சதவீதமும் எம்ஜி இந்தியா 27 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
முன்னெடுப்புகள்
2013-ம் ஆண்டே மத்திய அரசானது ‘தேசிய மின்சார இயக்கம் திட்டம் 2020’ வெளியிட்டது. இதன் நோக்கம் தேசிய எரிசக்தி பாதுகாப்பு, வாகன மாசுபாடு மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறன்களின் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகும். மின்வாகனத்தை நோக்கிய நகர்வை துரிதப்படுத்தும் நோக்கில் 2015-ம் ஃபேம் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-ல் ஃபேம் II திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி, மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் இரு சக்கர மின்வாகனங்கள், 5 லட்சம் மூன்று சக்கர மின்வாகனங்கள், 55,000நான்கு சக்கர மின்வாகனங்கள், 7000 மின்பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டது. 2021-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசானது பேட்டரி சேமிப்பக உற்பத்தி தொடர்பாக உற்பத்தித் திறனுடன் இணக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தை (PLI) அறிவித்தது.
இது பேட்டரிகளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது மின் வாகனங்களின் விலையை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்துமின்வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வரிச் சலுகைகளையும் அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அளவிலும் மின்வாகனம் சார்ந்துகுறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2030-ம் ஆண்டு வரை ஒவ்வொருஆண்டும் 5 சதவீத பேருந்துகளை மின்வாகனங்களாக மாற்றுவதோடு, நிறுவன வாகனங்கள்மற்றும் இ-காமர்ஸ் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் வாகனங்களை மின்வாகனங்களாக மாற்றவும் ஆறு முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து ஆட்டோக்களை 10 ஆண்டுகளுக்குள் மின்வாகனங்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
சவால்கள்
சமீபத்திய நிகழ்வுகள் மின்வாகன பயன்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகின்றன. பேட்டரி சூடாகி வாகனங்கள் தீக்கிரையாவது சமீப காலத்தில் அதிகமாகி வருவது மின்வாகனம் வாங்க நினைப்பவர்களின் மனதில் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
‘இது புதிய தொழில்நுட்பம் என்பதால் ஆரம்பத்தில் இந்த மாதிரியான பிரச்சினைகள் இருக்கத்தான்செய்யும். இந்தத் தவறுகள் அனைவருக்குமானபடிப்பினை ஆகும். அரசு இது குறித்து என்ன விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வருகிறதோ அதை அப்படியே நாங்கள் பின்பற்றுவோம்’ என்று ஒகினாவாவின் நிறுவனர் விளக்கம் அளித்தார்.
‘மின்வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் இந்திய தட்பவெட்ப நிலைக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம். பேட்டரி வடிவமைப்பிலும் ஏதாவது குறைபாடு இருக்கக்கூடும். செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் குறைந்த தரம் கொண்ட பொருள்களை உபயோகிப்பதும் கூட இந்த விபத்துக்களுக்குக் காரணமாக இருக்கலாம்’ என்று இத்துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். மின் வாகனத்தின் பேட்டரிகள் வெடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் நிகழ்கிறது. இந்நிலையில் பேட்டரி தயாரிப்பு சார்ந்து உலக அளவில் மிகத் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மின்வாகனத் துறை என்பது மூன்று தளங்களில் செயல்படுகிறது. முதலாவது மின்வாகனத்தயாரிப்பு. இரண்டாவது, மின்வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு. மூன்றாவது பேட்டரி தயாரிப்பு. முதல் இரண்டு தளங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
பேட்டரி தயாரிப்பைப் பொறுத்தவரையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.தற்போது உலக நாடுகள் பேட்டரி தயாரிப்பில்தான் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. உலக அளவில் பேட்டரி உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது. பேட்டரி தயாரிப்பில் தன்னை மேம்படுத்திக் கொள்வதன் மூலம்தான்இந்தியா மின்வாகனத் துறையில் சிறந்து விளங்க முடியும்.
சித்தார்த்தன் சுந்தரம் sidvigh@gmail.com