வேளாண் வணிகம் விவசாயத்தை மாற்றி அமைக்குமா?

வேளாண் வணிகம் விவசாயத்தை மாற்றி அமைக்குமா?
Updated on
3 min read

இந்திய வேளாண் துறையின் முகம் மாறிவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பயிரிடுதல் முதல் சந்தைப்படுத்துதல் வரை தொழில்நுட்பமயமாகிவருகின்றன. ஒரு துறையில் அறிமுகமாகும்புதிய தொழில்நுட்பங்கள், அத்துறையை அடுத்தத் தளத்துக்குக் கொண்டு செல்கின்றன.

இந்தியாவில் 1960-களில் பசுமைப்புரட்சி ஏற்பட்டது. உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுவந்த இந்தியா, பசுமைப் புரட்சிக்குப் பிறகு உணவை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தன்னிறைவு பெற்றது. 1950-களில் 50 மெட்ரிக்டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்திதற்போது 300 மெட்ரிக் டன்னை தொடப்போகிறது.

பசுமைப் புரட்சியைப் போலவே, தற்போது தகவல் தொழில்நுட்பங்களின் வரவு வேளாண் துறையைபுதிய தளத்துக்கு கொண்டு செல்கிறது.

விவசாயிகளுக்கு மானியத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்வது, வேளாண்மை சார்ந்த தகவல்களை செயலிகள் மூலம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவது, ட்ரோன்மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது,செல்போன் மூலம் மோட்டாரை கட்டுப்படுத்துவது, நானோ தொழில்நுட்பம் மூலம் உரங்களைத் தருவது, வேலையை எளிதாக்கும் வேளாண் இயந்திரங்களின் புதுவரவு, வறட்சி மற்றும் பூச்சி தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் பயிர் ரகங்கள், தேசிய வேளாண் விளைபொருள் விற்பனை இணையதளம் (e-NAM) என்று புதிய தொழில்நுட்பங்களின் வரவுகள் நாளுக்கு நாள் இந்திய வேளாண் துறையை வளப்படுத்திவருகின்றன.

வேளாண் வணிகம்

இந்தியாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகவும், அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடியதாகவும் வேளாண் துறை இருந்தாலும், விவசாயிகளின் வருவாய் பெரிய அளவில் மேம்பட்டு இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஏனைய துறைகளில், வருவாய்உயர்ந்த அளவுக்கு வேளாண் துறையில்உயரவில்லை. தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகி வந்திருக்கின்றன.

வேளாண் துறையை வணிகத் தளத்தில் அணுகும் பார்வை இந்திய பொது சமூகத்தில் பரவலாக இருக்கவில்லை. தற்போதைய காலகட்டத்தில் மிகச் சாதாரண ஒன்றிலும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடிப்படையே இந்த அணுகுமுறைதான். அப்படித்தான் தற்போது வேளாண் துறையும் வணிகத் தளத்தில் பல்வேறு பரிமாணங்களில் அணுகப்படுகிறது. இது வேளாண் வணிகம் என்று வரையறுக்கப்படுகிறது.

வேளாண்மையில் பயிர் உற்பத்தி, விநியோகம், பண்ணை இயந்திரங்கள், பதப்படுத்துதல், விதை விநியோகம், சந்தைப்படுத்துதல் மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றை வணிகப் பார்வையுடன் அணுகுவதுதான் வேளாண் வணிகமாகும்.

வேளாண் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்குவதோடு நிலைத்த நீடித்த பொருளாதாரவளர்ச்சியை ஏற்படுத்தித்தரும் ஆற்றல் வேளாண் வணிகத்துக்கு உள்ளது. அந்த வகையில் வேளாண் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியின் அடித்தளம் வேளாண் வணிகமே ஆகும்.

இதன் தொடர்ச்சியாகவே, வேளாண் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிதாக உருவாகிவருகின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேளாண் துறையில்புதியபொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அவை வேளாண் துறையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Waycool, Ninjacart, Jumbotail, Gobasco,Ergos, Crofarm போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விவசாயி, உணவு பதப்படுத்துவோர், மொத்த விற்பனையாளர், சேமிப்புகிடங்கு வைத்திருப்போர் ஆகியோர்களிடமிருந்து தரவுகளைப் பெற்று மென்பொருள் மற்றும் செயலி மூலம்நல்லதொரு லாபகரமான பிணைப்பைஏற்படுத்துகின்றன.

இதேபோல் EM3, Oxen, Gold Farm, Trringo போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்களை வாடகைக்குத் தருகின்றன. வேளாண் இயந்திரங்கள் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் இதில் இணைந்துகொண்டு தங்கள் இயந்திரங்களை வாடகைக்கு விடலாம்.

வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று விவசாயிகளுக்கும் சில்லறை வணிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை ஏற்படுத்தும் தளமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திடம் 5000 சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 3,500 விவசாயிகளிடம் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்கின்றனர்.

விற்பனையாளர்களுக்கு நுகர்வோரின் நுகர்வு பாங்கு தெரிவதால் விவசாயிகளுக்கும் எந்தப் பயிரை பயிரிட வேண்டும் என்பதும் தெரிந்துவிடுகிறது. அந்தவகையில் சந்தையின் நிலவரம், எந்த பயிரை எப்போது பயிரிட வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் போன்றவற்றை அறிந்துகொண்டு முடிவு எடுப்பதற்கு விவசாயிகளுக்கு தரவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தரவு கட்டமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு சந்தையில் நேரடியாக விற்பதைவிட 20 சதவிகித லாபம் அதிகமாக கிடைக்கிறது.

மாநில அரசுகளும் வேளாண் துறை சார்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகின்றன. விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு இளம்தொழில் முனைவோர்களை ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் வேளாண் துறை பக்கம் ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது தமிழ்நாடு அரசின் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப்’ அமைப்பும் இணைந்துள்ளது.

வணிகமாக்கல் என்பதைத் தாண்டியும், சில மாநிலங்கள் வேளாண் துறையை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளைஅக்கறையுடன் மேற்கொண்டுவருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன முறையில் நூறு சதவீதமானியம் என்கிற வகையில் தமிழ்நாடுதனித்துவமான நிலையை அடைந்து வருகிறது.

விவசாயிகளுக்கு முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தெலங்கானா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. ‘ரித்து பந்து’ (விவசாயிகள் உதவித்தொகை திட்டம்) மற்றும் சந்தை நிலவரத்தை உணர்ந்து பயிர் சாகுபடி செய்யும் முறை போன்றவை தெலங்கானா அரசின் குறிப்பிடத்தக்க திட்டங்களாகும். குத்தகைதார விவசாயிகளையும் கணக்கில்கொண்டு அவர்களுக்கு என்றே ‘கலியா’ உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்திய ஓடிசா மாநில அரசின் முன்னெடுப்பு மிக முக்கியமானது.

அனைத்துமாநிலங்களுக்கும் முன்மாதிரியாக ‘வேளாண் சுற்றுலாவை’ விவசாயிகளிடையே வளர்த்து அதற்கென்றே தனிக் கொள்கையை மகாராஷ்டிரா அரசு உருவாக்கி உள்ளது. காய்கறி பயிர்களுக்கும், பழ வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொண்டுவந்த கேரளா அரசின் திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்தியா கடக்க வேண்டிய தூரம்

எனினும், இந்தியா கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகமாக உள்ளது. இந்தியாவை ஒப்பிட்டால் ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும்நியூசிலாந்து போன்ற நாடுகளில் விவசாயம் செழிப்புடன் உள்ளது. விவசாயிகளும் வளத்துடன் உள்ளனர். அங்கு விவசாய பயிர்களுக்கு மானியம் தருவதைக் காட்டிலும் விவசாயிகளுக்கே அரசு அதிக அளவில் மானியம் தருகிறது. தொழில்நுட்பரீதியாக இந்திய வேளாண் துறையை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் பல மடங்கு பின்தங்கி இருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் பல்வேறு பயிர்களிலும் உலா வந்து உற்பத்தியை பெருக்குகின்றன. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் மிகக் குறிப்பிட்ட பயிர்வகைகளிலே சாத்தியமாகி இருக்கிறது. இது வேளாண் தொழில்நுட்பம் அடிப்படையில் இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டக்கூடியதாகும்.

முன்னிருக்கும் சவால்கள்

தற்போது வேளாண் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றத்துக்கு ஏற்ப விவசாயிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானது. புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலமே விவசாயிகள் தங்கள் துறையில் மேம்பட்டு பயணிக்க முடியும். இது வேளாண் துறையில்விவசாயிகளின் முன்னிருக்கும் சவால்களில் ஒன்று.

காலநிலை மாற்றம் வேளாண் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள். பஞ்சாப் மாநிலத்தில் காலநிலை மாற்றத்தால் கோதுமை பயிர் பாதித்து உற்பத்தி குறைந்தது ஒரு உதாரணம். எனவே விவசாயிகள் காலநிலை மாற்றத்தைக் கணக்கில்கொண்டு பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதேபோல் விவசாயிகள் தங்கள் வேளாண் செயல்பாட்டை விரிவாக்க வேண்டும். அதாவது, விவசாயத்தில் இரண்டாம் நிலை செயல்பாடுகளாக கருதப்படும் வேளாண் சுற்றுலா, தேனீ வளர்ப்பு மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட முன்வர வேண்டும்.

முடிந்தவரையில் விவசாயிகள் மாற்றுப் பயிர் மற்றும் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். ஏனென்றால் இன்றும் சிறு தானியம் மற்றும் மூலிகை பயிர்களின் தேவை சந்தையில் அதிகம் தென்படுகிறது. இதற்கான சந்தை தொடர்பை அரசு விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

விவசாயிகளை பெரும் குழுவாக ஒன்றுபடுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை செயல்படுத்த மத்திய அரசு முனைந்தது. ஆனால் வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்கள் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் சில நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் ஒன்றுபட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கைகொடுக்க வேண்டும்.

இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் துறை மேம்பட்டநிலையை அடையும் என்று நம்புவோம்.

வெ.சரத்

வேளாண் ஆராய்ச்சியாளர்

saraths1995@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in