Last Updated : 23 May, 2016 12:19 PM

 

Published : 23 May 2016 12:19 PM
Last Updated : 23 May 2016 12:19 PM

ராஜனை குறிவைக்கும் தேசபக்தி ஆயுதம்

நவீன இந்தியாவின் மிகப் பெரிய ஆயுதம் தேசபக்தி. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டதோ இல்லையோ தேசபக்தி தொடர்பான பிரச்சினைகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. இந்த முறை அம்பு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது ஏவப்பட்டிருக்கிறது. அம்பை வீசியவர் சர்ச்சைகளுக்கு பெயர் போன சுப்ரமணியன் சுவாமி.

``ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை. இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் அவரை அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்,’’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். தற்போது இது பல்வேறு தரப்பினரியிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது.

சுப்ரமணியன் சுவாமி வைத்திருக்கும் குற்றச்சாட்டு இதுவரை ரகுராம் ராஜன் தேசநலனுக்கு எதிராக முடிவெடுத்திருப்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை சரியான திசையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ரகுராம் ராஜன் மீது இப்படியொரு குற்றச்சாட்டா என்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

வாஷிங்டனில் நடந்த உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்ற ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் குறித்த கேள்விக்கு பார்வைற்றோர் தேசத்தில் ஒற்றைக்கண் உடையவரே ராஜா என்று ஒப்புமை ரீதியாக பதலளித்தார். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. ரகுராம் ராஜன் கூறிய வார்த்தைகள் திருப்திகரமாக இல்லை என்று பாஜக அமைச்சர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தார்கள்.

அதன்பிறகு சுப்ரமணியன் சுவாமி, ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் இருப்பதற்கு தகுதியில்லை. அவர் பதவியில் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அமெரிக்காவின் `கீரின் கார்டு’ வைத்திருப்பவர் எப்படி இந்திய நலனுக்கு ஆதரவாக செயல்பட முடியும் அதுமட்டுமல்லாமல் ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறார். இதனால் வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது, பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். சுவாமியின் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதா என்பதை பார்ப்பதற்கு முன் ரகுராம் ராஜன் வந்த பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களை பார்ப்போம்.

ராஜன் விளைவு (Rajan Effect)

2013-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு போய்கொண்டிருந்த நேரம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக இருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு. நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகம். 2012ம் ஆண்டிலிருந்தே பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது என ஒட்டுமொத்த பொருளாதாரமே மந்தநிலையில் இருந்தது. இந்தியாவின் வளர்ச்சியே கேள்விக்குறியான நேரத்தில்தான் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். பொருளாதாரத்தையே மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அவர் மீது சுமத்தப்பட்டது. பணவீக்க விகிதத்தைக் குறைப்பதும், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு செல்லாமலும் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்கு வட்டி விகிதத்தை அதிகரிப்பது தவிர வேறு வழியில்லை.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருந்தது. வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடாது என்று கார்ப்பரேட் துறை மற்ற துறைகளிலும் குரல்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் ராஜன் வட்டிவிகிதத்தை உயர்த்தினார். அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறாமல் தடுக்கப்பட்டதோடு, சில மாதங்களில் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு வந்தது. இதனைச் செய்யாதிருந்தால் பணவீக்க விகிதம் உச்சத்திற்குச் சென்று உலகப் பொருளாதாரம் சந்தித்த நெருக்கடியை இந்தியாவும் சந்தித்திருக்கும். ராஜன் அந்த நெருக்கடி ஏற்படாமல் தடுத்ததை அன்று ஊடகங்கள் `ராஜன் விளைவு’ என்று புகழாரம் சூட்டின.

ஏன் ரகுராம் ராஜனை நாம் இவ்வளவு கொண்டாடு கிறோம். ராஜனுக்கு முன்பு கவர்னராக இருந்த சுப்பாராவ் மற்றும் ஒய் வி ரெட்டி ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகள். அவர்கள் பல கடின நடவடிக்கைகள் எடுத்தாலும் ஓரளவுக்கு மத்திய அரசுடன் இணக்கமான சூழலை கடைபிடித்து வந்தனர். ஆனால் ரகுராம் ராஜன் ஐஎம்எப்-பில் மூத்த பொருளாதார நிபுணராக இருந்தவர். நாட்டின் பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கி ஊழியர் எவ்வாறு செயல்பட வேண்டுமோ அப்படிதான் செயல்பட்டார். மேலும் பொருளாதாரத்தை எப்படி நிர்வகிப்பது என்று யோசிக்காமல் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்தார் ராஜன்.

சுவாமி கூறும் காரணங்கள்

உறுதியான முடிவுகளை எடுத்து வந்துள்ள ராஜன் மீது சுவாமி இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஒன்று வட்டி விகிதத்தை குறைக்க மறுப்பது மற்றும் அதனால் வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது என்பது. சமீபத்தில் துருக்கியில் வட்டிவிகிதத்தை குறைத்த பொழுது பணவீக்கம் அதிகமாகி பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. வட்டி விகிதத்தை மட்டும் குறைத்துக் கொண்டே போனால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார சீர்குலைவு ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். தவிர, வேலைவாய்ப்பின்மைக்கு ரிசர்வ் வங்கி மட்டும் எப்படி காரணமாக இருக்கமுடியும். மத்திய அரசின் தோல்வியே வேலைவாய்ப்புக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

மற்றொன்று வர்த்தக அடிப்படையிலான மொத்த விற்பனை விலைக் குறியீட்டிலிருந்து மக்கள் நுகர்வுத்திறன் சார்ந்த நுகர்வோர் விலை குறியீட்டுக்கு ராஜன் இலக்கு தாவியுள்ளது. மொத்தவிலைக் குறியீட்டில் கவனம் செலுத்தியிருந்தால் பொருளாதாரம் முன்னேறியிருக்கும் சிறு குறுந் தொழில் நசிவடைந்திருக்காது என்பது. 2010-ம் ஆண்டு பிறகு மொத்தவிலை குறியீட்டில் கவனம் செலுத்தியதால்தான் பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்தது. நுகர்வோர் குறியீட்டிற்கு மாறியிருப்பதை பொருளாதார நிபுணர்களே வரவேற்கிறார்கள். மேலும் தற்போது பெரும் தொழில்களை விட சிறு, குறுந் தொழில்களே நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன என்று கம்பெனி விவகார அமைச்சகம் தகவல் தெரிவிக்கிறது. இவையெல்லாம் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த பொருளாதார நிபுணர் சுவாமிக்கும் தெரியாதாதல்ல. ஆனாலும் ராஜன் மீது ஏன் குற்றச்சாட்டை சுமத்துகிறார்?

சுவாமியை தூண்டுவது யார்?

பெரும் நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிந்தும் நீண்ட நாள் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களை பட்டியலிட முயற்சி செய்து வருகிறோம் என்று ராஜன் சமீபத்தில் தெரிவித்தார். மேலும் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் பெயரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி நெருக்குதல் கொடுத்துள்ளது. அதனால் பெரிய நிறுவனங்கள் ரகுராம் ராஜன் மீது அதிருப்தி அடைந்தன. நேரடியாக வங்கிகளிடம் மோதமுடியாமல் ரகுராம் ராஜனை பதவியிலிருந்து அகற்றிவிட்டால் இந்தச் சிக்கலை தவிர்க்கலாம் என்று பெரும் முதலாளிகள் சுவாமியை பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஆனால் ரகுராம் ராஜனை அகற்றுவதற்கு தேசபக்தி ஆயுதத்தை எடுத்திருப்பது மிகவும் கண்டிப்புக்குரியது. ரகுராம் ராஜனை நியமிக்கும் போதே அப்போதைய பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி ஏன் வெளிநாட்டினரை ஆர்பிஐ கவர்னராக நியமிக்கிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பினார்.

ஆர்பிஐ கவர்னராக பதவியேற்ற பிறகு ரகுராம் ராஜன் பேசியது, `` நான் ஒரு இந்தியன். எப்பொழுதும் இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன். மற்றொரு நாட்டின் குடிமகனாக இருக்க ஒருபோதும் விரும்பிய தில்லை. கீரின் கார்டு என்பது வேலைசெய்வதற்கு வழங்கும் உரிமம் ஆகும்.’ என்று குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதமாக பேசினார்.

ஆனால் ரகுராம் ராஜனை மனதளவில் இந்தியராக செயல்படவில்லை என்று குற்றம் சுமத்தும் சுப்ரமணியன் சுவாமி, 2012ம் ஆண்டு கேரவன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ``நான் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. நான் ஒரு அமெரிக்கன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆக இதிலிருந்தே சுவாமியின் தேசபக்தியை மதிப்பிட்டு விடலாம்.

தேசபக்தி என்றால் பாரதிய ஜனதா கட்சியினருக்கு மட்டும் சொந்தம் என்பது போல் தற்போது ஆகிவிட்டது. ஒருவரின் நடவடிக்கையோ அல்லது அணுகுமுறையோ கருத்துகளோ பிடிக்கவில்லை என்றால் அது தேச நலனுக்கு எதிரானது. அவர் இந்தியர் அல்ல, தேசத்திற்கு எதிரானவர் என்று முத்திரை குத்துவது என்ற போக்கு சமீப காலமாக தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

தேசபக்திக்கான விளக்கமும் தற்போது மாற்றி எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சிறிய விஷயத்துக்கும் தேசபக்தி கண்காணிக்கப்படுகிறது. நாம் எதை உண்ண வேண்டும், எதை பேச வேண்டும், எதை பார்க்க வேண்டும், எதை சமூக வலைதளத்தில் பகிர வேண்டும் என்பதை பொறுத்தே உங்களது தேசபக்தி வரையறுக்கப்படுகிறது. ரகுராம் ராஜனும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல் ஆகிவிட்டது.

ரிசர்வ் வங்கி தன்னிச்சையான அமைப்பு அதுவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடியது. அதன் தலைவரையே தேச நலனுக்கு எதிரான முடிவுகள் எடுத்தார் என்று குற்றம் சுமத்துவது அந்த அமைப்பின் ஒட்டுமொத்த நடவடிக்கையுமே களங்கப்படுத்துவதற்கு சமம். சுப்ரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக அமைச்சர்கள் இதுவரை எதிர்ப்பே தெரிவிக்க வில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் மெளனம் காக்கிறார். அருண் ஜேட்லியோ ரகுராம் ராஜன் பதவியில் நீட்டிப்பது தொடர்பான முடிவுகள் எந்த புற உந்துதலும் இல்லாமல் எடுக்கப்படும் என்று தெரிவிக்கிறார்.

ரகுராம் ராஜனை இரண்டாவது முறையாக ஆர்பிஐ கவர்னராக நீட்டிப்பது குறித்து பாரதிய ஜனதா அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கலாம். அவரது பதவிக்காலம் நீட்டிக்காமல் கூட போகலாம். ஆனால் பொது அரங்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மனதளவில் இந்தியராக இல்லை என்று அவரது தேசபக்தி குறித்து பாசிச நோக்கில் ஒருவர் விமர்சிப்பதை பாஜக அரசு அனுமதித்திருக்க கூடாது.

பாஜக சார்பில் ஒருவர் விமர்சனம் செய்வார். இன்னும் சில நாட்களில் அவருக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் வெளியாகும். இதேபோல வேறு ஒரு பிரச்சினையை பாஜகவினர் உருவாக்குவார்கள். ஆனால் பாஜகவோ மத்திய அரசோ எந்த எதிர்வினையையும் காட்டாது.

ராஜனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால் அவர் பூத் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக தொடருவார். இது அவரை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைவர் இல்லாமல் பாஜகவின் கைப்பாவையாக செயல்படக்கூடிய தலைவரை நியமித்தால் இழப்பு மோடி அரசுக்குதான். மோடி தனது மெளனத்தை கலைக்க வேண்டிய நேரமிது.

- பெ. தேவராஜ்
devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x