

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ ஐந்து மாதங்கள் ஆகின்றன. இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்தப் போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவின் கொடும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரையில் 4800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தங்கள் நாட்டில் இனி வாழ முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. உச்சபட்சமாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தடைவிதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் போரினால் ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
உணவும் பொருளாதாரமும்
உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம்,சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. இந்தப் போரினால் இந்த ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால், இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, இவ்விரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டன. விளைவாக, சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்தது.
புலம்பெயரும் அகதிகள்
இதுவரை 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். பெரும்பாலும் போலந்து, ருமேனியா, ரஷ்யா, மால்டோவா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். அதிகபட்சமாக போலந்தில் 46 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும்தான் அதிக எண்ணிக்கையில் உக்ரைனிலிருந்து வெளியேறி இருக்கின்றனர்.
உக்ரைனிலிருந்துஅகதிகளாக வருபவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளில் 3 ஆண்டுகள் வரை தங்கி பணிபுரியும் உரிமையை வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு உறைவிடம், உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு பிறகான மிகப் பெரும் அகதி நெருக்கடி நிகழ்வுகளில் ஒன்றாக உக்ரைனியர்களின் புலம்பெயர்வு உள்ளது.
உள்கட்டமைப்புச் சேதாரம்
ஐரோப்பிய நகரங்களில் மிகவும் செலவு குறைந்த நகரம் உக்ரைன். இங்கு போக்குவரத்துக் கட்டணம் மிகவும் குறைவு. இந்தப் போரால் உக்ரைனின் உள்கட்டமைப்பில் 30 சதவீதம் தரைமட்ட மாக்கப்பட்டிருக்கிறது. 8,000 கிலோ மீட்டர் அளவில் சாலை தகர்க்கப்பட்டிருக்கிறது. 300-க்கு மேற்பட்ட மேம்பாலங்கள், 4,430 குடியிருப்புகள், 92 தொழிற்சாலைகள், 378 பள்ளிகள், 138 மருத்துவமனைகள், 12 விமானநிலையங்கள், 7 அனல்மின் நிலையங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மறைமுக இழப்பு 600 பில்லியன் டாலர்.
புவிசார் அரசியல்
இந்தப் போர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஐக்கிய நாடுகள் சபையினையும் ஒட்டு மொத்தமாக உலுக்கி இருக்கிறது. ரஷ்யாவில் அணு ஆயுதங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தப் போர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கூட்டணியான நேட்டோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது. அவசர அவசரமாக உலக நாடுகள் தங்களது ராணுவ செலவினங்களை உயர்த்திக் கொண்டிருப்பதோடு, நாட்டின் ராணுவ பாதுகாப்பு நிலையை மறு மதிப்பீடு செய்து கொண்டிருக்கின்றன.
கச்சா எண்ணெய் வர்த்தகம்
ரஷ்யா உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பெட்ரோலியத் தேவையில் ரஷ்யாவை பெருமளவில் சார்ந்திருந்தன. தற்போது ரஷ்யாவின் எரிசக்திக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐரோப்பிய நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.
போருக்கு முன்னதாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் ஒரு சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்துவந்தது. இது தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2021-ம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து 12 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்களை இறக்குமதி செய்த இந்தியா, இந்த ஆண்டு இதுவரையில் 60 மில்லியன் பேரல்களுக்கு மேல் இறக்குமதி செய்துள்ளது.
சராசரியாக பேரல் 120 டாலர் என்ற விலையில் இந்தியா அரபு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யும்போது, ரஷ்யா சுமார் 90 டாலர் என்ற அளவிலேயே விற்கிறது. இந்தியா தனது பெட்ரோலியத் தேவைகளுக்கு 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையில் பேரல் ஒன்றுக்கு 30 டாலர் குறைவு என்பது இந்தியாவிற்கு கணிசமான அளவில் மிச்சம் என்றே கூறலாம்.
இது நாடுகளிடையிலான பொருளாதார உறவில் மறுசீரமைப்பு நடப்பதையே சுட்டிக்காட்டுகிறது.‘நாம் போரை முடித்துக் கொள்ளாவிட்டால், போர் நம்மை அழித்துவிடும்’ என்று எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது.
சுப. மீனாட்சி சுந்தரம்
somasmen@gmail.com