

கடந்த இரண்டு வருடங்களாக புதிய வாகனங்கள் அறிமுகத்தில் சற்று சுணக்கம் இருந்தது. முதலில் கரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் வாகன தயாரிப்பு தடைப்பட்டது. அடுத்தாக, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு விநியோகச் சங்கியிலில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மூலப்பொருள்கள், உதிரிபாகங்கள் தொழிற்சாலைகளை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.
அனைத்திலும் உச்சமாக செமிகண்டக்டர் தட்டுப்பாடுதான் வாகன நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. கரோனாவுக்குப் பிறகு மின்னணு சாதனங்களின் தேவை அதிகரித்த நிலையில், செமிகண்டக்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போதைய வாகனங்கள் செமிக்கண்டக்டரை முதன்மையாக நம்பி இருக்கின்றன.
செமிக்கண்டக்டர் தட்டுப்பாட்டு காரணமாக உலக அளவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின. ஆனால், இவ்வாண்டில் வாகன உலகில் சில மாற்றங்களைப் பார்க்க முடிகிறது.
செமிகண்டக்டர் தட்டுப்பாடு இன்னும் நீடித்துவருகிறது என்றபோதிலும், வாகன நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை உற்சாகத்துடன் அறிமுகப்படுத்திகின்றன.சமீபத்தில் அறிமுகமான இரண்டு பிரீமியம் வாகனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று ஹூண்டாய் டூஸன். மற்றொன்று பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர்.
ஹூண்டாய் டூஸன்
ஹூண்டாய் நிறுவனம், தனது பிரபலமான டூஸன் மாடல் எஸ்யுவி காரில் 4-வது தலைமுறை மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பெட்ரால் மற்றும் டீசல் மாடலில் வந்துள்ளது. முந்தைய மாடலை விட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்கு இதில் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ஏடிஏஎஸ்) பயன்படுத்தப்பட்டுள்ளது.
காரின் அருகே பிற வாகனங்கள் வருவதை உணர்த்துவது மற்றும் பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோர் ஆகியோர் குறித்தும் உணர்த்தும் சென்சார் இதில் உள்ளது. இதன் வடிவமைப்பில் முக்கிய அம்சமாக முன்புற கிரில் டிசைனில் பகலில் ஒளிரும் விளக்கு (டிஆர்எல்) உள்ளது. இதைப் போல பின்புற விளக்கும் மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
உள்புறம் இரட்டை வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அம்சங்களாக மோதலை எச்சரிக்கும், அதைத் தடுக்கும் வசதி, பிளைன்ட் ஸ்பாட் மோதல் தடுப்பு, லேன் கீப்பிங் அசிஸ்ட், பாதுகாப்பாக கதவுகளைத் திறப்பது, ஸ்மார்ட் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது.
6 ஏர் பேக்குகள் உள்ளன. இத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ஏர்டிஸ்க் பிரேக் ஆகியன உள்ளன. மொத்தம் 19 விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 2 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இது 1,999 சிசி திறனை வெளிப்படுத்தும். டீசல் மாடல் 1997 சிசி திறன் வெளிப்படுத்தும்.