

பிஎம்டபிள்யூ நிறுவனம் 2013-ம் ஆண்டு முதல் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து இந்திய இரு சக்கர வாகன சந்தையில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.
பிஎம்டபிள்யூ பலருக்கும் மிகவும் பிடித்தமான பிராண்ட் என்ற போதிலும், அதன் விலை காரணமாக அதன் வாகனங்களை நெருங்க முடியாது. ஆனால், சமீப காலமாக பிஎம்டபிள்யூ குறைந்த விலையில் பைக்குகளை வெளியிட்டுவருகிறது. அப்படியான ஒரு புதிய வரவுதான் ‘பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்ஆர்’. ஆரம்ப விலை ரூ.2.85 லட்சம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கூட்டிணைவில் டிவிஎஸ் நிறுவனம் 2017-ல் ‘அப்பாச்சி ஆர்ஆர் 310’ மாடலை வெளியிட்டது. இந்நிலையில், அதே வடிவமைப்பில், பிஎம்டபிள்யூ தனது புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. வடிவமைப்பில் மட்டுமல்ல, ‘அப்பாச்சி ஆர்ஆர் 310’ மாடலில் உள்ள அனைத்து அம்சங்களையும் ‘பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர்’ கொண்டிருக்கிறது.
ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு வேரியண்டுகளில் இந்த மாடல் வெளிவந்துள்ளது. ஸ்டாண்டர்ட் வேரியண்டின் விலை ரூ.2.85 லட்சம். ஸ்போர்ட் வேரியண்டின் விலை ரூ.2.99 லட்சம். இதன் என்ஜின் 312 சிசி திறனை வெளிப்படுத்தும்.
கியர் சிஸ்டத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் 6 கியர்கள். மேலும், அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் வசதியைக் கொண்டிருக்கிறது. டிராக், அர்பன், ரெயின், ஸ்போர்ட் என நான்கு விதமான வகைகளில் இந்த பைக்கை ஓட்டிக்கொள்ளலாம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து ரூ.3 லட்சத்துக்கு குறைவான விலையில் பைக் வெளிவருவது ஆச்சரியமான விஷயம்தான். இந்திய சந்தையில் ‘கவாசகி நின்ஜா 300’ மற்றும் ‘கேடிஎம் ஆர்சி 390’ ஆகிய பைக்குகளுக்கு ‘பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர்’ போட்டியாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.