

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜப்பானின் யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்கள் எவ்வித தடையும் இன்றி கிடைப்பதற்காக உதிரி பாக ஆலையைத் தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்த ஒரகடத்தில் யமஹா தொழிற்சாலையில் ரூ. 58 கோடி முதலீட்டில் உதிரிபாக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இப்போதைய சூழலில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது மிகவும் அவசியம். அவர்கள் திருப்தியடைந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களின் ஒரிஜினல் உதிரி பாகங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பிரிவு தொடங்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் ஹிரோகி புஜிடா தெரிவித்தார்.
யமஹா நிறுவனத்தின் உதிரி பாக விநியோகஸ்தர்கள் 15 மாநிலங்களில் 20 பேர் உள்ளனர். நாடு முழுவதும் 3 ஆயிரம் சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. இவை யஹமா நிறுவனத் தயாரிப்புகளின் ஒரிஜினல் பாகங்களை விற்பனை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய உதிரி பாக ஆலை மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரிஜினல் பாகங்கள் எவ்வித சிரமமும் இன்றி கிடைக்க வழியேற்பட்டுள்ளது.