

ஆப்பிள் நிறுவனம் அது எந்த தொழில்நுட்பத்தில் வலுவாக உள்ளது என்பதை உணர்ந்து அதை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் ஹைதராபாதிலும், பெங்களூரிலும் மேம்பாட்டு மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள். ஆப்பிள் ஐ போன் பிரத்யேக விற்பனை மையம் ஏற்படுத்துவதற்கான காலம் விரைவில் கைகூடலாம்.
கடந்த சில தினங்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அடுத்தது பின்லாந்தில் உள்ள மைக்ரோசாப்டின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலையில் 1,850 பேரை வீட்டுக்கு அனுப்பியது.
இந்தியா வந்த டிம் குக், மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபட்டு தனது பயணத்தைத் தொடங்கி, பெங்களூர், ஹைதராபாதில் மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் மேப்ஸ், செயலி உருவாக்க மையங்களை ஏற்படுத்துவதாக அறிவித்தார்.
பாலிவுட் நட்சத்திரங்களுடன் விருந்துண்டு, கிரிக்கெட் போட்டியை நேரில் ரசித்து தனது இந்திய பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக்கிக் கொண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசி சென்றிருக்கிறார். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வேறூன்ற அவரது பயணம் விதை போட்டிருக்கிறது.
பில் கேட்ஸால் வளர்த்தெடுக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது இந்தியரான சத்யா நாதெள்ளாவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பைத் தொடருமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அந்நிறுவனத்தின் ஆள்குறைப்பு நடவடிக்கை.
பின்னணி என்ன?
சாதாரண ரக செல்போன்கள் புழக்கத்தில் இருந்த காலத்தில் நோக்கியா மற்றும் மோட்டரோலா இடையேதான் கடும் போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் நோக்கியாவின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் மோட்டரோலா விலகியது. 2012-ம் ஆண்டு மோட்டரோலா நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கியது.
இதையடுத்து நோக்கியா போனுக்கு இயங்குதளம் அளித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தை வாங்கலாம் என்று நினைத்தது.
சாஃப்ட்வேரிலிருந்து ஹார்ட்வேரிலும் கால் பதிக்கலாம் என நிறுவனத்தின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் நினைத்தார். 2013-ம் ஆண்டில் 720 கோடி டாலருக்கு வாங்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கை 2014-ல் செயல்வடிவம் பெற்றது. சென்னையில் உள்ள ஆலை தவிர, உலகின் அனைத்து பகுதிகளில் உள்ள நோக்கியா ஆலையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
சாதாரண செல்போனிலிருந்து கலர் செல்போன் வந்து அடுத்து தொடுதிரை (டச் ஸ்கிரீன்) வசதியோடு கூடிய ஸ்மார்ட்போன் வந்தது. இந்த காலகட்டத்தில்தான் சாம்சங், சோனி போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டன.
இந்த காலகட்டத்தில்தான் ஸ்மார்ட்போனுக்கு மிகவும் அவசியமான இயங்குதளம் முக்கியமான அம்சமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்தின. இதனால் பிற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சக்கைபோடு போட்டன.
போதாக்குறைக்கு கூகுள் நிறுவனமும் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய எழுச்சியோடு மோட்டரோலா ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தியது.
ஒரு காலத்தில் நோக்கியா போன் மட்டுமே என்ற நிலையில் இந்தியச் சந்தையில் கோலோச்சிக் கொண்டிருந்த நோக்கியா தயாரிப்புகள் கால ஓட்டத்தில் கரையும் நிலையில் மைக்ரோசாப்ட் கையில் வந்தது.
பேசிக் மாடல் செல்போனிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு அனைவரும் மாறியபோது அந்த மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மைக்ரோசாப்டின் லூமியா போன்கள் இருக்கவில்லை.
என்ன காரணம்?
மைக்ரோசாப்டின் இயங்கு தளம் பிற செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்று அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை. இதனாலேயே மைக்ரோசாப்ட் லூமியா செல்போன்கள் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று அந்தப் பதவிக்கு வந்தார் இந்தியரான சத்யா நாதெள்ளா. ஆனால் என்ன நோக்கத்தில் நோக்கியா நிறுவனத்தை ஸ்டீவ் பால்மர் வாங்கினாரோ அதை நாதெள்ளாவால் நிறைவேற்ற முடியவில்லை.
எதிர்கால உருவாக்க ஸ்மார்ட்போன் பிரிவை தாய்வானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சமீபத்தில் 35 கோடி டாலருக்கு விற்று விட்டது மைக்ரோசாப்ட். இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வியட்நாம் மற்றும் ஹனோயில் உள்ள செல்போன் தயாரிப்பு ஆலைகள் ஃபாக்ஸ்கான் வசம் சென்றுவிட்டது.
இந்நிறுவனம் ஹெச்எம்டி குளோபல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கி செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனங்களில் பணி புரிந்த 4,500 மைக்ரோசாப்ட் பணியாளர்களும் இப்போது ஹெச்எம்டி குளோபல் ஊழியர்களாகிவிட்டனர்.
இது தவிர, நோக்கியா நிறுவன செயல்பாடுகளை ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் படிப்படியாகக் குறைத்து வருகிறது.
அதேசமயம் நோக்கியா நிறுவனத்தைக் கையகப்படுத்தியதிலிருந்து ஏற்பட்ட நஷ்டம் 760 கோடி டாலரை நிதிச் சுமையாக தனது ஆண்டுக் கணக்கில் சேர்த்துள்ளது மைக்ரோசாப்ட்.
கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியது மைக்ரோசாப்ட். இவர்கள் அனை வருமே முன்னாள் நோக்கியா ஊழியர்கள்தான்.
இதனிடையே அடுத்த ஆண்டில் சர்ஃபேஸ் பிராண்டட் போன்களை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோக்கியா அனேகமாக லூமியா 650 மாடல் ஸ்மார்ட்போன்தான் இந்நிறுவனத்தின் கடைசி தயாரிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விண்டோஸ் போன்கள் சரிவர விற்பனையாகாவிட்டால் சர்ஃபேஸ் போன்கள் தயாரிப்பில் ஈடுபடலாம் என மாற்று திட்டத்தை மைக்ரோசாப்ட் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் வரலாற்றில் மிகப் பெரிய தவறு நோக்கியா நிறுவனத்தை வாங்கியதுதான் என்று கூறப்படுகிறது.
இந்நிறுவனத்தின் இயங்குதளம் (ஓஎஸ்) ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் சர்பேஸ் போன்கள் மட்டுமின்றி எக்ஸ்பாக்ஸ் ஒன்கேம் உள்ளிட்டவற்றிலும் செயல்படக் கூடியது.
ஆனால் சமீபத்திய வெளியீடான விண்டோஸ் 10 இயங்குதளத்தை பிற செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்கத் தயார் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இது நிறுவனம் செல்போன் தயாரிப்பிலிருந்து படிப்படியாக விலகுவதையே காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே நோக்கியா நிறுவனம் தாய்வான் நிறுவனமான ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா என்ற பிராண்டு பெயரில் செல்போன்களைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
முதல் பத்தியில் கூறியதுபோல ஆப்பிள் நிறுவனத்துக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் இந்த விஷயத்தில் ஒரு தொடர்பு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அது எந்த தொழில்நுட்பத்தில் வலுவாக உள்ளது என்பதை உணர்ந்து அதை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் ஹைதராபாதிலும், பெங்களூரிலும் மேம்பாட்டு மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள். ஆப்பிள் ஐ போன் பிரத்யேக விற்பனை மையம் ஏற்படுத்துவதற்கான காலம் விரைவில் கைகூடலாம்.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமோ இதுவரை தாங்கள் எந்த நுட்பத்தில் (இயங்குதள உருவாக்கம்) வலுவாக இருந்தனரோ அதிலிருந்து விலகி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட் டது அந்நிறுவனத்துக்கு பாதகமாக அமைந்து விட்டது.
முதலைக்கு தண்ணீரில்தான் பலம் அதிகம். அதேபோல கரையில் இருக்கும்வரைதான் யானை வலுவோடு இருக்கும். ஆப்பிள் நிறுவனம் தனது பலத்தை உணர்ந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமோ 720 கோடி டாலரை இழந்தும் இன்னமும் ஊசலாட்ட மனோ நிலையில் உள்ளது. வெளியேறும் முடிவை உடனடியாக எடுத்து, விண்டோஸ் இயங்கு தளத்தில் முழு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம். எல்லாம் சத்யா நாதெள்ளாவின் கையில்தான் உள்ளது.
- ramesh.m@thehindutamil.co.in