Published : 09 May 2016 11:44 AM
Last Updated : 09 May 2016 11:44 AM

சுற்றுச்சூழலும் பொருளாதாரமும்

சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் இரண்டறக் கலந்தது. எப்பொழுதெல்லாம் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறதோ அப்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பொருளாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. ஆனால் தற்போது சுற்றுச்சூழல் பிரச்சினையை பொறுத்தவரை உலக நாடுகள் விழித்துக் கொண்டுள்ளன என்றே சொல்லலாம். குறிப்பாக பாரீஸில் பருவநிலை மாநாட்டுக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் புவி வெப்பமயமாதலைக் குறைக்கவேண்டும் என்ற உடன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் இது வளரும் நாடுகளுக்கு பாதிப்பாக அமையும். மேலும் இந்த உடன்பாட்டை எட்டுவதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தற்போதுதான் ஓரளவு வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது திணிக்கின்றன. இதனால் வளர்ச்சி தடைபடுகிறது. டீசல் கார்களுக்குத் தடை, வாகன மாசை தடுப்பதற்கு விதிகள் என பல்வேறு நடவடிக்கைகளை அரசும் எடுத்து வருகிறது. ஆனால் இது போதாது மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.

பருவ நிலை மாற்றத்தால் 2100-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.7 சதவீதத்திற்கு பாதிப்படையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

வளிமண்டலத்தை பாதிக்கும் வாயுக்களான பசுமைக் குடில் வாயுக்களை (சிஎப்சி எனப்படும் குளோரோ புளுரோ கார்பன்) வெளியிடுவதில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.

5.8 சதவீத பசுமை குடில் வாயுக்களை இந்தியா வெளியிடுகிறது

பசுமைக் குடில் வாயுக்கள் 1992ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டு வரை 67.1% அதிகரித்துள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 85% அதிகரிக்கும் என கணிக்கப் பட்டிருக்கிறது.

2022-ம் ஆண்டிற்குள் 175 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றம் குறித்த குழுவை அமைத்துள்ளார். இதில் காற்றாலை ஆற்றல், கடற்கரை பகுதி மேலாண்மை, கழிவுகள் மேலாண்மை, பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.

நிலக்கரி மூலம் அதிகம் சுற்றுச்சூழலும் பருவநிலையும் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு நிலக்கரிக்கு விதிக்கும் வரியை அதிகப்படுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு நிலக்கரி ஒரு டன்னுக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியது. 2015ம் ஆண்டு நிலக்கரி ஒரு டன்னுக்கு 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

2017 ம் ஆண்டு மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் மற்றும் பயோடீசல் பயன்பாட்டை கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

வாகன மாசுபாட்டை குறைப்பதற்காக பாரத் ஸ்டேஜ் 4 விதிகளில் இருந்து நேரடியாக பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதிகளால் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், நைட்ரஜன் ஆக்ஸைடு அளவை குறைக்கவும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மாசுத் தன்மை உடைய பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும் விவசாயத்தை பெருமளவில் பாதிக்கிறது.

அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவமழை பொழிவு குறைவாக இருப்பது விவசாயத்தை பாதிக்கின்றன.

1960-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 40 சதவீதம் பங்களிப்பு செய்த விவசாயம் தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் சீரழிவு மூலம் வருடத்திற்கு 80 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. அதாவது மொத்த பொருளாதாரத்தில் 5.7 சதவீதம்.

இந்தியாவில் அதிக அளவு வெப்பம் நிலவுவதால் கோதுமை உற்பத்தி ஆண்டுக்கு 70 லட்சம் டன் குறைகிறது. மேலும் ஒரு ஹெக்டேருக்கு ஒரு டன் அரிசி உற்பத்தியும் குறைகிறது.

பாரீஸ் பருவநிலை மாநாடு

கடந்த ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வரைவு தீர்மானம் வளரும் நாடுகளுக்கு பாதிப்பாக அமையும். ஏனெனில் வளரும் நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வேண்டியிருக்கும்.

இதற்காக வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x