

ஸ்டார்ட்அப்-களின் பொற்காலம் முடிந்ததா என்று நினைக்கும் அளவுக்கு சமீப காலங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பற்றி எந்த நல்ல செய்தியும் வெளியாகவில்லை. ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஆட் குறைப்பு, சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்து வந்த முக்கிய அதிகாரி கள் வெளியேறி வருகிறார்கள், தொடர்ந்து நிறுவனங்கள் மூடப்படுகின்றன, நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்கிறது என ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
கடந்த வாரம் பிளிப்கார்ட் பற்றி இரண்டு செய்திகள் வெளியாகின. இரண்டுமே நல்ல செய்தி இல்லை. முதலாவது பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பை மார்கன் ஸ்டான்லி நிறுவனம் குறைத்திருக்கிறது.
மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் பண்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் இறுதியில் ஒரு பிளிப்கார்ட் பங்கு 142 டாலர் என்று மதிப்பிட்டிருந்தது. டிசம்பர் 2015-ல் 38.2 சதவீதம் குறைத்து ஒரு பங்கு 103.94 டாலராக மதிப்பிட்டது. கடந்த மார்ச்சில் 15.5 சதவீதம் குறைத்து 87.9 டாலராக குறைத்தது.
இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால், இந்த மதிப்புகள் எல்லாம் காகிதத்தில் இருப்பவை, நாங்கள் சந்தையில் மேலும் முதலீட்டை திரட்டும் போதுதான் எங்களது உண்மையான மதிப்பு தெரியும் என்று கூறினார்.
இதையாவது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும். சந்தை மதிப்பு குறைவதாலோ உயர்வதாலோ நேரடியாக பாதிப்பில்லை. தவிர சந்தை மதிப்பு தொடர்ந்து உயர முடியாது, ஏற்ற, இறக்கங்கள் இருக்கதான் செய்யும். ஆனால் இன்னொரு செய்தி பிளிப்கார்ட் நிறுவனத்தின் இமேஜை பாதிக்க கூடியது.
ஐஐஎம் மற்றும் ஐஐடி!
இந்தியாவின் முக்கியமான உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய நிறுவனங்களில் வளாகத் தேர்வு மூலம் மாணவர்களை வேலைக்கு எடுத்து வருகிறது பிளிப்கார்ட். கடந்த டிசம்பரில் பல மாணவர்களை பிளிப்கார்ட் வேலைக்கு எடுத்தது. ஜூன் 2016-ல் பணியில் சேருமாறு முன்பு பணி ஆணை கொடுத்திருந்தது. ஆனால் இப்போது நிறுவனத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் ஆறு மாதங்கள் கழித்து டிசம்பரில் பணிக்கு வருமாறு பிளிப்கார்ட் இப்போது தெரிவித்திருக்கிறது. தவிர வேலைக்கு சேரும் சமயத்தில் ஊக்கத்தொகையாக 1.5 லட்ச ரூபாயும் தருவதாக கூறியிருக்கிறது.
இது குறித்து ஐஐஎம் அகமதாபாத் நிறுவனம் பிளிப்கார்ட்க்கு கடிதம் எழுதியுள்ளது. இதில், மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும் பிளிப்கார்ட் நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததில் அவர்களின் தவறு என எதுவும் கிடையாது. உங்கள் நடவடிக்கையால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். தவிர அவர்களும் கல்விக்கடன் செலுத்தும் நிலையில் இருக்கிறார்கள் என ஐஐஎம் கடிதம் எழுதியது.
இதற்கு பதில் அளித்த பிளிப்கார்ட், இது ஒரு கடினமான முடிவு. ஆனால் எங்களுக்கு இது முக்கியமான முடிவு. நிச்சயம் அவர்களை நாங்கள் எடுத்துக்கொள்வோம். தேதி மாற்றப்பட்ட பணி ஆணை இன்னும் சில நாட்களில் அனுப்பப்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பிளிப்கார்ட் தவிர கார்டெகோ, கிளிக்லேப்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களும் இதுபோன்று சில மாணவர்களுக்கு கால நீட்டிப்பு கடிதம் கொடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கால நீட்டிப்பு செய்யப்பட்ட மாணவர்களை ஓலா மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முன் வந்திருக்கின்றன.
மேலும், இதுபோன்ற கல்வி நிலையங்களில் முதல் நாள் நடக்கும் நேர்காணல்களில் அங்கு படிக்கும் சிறந்த மாணவர்கள் கலந்துகொள்வார்கள். இனி முதல் நாள் நேர்காணலில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொள்வதை தவிர்க்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
தவிர, பொதுவாக டிசம்பரில் வளாக நேர்முகத்தேர்வு நடக்கும். ஆனால் இதுபோன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு ஏப்ரலில் தனியாக வளாகத் தேர்வு நடத்த ஐஐடி மெட்ராஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளிப்கார்டின் இந்த முடிவு காரணமாக சில மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டாலும், இதனால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. பிளிப்கார்ட் இல்லை யென்றால் இன்னொரு நிறுவனத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் பிளிப்கார்டின் சரிந்த இமேஜை மீண்டும் மேலே கொண்டு வர முடியுமா?