

‘2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே இந்தியாவின் இலக்கு’ என்று 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உரக்க அறிவித்தார். கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இப்போது இந்தியாவின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும் இந்த வளர்ச்சி 5 டிரில்லியன் டாலர் (ரூ.390 லட்சம் கோடி) என்கிற இலக்கை எட்ட உதவுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் அதனுடைய முதல் டிரில்லியன் டாலரை 2007-ம் ஆண்டிலும் இரண்டாவது டிரில்லியன் டாலரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டிலும் தொட்டது.
மூன்றாவது டிரில்லியனை எட்டாண்டுகள் கழித்து 2022-ம் ஆண்டில் தொட்டிருக்கிறது. பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மூன்றாவது டிரில்லியன் என்கிற மைல்கல்லை
இந்தியா வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.
எனினும், பெருந்தொற்றுக்குப் பிறகான அதிகாரப்பூர்வமான கணக்கீட்டின்படியும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்)கணிப்பின்படியும் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரத்தை 2027-ம் ஆண்டில்தான் எட்டமுடியும் எனத் தெரியவந்திருக்கிறது.
ஆக 2022-ல் 3 டிரில்லியனாக இருக்கும் இந்தியப் பொருளாதாரம், புதிய கணிப்புகளின்படி 5 டிரில்லியன் டாலரைத் தொட இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். இந்த இலக்கை அடைவதற்கு இதுவரை மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன, இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை துறைவாரியாக சுருக்கமாகப் பார்க்கலாம்.
வேளாண்துறை
பயிர் இழப்பு, சந்தையுடனான தொடர்பு, பருவநிலை மாற்றம், உர விலை உயர்வு போன்ற சவால்களை வேளாண் துறை எதிர்கொண்டு வருகிறது. வேளாண்துறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியமான ஒன்றாகும்.
இன்றைய நிலையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு வேளாண்துறையின் பங்கு சுமார் 400 பில்லியன் டாலராகும். இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் வேளாண்துறையின் பங்களிப்பு இப்போது இருக்கும் அளவைப் போல் இரண்டு மடங்காக உயர வேண்டும்.
2021-22 நிதி ஆண்டில் வேளாண்துறைக்கான கடன் தொகை ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2021 செப்டம்பர் வரை ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இதோடு ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் 2.5 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.2 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும், சந்தையோடு இத்துறையைத் தொடர்புபடுத்துவதில் தீவிரமான உந்துதல் தேவைப்படுகிறது.
தொழில்துறை
நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு குறை
வாகும்.இந்நிலையில் இந்தியாவின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டத்தை (Production Linked Incentive – PLI)அறிவித்திருக்கிறது. இதற்காக
ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை சுமார் ரூ.3 லட்சம் கோடி ஆகும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் – அணுசக்தி, விண்வெளி, ராணுவம் போன்றவை - கணிசமான அளவிலும் மற்ற துறைகளில் பெருமளவுக்குத் தனியாரை அனுமதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
குறு, சிறு, நடுத்தர வணிகத் துறையின் கீழ் சுமார் 6 கோடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜிடிபியில் இதன் பங்களிப்பு முக்கியமாக இருப்பதோடு வேலை வாய்ப்பிலும் மிகவும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இத்துறையிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. இது தவிர, தொழிலாளர் நலச் சட்டங்களிலும் அடிப்படையான சில மாறுதல்களைச் செய்திருக்கிறது.
ஏற்றுமதித் துறை
வணிகம் செய்வதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருள்கள்’ திட்டத்தில் பல
மாற்றங்களை மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம்கொண்டுவந்திருக்கிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு சுமார் 80 பில்லியன் டாலரை கடந்த ஆண்டு ஈர்த்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 676.2 பில்லியன் டாலர் என்கிற அளவை எட்டியது. சேவை ஏற்றுமதி மட்டும் சுமார் 254 பில்லியன் டாலர் ஆகும்.
உள்கட்டமைப்பு
இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டுமெனில் சுமார் 1.4 டிரில்லியன் டாலர் அளவுக்கு உள்கட்டமைப்பில் செலவிட வேண்டும் என்று 2021-22நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தேசிய உள்கட்டமைப்பு வழிமுறை (NIP)திட்டத்தின் கீழ் 2020 முதல் 2025-ம் ஆண்டு வரை 1.5டிரில்லியன் டாலர் செலவிட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதிக மூலதனம் அதிக வளர்ச்சியையும் அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
கதி உள்கட்டமைப்புத் திட்டம் இந்தியாவின் 75-வது சுதந்திர நாளன்று பிரதமர் ரூ.100 லட்சம் கோடி மதிப்புள்ள ‘கதி சக்தி ’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அறிவித்தார். தேசிய நெடுஞ்சாலை இணைப்பை சுமார் 2,00,000 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிப்பது, எரிவாயு குழாய் இணைப்பை 35,000 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிப்பது, 200-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், அனைத்துக் கிராமங்களுக்கும் 4ஜி இணைய வசதி கிடைக்கச் செய்வது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 87.7 கிலோவாட்டிலிருந்து 225 கிலோவாட்டுக்கு அதிகரிப்பது உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றத்தால் அனைத்து நாடுகளும் கடுமையான நிதி இழப்பைச் சந்திக்க வேண்டிவரும் என இத்துறை
சார்ந்த நிபுணர்கள் உலக நாடுகளை எச்சரித்து வருகிறார்கள்.
அதன்படி, இந்தியாவுக்கான இழப்பு 2050-ம் ஆண்டில் சுமார் 6 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், மாசு ஏற்படுத்தும் வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக இப்போது எடுத்து வரும் முயற்சிகளும், முதலீடுகளும் தொடர்ந்தால் இதன் மூலம் 2070 ஆண்டுக்குள் சுமார் 11 டிரில்லியன் டாலர் வரை ஆதாயம் கிடைக்கும் என டெலாய்ட் என்கிற ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 500ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவுவது என இந்தியா ஏற்கனவே திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
திட்டங்களுக்குச் செலவிடுவது பல லட்சம் கோடிகளாக இருந்தாலும் அதை ஒழுங்காக செயல்படுத்தாமல் இருந்தாலோ அல்லது அரசின் அரசியல் கொள்கைகள் சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தினலோ 5 டிரில்லியன் இலக்கு 2027-ம் ஆண்டுக்குப் பிறகும் வெறும் ஆவணமாக பதிவேட்டில்தான் இருக்கும்!
- சித்தார்த்தன் சுந்தரம்
sidvigh@gmail.com