Published : 16 May 2016 01:29 PM
Last Updated : 16 May 2016 01:29 PM

நூறாண்டாய் மாறா மனம்

நூறாண்டு வாழணும் என்று வாழ்த்துவோர் பலர். ஆனால் நூறாண்டு வாழ்வோர் வெகு சிலர். கிரிக்கெட்டில் மட்டும் சதம் சாத்தியம். ஆனால் வாழ்க்கையில் சதம் அடிப்போர் வெகு சொற்பம். ஆனால் காலங்களைக் கடந்து மணம் வீசிக் கொண்டிருக்கிறது மைசூர் சாண்டல் சோப் எனப்படும் சந்தன சோப்.

சந்தன சோப் என்றாலே அது மைசூர் சாண்டல் சோப்தான் என்ற அளவில் இன்றளவும் அதன் நறுமணம் மாறாமல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

மைசூர் மன்னர் நல்வாஜி கிருஷ்ண ராஜ உடையார் மற்றும் திவான் எம். விஸ்வேஸ்வரையா ஆகியோரால் 1916-ம் ஆண்டு மே 10-ம் தேதி தொடங்கப்பட்டது. சந்தன மரத்திலிருந்து சந்தன எண்ணெய் எடுப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த ஆலையிலிருந்து 1918-ம் ஆண்டிலிருந்து சந்தன சோப்புகள் விற்பனைக்கு வந்தன.

சந்தன எண்ணெய் எடுக்கும் பணியை தொழில்துறை ரசாயன வல்லுநரான எஸ்ஜி சாஸ்திரி மேற்கொண்டார். இதையடுத்து பெங்களூருவில், மகாராஜாவால் உருவாக்கப்பட்ட ஆலையில் சந்தன சோப்புகள் தயாராயின.

1980-ம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனமாக இது மாறியதோடு கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடெர்ஜென்ட் லிமிடெட் என பெயர் மாற்றம் பெற்றது.

2006-ம் ஆண்டில் உலகிலேயே இயற்கையான சந்தன எண்ணெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட குளியல் சோப் என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இதற்குக் காரணமான புவிசார் குறியீட்டை (ஜிஐ) பெற்றது. அதே ஆண்டிலேயே நிறுவனத்தின் விளம்பர தூதராக எம்.எஸ். தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2012-ம் ஆண்டில் மில்லினியம் எனும் அதிக விலை கொண்ட சோப்பை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 150 கிராம் சோப்பின் விலை ரூ.720 ஆகும். இந்த சோப்பில் 3 சதவீத சுத்தமான சந்தன மர எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாக இருக்கிறது.

பெங்களூரு, மைசூரு, ஷிமோகாவில் தற்போது ஆலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் குளியல் சோப் மட்டுமின்றி சலவை சோப், அகர்பத்தி மற்றும் அழகு சாதனப் பொருள்களையும் தயாரிக்கிறது. சமீபத்தில் முகப் பொலிவுக்கான ஃபேஸ் பேக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரம்ஜி இந்நிறுவனத்தைக் கையகப்படுத்த முயன்றபோது ஊழியர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முயற்சியை கர்நாடக அரசு கைவிட்டது. ஆண்டுக்கு 40-50 கோடி ரூபாய் லாபம் ஈட்டிவரும் அரசு நிறுவனத்தின் பங்குகளை விலக்கிகொள்ளும் திட்டம் ஏதும் இல்லை. மேலும் ஆண்கள் குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவையும் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயல் அதிகாரி ரத்ன பிரபா தெரிவித்திருக்கிறார்.

இயற்கை மணம்தான் நிலைத்திருக்கும். செயற்கையான மணம் காலப்போக்கில் காணாமல் போகும் என்பதற்கு இயற்கை மணம் வீசும் சந்தன சோப் நூறாண்டுகளாய் நிலைத்திருப்பதே சிறந்த சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x