

நாம் இப்போது ‘ஸ்டார்ட்அப்’ யுகத்தில் இருக்கிறோம். இந்தியாவில் 1990-களின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது. விளைவாக, கடந்த 25 ஆண்டுகளில் ஏனைய துறைகளைவிடவும், தகவல் தொழில்நுட்பத்துறை மிகப் பெரும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியுள்ளது. 2010 வரையில் ஐடி துறை என்பது பெருநிறுவனங்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை வழங்கக்கூடியதாக இருந்தது.
2010-க்குப் பிறகு இதில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. ‘ஸ்டார்ட்ப்அப்’ என்கிற தொழில் பார்வை உருவானது. இந்தியாவில் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் தொழில்நுட்பத்தை இணைத்து புதிய பொருளாதார சாத்தியத்தை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கின.
கடந்த பத்து ஆண்டுகளில் வர்த்தகம்,போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தின் இணைவு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி ஸ்டார்ட்அப் நிறுவனங்களையே மையப்படுத்தி அமையும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. அப்படியாக, தமிழ்நாடு மேற்கொண்டிருக்கும் முயற்சிதான் ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ என்று அடையாளப்படுத்தப்படும் ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்’ (Tamil Nadu Startup and Innovation Misson). சுருக்கமாக டான்சிம் என்று அழைக்கப்படுகிறது.
2018-ல் தமிழ்நாடு அரசு டான்சிமைத் தொடங்கியது. எனினும், கரோனா, தேர்தல் சூழல் காரணமாக அதில் பெரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு டான்சிமை முன்னெடுத்துத் செல்லத் தொடங்கி இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சார்ந்து தமிழ்நாடு அரசு கொண்டிருக்கும் திட்டம் என்ன, தற்போது தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்து டான்சிமின் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதனுடன் விரிவாக உரையாடியதிலிருந்து….
தமிழ்நாட்டில் டான்சிம் என்ன செய்யப்போகிறது?
தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப்நிறுவனங்களைதொடங்குவதற்கேற்ற சூழலை உருவாக்குவதுதான் டான்சிமின் அடிப்படை நோக்கம். இந்தியாவில் பல மாநிலங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழலை உருவாக்கும் முயற்சியை 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டன. துரதிருஷ்டவசமாக தமிழ்நாடு இதில் கவனம் செலுத்தவில்லை.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ்நாடு அரசின் கவனம் ஸ்டார்ட்அப் பக்கம் திரும்பியது. அதிலும் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் தமிழக பட்ஜெட்டில் ஸ்டார்அப்களுக்கென எவ்வித அறிவிப்பும் வந்தது கிடையாது. முதல் முறையாக இந்த 2022-23-ம் நிதி ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இப்போது சிறந்த ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் மானியத்தை அரசு அளிக்கிறது. இதற்கென பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடி பிரிவினர்ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கினால் அவற்றை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள், டெண்டர் கோராமல் ரூ.50 லட்சம் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யலாம் என்பதற்கான அரசாணை புதிதாக போடப்பட்டுள்ளது. இதற்காக அரசுத் துறைகளையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் இணைக்கும் பணியை டான்சிம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
இதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு துறைகள் அத்துறைகள் சார்ந்த ஸ்டார்ட்அப்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். வணிகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமல்ல சமூக மேம்பாடு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகிறோம்.கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஸ்டார்ட்அப் சிந்தனையை உருவாக்க, ஐஐடி-யில் இருப்பதைப் போன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.55 கோடி செலவில் ஐடிஎன்டி மையம் உருவாக்கப்படுகிறது. இதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
தகவல் தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்ததும் அதை சுவிகரித்துக்கொண்ட நகரங்களில் சென்னையும் ஒன்று. முக்கியமான இந்திய ஐடி நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் சென்னையில் உள்ளன. ஆனால், ஏன் பெங்களூருக்கு நிகராக சென்னையில் ஸ்டார்ட்அப் சூழல் உருவாகவில்லை?
தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிதாக உருவாகாததற்கு நமது மனநிலையும் ஒரு காரணம்.வெளியிலிருந்து கடன் வாங்குவதில் தமிழர்களுக்கு பெரிய தயக்கம் உள்ளது. அதனால் நிதி திரட்டுதல் பெரிய அளவில் நிகழவில்லை. 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 100 யுனிகார்ன் உள்ளன.
தமிழகத்தில் 6 யுனிகார்ன்தான் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களே இல்லை என்று சொல்ல முடியாது.‘சாப்ட்வேர் அஸ் சர்வீஸ்’(SaaS) நிறுவனங்கள் பலவும் தமிழகத்திலிருந்துதான் செயல்படுகின்றன. பிரச்சினை என்னவென்றால், பெங்களூரு போல், மும்பை போல் நாம் நம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், முதலீட்டுக்கான சாத்தியம் குறைந்துவிடுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை, அது இந்தியாவுக்குள் நுழைந்த தொடக்க காலத்திலே தமிழ்நாடு கவனம் செலுத்தியதன் விளைவுதான் இன்று சென்னையில் ‘டைடல் பார்க்’ போன்ற மையங்கள் உருவாகி இருக்கின்றன. இனி வரும் காலம் ஸ்டார்ட்அப்களின் காலமாகத்தான் இருக்கப்போகிறது.
எனவே, அதில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இந்த வாய்ப்பை தவறவிட்டால் நாம் மிகவும் பின்தங்கிவிடுவோம்.
இந்தச் சூழலை மாற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இரு தளங்களில் செயல்படத் திட்டுமிட்டுள்ளோம். முதலாவது, தொழில்முனைவோர் மத்தியிலும் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் தமிழ்நாட்டில் உள்ள தொழில்வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதேபோல், முதலீட்டார்களிடம் தமிழ்நாட்டு தொழில்சூழலை எடுத்துக்காட்டப்போகிறோம்.
பெரியமுதலீட்டு நிறுவனங்களின் (Venture Capital) அலுவலகங்கள் தமிழ்நாட்டில் இல்லை. சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இங்குள்ளனர். இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு இங்கு அலுவலகம் தொடங்குமாறு பேச்சு நடத்திவருகிறோம். இங்குள்ள தமிழக இளைஞர்கள் ஸ்டார்ட் அப் தொழில்களுக்கு பெங்களூரில் அதிக வாய்ப்புள்ளதாகக் கூறி அங்கு புலம் பெயர்கின்றனர்.
இத்தகையோரை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டிலே நிறைய வாய்ப்புள்ளது என்பதை புரிய வைப்பதற்கும் அதிக விழிப்புணர்வு தேவை. தொழில் தொடங்குவோர் உள்ளனர் என்று முதலீட்டாளர்களிடமும்,முதலீட்டுக்கு வாய்ப்புள்ளது என்று தொழில் தொடங்குவோரிடமும் பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டி
யுள்ளது. அதைத்தான் இப்போது செய்யத் தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் பெங்களூரில்தான் அதிக எண்ணிக்கையில் யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்குவது சார்ந்து திட்டம் வைத்துள்ளீர்களா?
யுனிகார்ன் நிறுவனங்களை அரசோ அல்லது தனிப்பட்ட நபர்களோ உருவாக்க முடியாது. அந்நிறுவனம் சார்ந்திருக்கும் துறையின் வளர்ச்சிதான் அதைத் தீர்மானிக்கிறது. யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதையும் தாண்டி, வலுவான நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான நோக்கம்.
வருமானம் ஈட்டுவதில் வலுவாக உள்ள நிறுவனங்களை வளர்த் தெடுக்கவே விரும்புகிறோம். இத்தகைய ஸ்டார்ட்அப்-களின் மதிப்பீடு குறைவாக இருந்தாலும், இவற்றின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. அடிப்படைகள் வலுவாக உள்ள நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர்களை சென்றடைவது உள்ளிட்ட வாய்ப்பு
களை உருவாக்கும்போது அவை யுனிகார்ன் நிலையை எட்டும்.
ஸ்டார்ட்அப் தளத்தைப் பொருத்தவரையில் 10 ஆயிரம் நிறுவனங்களை உருவாக்கினால்தான் ஆயிரம் நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நிற்கும். இதில் சில நிறுவனங்கள் யுனிகார்ன்களாக வளரும். எங்கள் கவனம், பல தரப்பட துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கச் செய்வதுதான். அதுதான் பரந்துபட்ட வளர்ச்சியை சாத்தியப்படுத்தும்.
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளீர்களா? உதாரணத்துக்கு கல்வி, மருத்துவம்...
கரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு உடல்நலம் சார்ந்த ஸ்டார்ட்அப்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் முதலீட்டாளர்கள் அதில் கவனம் செலுத்தக்கூடும். ஆனால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து மட்டும் தன் அக்கறையை வெளிப்படுத்த முடியாது.
மாறாக சில அடித்தளக் கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். உதாரணமாக, சாஸ் நிறுவனங்களின் கட்டமைப்பு தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது. இவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தெடுப்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம். உரிய சந்தை வாய்ப்பு இல்லாமலேயே இந்த அளவுக்கு வளர்ந்துள்ள இந்நிறுவனங்களுக்கு டான்சிம் ஆதரவு அளித்தால் அவர்கள் மேலும் வளர்வதற்கு வாய்ப்புள்ளது.
பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம் நிலை நகரங்களுக்கு ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
சென்னையில் உள்ள வாய்ப்புகளும், வசதிகளும் பிற நகரங்களில் உள்ளவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வை போக்கும் முயற்சியாக இரண்டாம்நிலை நகரங்களிலும் ஸ்டார்ட்அப்மையங்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு நகரங்களில் ஸ்டார்ட்அப் மையங்கள் தொடங்கப்படுகின்றன.
இந்த நகரங்களை சுற்றியுள்ள கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது. அங்குள்ள முதலீட்டாளர்களை ஒருங்கிணைப்பது, வழிகாட்டிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகளை இந்த மையங்கள் மேற்கொள்ளும்.
பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினருக்கென ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?
ஒரு அரசு லாபம் ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்க முடியாது. கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்ல தொழிற்துறையிலும், சமூகரீதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் இன்று இந்த அரசு கருதுகிறது.
ஸ்டார்ட்அப் என்பது புதுமையானது.சராசரி தொழிலுக்கும், ஸ்டார்ட்அப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. லேத் பட்டரை நடத்துவது போல அல்லது ஹோட்டல் ஆரம்பிப்பது போல் அல்ல ஸ்டார்ட்அப். ஸ்டார்ட்அப் என்பது புதிய சிந்தனை உருவாக்கம். பல தொழில்களை உள்ளடக்கியது. இதற்கு உலகளாவிய பார்வை தேவைப்படுகிறது.
பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களுக்கு, குறிப்பாக ஐஐடி போன்றவற்றில் படிப்பவர்களுக்கு ஸ்டார்அப் நிறுவனங்களை தொடங்குவது தொடர்பான சிந்தனை அதிகம் உள்ளது. எல்லாருக்கும் ஐஐடியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடுவதில்லை.
யுனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் அவற்றை உருவாக்கியவர்களில் பட்டிலினத்தவர்களோ அல்லது பழங்குடியினத்தவர்களோ இருப்பதில்லை. எனில், அவர்களுக்கான வாய்ப்பை யார் உருவாக்கித் தருவது? அரசுதான் செய்ய வேண்டும். அது அரசின் கடமையும்கூட!
| யார் இந்த சிவராஜா? சிவராஜா மதுரையைச் சேர்ந்தவர். 1991-ல் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் வாய்ப்புகளை உணர்ந்து கம்ப்யூட்டர் விற்பனையை நண்பர்களுடன் தொடங்கியது இவரது முதல் தொழில் முயற்சி ஆகும். அப்போது இவருக்கு வயது 21. வேறு யாரிடமும் சென்று வேலை பார்ப்பதைவிடவும் சொந்தமாக தொழில் நடத்துவதில்தான் இவருக்கு ஆர்வம் இருந்தது. தொழிலை நுணுக்கங்களை அறிவதில் இவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. தன்னுடைய நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தினார். 2003-ல் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நண்பருடன் இணைந்து உருவாக்கினார். |
| தொழில் தொடங்குவதில் தான் எதிர்கொண்ட சிரமங்களை மற்ற தொழில்முனைவோர் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை நடத்த இவர் முடிவு செய்தார். இதற்காக தொடங்கப்பட்டதுதான் ‘நேடிவ்லீட்’ எனும் தன்னார்வ அமைப்பு. நல்ல தொழில்களுக்கு முதலீட்டு வாய்ப்பு ஏற்படுத்தித் தர ‘நேட்டிவ் ஏஞ்சல்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது தன்னார்வ நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளைக் கவனித்த தமிழக அரசு, டான்சிம்-க்கு தலைமை செயல் அதிகாரியாக இவரை தேர்வு செய்தது. |
எம்.ரமேஷ் ramesh.m@hindutamil.co.in