Published : 23 May 2016 11:56 AM
Last Updated : 23 May 2016 11:56 AM

உன்னால் முடியும்: தொழில்முனைவில் சமூக நலன்...

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீஜித், சென்னையில் பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். இங்கேயே தனக்கான தொழில் அடையாளத்தையும் தேடிக் கொண்டதுடன் தனது தொழிலின் மூலம் பல நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சமூக முனைவு பணியாகவும் இதை வளர்த்து வருகிறார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் ‘`வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

கேரளாவில் பிடெக் படித்து முடித்து விட்டு மதுரையில் உள்ள ‘தான்’ பவுண்டேஷ னில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். களஞ்சியம் சுய உதவி குழுக்கள் சார்ந்து மைக்ரோ பைனான்ஸ் துறையில் என் பணிகள் இருந்தன.

அதற்கு பிறகு சென்னை யில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வெல்குரோ பவுண்டேஷனில் சேர்ந்தேன். இவர்கள் மூலம் பலரும் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டு நிறுவனங்களிலும் பணியாற்றிய காரணத்தால் சமூக தொழில்முனைவு நடவடிக்கைகள் குறித்து இயல்பாகவே எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது.

சமூக தொழில்முனைவு என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டது கிடையாது. அதே சமயத்தில் லாபமில்லாமல் இயங்கவும் முடியாது.

சமூக வளங்களை பயன்படுத்துவது மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூகத்துக்கே திருப்பி அளிப்பதுதான் சமூக தொழில்முனைவு. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தோடு தனியாக தொழில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டேன்.

குறிப்பாக கிராமங்களில் பயன்படுத்தும் ஓலைகள், வாழைநார் கயிறுகள், பாய்கள் போன்றவற்றை பலரும் கைவினை தொழிலாக செய்து கொண்டிருப்பார்கள். இந்த கைவினை பொருட்களின் பயன்பாடு இப்போது கிடையாது என்பதால் இவர்களும் மாற்று வேலைகளைத்தேடி அலைகின்றனர்.

இந்தத் துறையில் புதிய முயற்சிகள், புதிய திறமை, புதிய யோசனைகளோடு செயல்பட்டால் வேலைவாய்ப்பையும், சந்தையையும் உருவாக்க முடியும் என்று யோசித்தேன்.

உதாரணத்துக்கு தமிழகத்தில் கோரை பாய் உற்பத்தியை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது எவரும் பாய் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்த தொழிலை நம்பிய பல குடும்பங்கள் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள்.

இவர்களுக்கான புதிய சந்தையை உருவாக்க வேண்டும் என்றால் கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய முயற்சிகளும் தேவையாக இருக்கின்றன. இதுவே டேபிள் மேட் என்கிற வகையில் சிறிய அளவிலான தயாரிப்பாக மாற்றுகிறபோது ஐரோப்பிய நாடுகளில் சந்தை உருவாகிறது. இதற்கு புதிய ஐடியா, புதிய திறமை, புதிய முயற்சிகள் தேவையாக இருக்கிறது. இதன் மூலம் கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இப்படியான சமூக முனைவுக்காக ரோப் இண்டர்நேஷனல் என்கிற நிறுவனத்தை தொடங்கினேன்.

சென்னை ஐஐடி-யின் உதவியுடன் இயங்கும் கிராமப்புற தொழில்நுட்பம் மற்றும் தொழில் காப்பகம் (RTBI) மூலம் முதலில் மதுரை அருகே கல்லுபட்டி பகுதியில் தொழிலை தொடங்கினேன். குறிப்பாக வாழைநார், பனைஓலை, சணல், எலிபண்ட் கிராஸ் பொருட்களைக் கொண்டு கூடைகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்தோம்.

வர்த்தகக் கண்காட்சிகள் மூலமும் சில்லரை வர்த்தக அங்காடிகள் மூலமும் இதற்கான சந்தையை உருவாக்கினோம். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினோம். அதற்கடுத்து ஈரோடு அருகே உள்ள கவுந்தபாடியில் இன்னொரு தொழில் மையம் தொடங்கினேன். அங்கு கோரைகள் கொண்டு செய்யப்படும் டேபிள் மேட் போன்ற தயாரிப்புகள் செய்தோம்.

வெளிநாடுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இது போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்தியாவில் டேபிள் மேட் போன்ற பொருட்கள் எல்லா இடங்களிலும் புழக்கத்தில் கிடையாது என்றாலும் ஸ்டார் பஜார், பேப் இந்தியா, வெஸ்ட் சைட் போன்ற சில்லரை வர்த்தக அங்காடிகளின் மூலமும் விற்பனையை உருவாக்கினோம்.

இப்போது நேரடியாக எங்கள் நிறுவனத்தில் 50 பேருக்கும் மேல் பணியாற்றி வருகின்றனர். தவிர 300 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளேன்.

சமூக தொழில்முனைவோராக வேலை வாய்ப்பை உருவாக்குகிறேன் என்பதற்காக எனது தயாரிப்புகள் விற்பனையாவதில்லை. தரமான உற்பத்திதான் நிலைக்க வைக்கும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 100 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர வேண்டும். இதன் மூலம் இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. அதை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்றார். இவர் போன்ற தொழில்முனைவோர்கள் ஊருக்கு ஒருவர் உருவானால் நாடு முன்னேறும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

maheswaran.p@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x