மதிப்பீடு அடிப்படையிலான முதலீடு அவசியமாவது ஏன்?

மதிப்பீடு அடிப்படையிலான முதலீடு அவசியமாவது ஏன்?
Updated on
2 min read

பொதுவாக, முதலீடுகளை மேற்கொள்வோர் குறைந்த விலையில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிறுவன பங்குகளை எதிர்நோக்குவது இயல்பு. அதிலும் குறிப்பாக பங்குச் சந்தை முதலீடுகளைப் பொறுத்தமட்டில் மிகுந்த எச்சரிக்கையோடு மதிப்பு குறைவாக உள்ள நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் அவற்றின் உண்மையான மதிப்பைவிட குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்.

ஒரு நிறுவனத்தின் பங்குகள் அந்நிறுவன மதிப்பைவிட குறைவாக மதிப்பிடப்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அது மிகவும் பிரபலமில்லாத நிறுவனமாக இருக்கலாம், மிகச் சிறப்பாக அந்நிறுவனம் செயலாற்றினாலும் அது கவனிக்கப்படாமலிருக்கலாம். அல்லது குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் மட்டுமே அதைக் கவனித்திருக்கலாம். இவை தவிர நிறுவனத்தின் பங்குகள் சரிவதற்கு வெளிக் காரணிகளும் காரணமாக அமைவதுண்டு. அல்லது பங்குச் சந்தையில் ஏற்படும் மிகப் பெரும் சரிவு காரணமாகவும் பங்கு விலை சரிவைச் சந்திக்கக்கூடும்.

எப்படியிருப்பினும் நிறுவன நிர்வாகத்திலும் அதன் வர்த்தக போக்கிலும் அடிப்படையில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. சில குறிப்பிட்ட துறைகளில் சுழற்சி அடிப்படையில் மாற்றங்கள் நிகழும். கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த சில துறைகள் இப்போது மாறுதலுக்கு உள்ளாகியிருக்கலாம். அதேசமயம் இதுவரையிலும் சிறப்பாக செயல்படாத துறை இப்போது மிகவும் விரும்பத்தக்க துறையாக மாறி அவற்றின் பங்குகள்தற்போது ஏற்றம் பெறலாம். இந்தப் பின்புலத்தை ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் முதலீடு மதிப்பீட்டு முதலீடு என்று அழைக்கப்படுகிறது.

மதிப்புமிக்க பங்குகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

2020-ம் ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் மதிப்பீடு என்பது அவ்வளவாக பார்க்கப்படாத ஒன்றாகத்தானிருந்தது. இதேபோல 1988-89 மற்றும் 2007-2008 காலகட்டங்களிலும் இதுதான் நிலைமை. கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மதிப்பீடு என்பது அவசியமான ஒன்றாக மாறி வந்துள்ளது.

இப்போது நடப்பு புவி அரசியல் காரணமாக பொருளாதார மாற்றங்கள் வெகுவாக நிகழ்ந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சூழலில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் சந்தையின் போக்கை மாற்றியமைப்பதோடு பொருள்களின் விலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தையும் நிதிச்சந்தையையும் வெகுவாக பாதித்துவிடுகிறது.

இவற்றையெல்லாம் யூகித்தே நிதி நிபுணர்களும், சந்தை கணிப்பாளர்களும் ஒருமுகமாக அடுத்த 12 மாதங்களுக்கு பங்கு முதலீட்டு சந்தையில் ஸ்திரமற்ற நிலை நிலவும் என்கின்றனர். இத்தகைய சூழலில் மதிப்புமிக்க நிறுவனங்களை தேர்வு செய்து அந்தப் பங்குகளை வாங்குவது சிறந்தது. பங்குச் சந்தை போக்கு மாறி ஏற்றம்பெறும்போது இந்நிறுவனங்களின் பங்கு விலையும் உயரும். நீண்ட கால அடிப்படையில் இத்தகைய முதலீடுகளை மேற்கொண்டால் அது நமக்கு சாதகமாக அமையும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு பங்குச் சந்தை குறித்து குறைவான அளவே தெரிந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் நிறுவனங்களின் அடிப்படை தன்மையை ஆராய்வதும் சந்தைப் போக்குக்கு ஏற்ப மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகளை தேர்வு செய்வதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. எனவே, நீங்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்பினால், மதிப்பீட்டு அடிப்படையில் செயல்படும் பரஸ்பர முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதே சிறந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in