

1996-ம் ஆண்டில் அந்த இடம் அவ்வளவு பிரபலம் இல் லாத பகுதி. சிப்காட் தொழிற் பேட்டை வளாகம் உருவான போதி லும் அது பெயர் சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் பரிச்சயமான பகுதி யாக இருக்கவில்லை. எப்போதாவது கார் பந்தயங்கள் நடைபெறும் சோழ வரம் மைதானத்துக்குச் செல்லுவோர் அப்பகுதியைக் கடந்து செல்வர்.
ஆனால் இப்போதோ இருங்காட்டுக் கோட்டை என்றாலே மிகவும் பிரபலம். அந்தப் பகுதி பிரபலமானதற்கு முக்கியக் காரணம் அங்கு உருவான ஹூண்டாய் கார் தொழிற்சாலை என்றால் அது மிகையல்ல. 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளில் கார் உற்பத்தியைத் தொடங்கியது கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம். இந்தியாவில் முன்னணி நிறுவனமாக வளர வேண்டும் என்பதுதான் ஆரம்ப கால இலக்காக இந்நிறுவனத்துக்கு இருந்தது.
இன்று 20-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் அந்நிறுவன வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.
கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் கார்ப்பரேஷன் (ஹெச்எம்சி) நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (ஹெச்எம்ஐஎல்) நிறுவனத்துடன் சேர்த்து 8 நாடுகளில் 17 ஆலைகள் உள்ளன.
இங்கிருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருபது ஆண்டுகளில் 23 லட்சம் கார்கள் ஏற்று மதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டில் 41 லட்சத்துக்கும் அதிகமான கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் சான்ட்ரோவில் தொடங் கிய இந்நிறுவன பயணம் இன்று எஸ்யுவி கிரெடாவில் வந்துள்ளது. இயான், ஐ10, கிராண்ட் ஐ10, எக்ஸென்ட், எலைய் ஐ20, ஆக்டிவ் ஐ 20, வெர்னா புளூடிக் 4 எஸ், நியோ எலண்ட்ரா, சாண்டா எப்இ, கிரெடா என 10 மாடல் கார்களை அறிமுகம் செய்து பல தரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு இந்தியச் சந்தை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 2-வது பிரிவை 2008-ம் ஆண்டில் தொடங்கி தற்போது உற்பத்தி அளவை 7 லட்சமாக உயர்த்தியுள்ளது. சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. 400 விநியோகஸ்தர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்கள் என நிறுவனம் தனது வளர்ச்சியை இந்தியா முழுவதும் வியாபித்துள்ளது.
பணி புரிவதற்கு சிறந்த நிறுவனமாகத் திகழ்வது, கார் விற்பனைச் சந்தையில் முன்னணியில் திகழ்வது, மக்களின் நம்பகத் தன்மை பெற்ற பிராண்டாக விளங்குவது, பிரீமியம் பிராண்ட் என்ற அந்தஸ்தை அடைவது இதுதான் 20-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் அடுத்தகட்ட இலக்கு என்று சபதமேற்றுள்ளார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஒய்.கே. கூ. இந்த உறுதிமொழியை நிறுவன ஊழியர்களிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இருபது ஆண்டுகளில் கனவை நனவாக்கிய நிறுவனத்துக்கு இலக்கை எட்டுவது கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது.
20-ம் ஆண்டு விழாவில் அடுத்த கட்ட இலக்கை எட்டுவதற்கான உறுதிமொழியை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒய்.கே. கூ-வுடன் (மத்தியில் இருப்பவர்) பகிர்ந்து கொண்ட அந்தந்த பிரிவின் தலைவர்கள்.