புவிசார் குறியீடு பயன் தருவது எப்போது?

புவிசார் குறியீடு பயன் தருவது எப்போது?
Updated on
4 min read

புவிசார் குறியீடு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பிராந்தியத்தின் தனித்துவமிக்கப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். உதாரணத்துக்கு, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லி, கோவில்பட்டி கடலை மிட்டாய்… தமிழ்நாட்டில் இதுவரையில் ஈத்தாமொழி தென்னை, காஞ்சிப் பட்டு, நாச்சியார்கோயி்ல் குத்து விளக்கு, தஞ்சாவூர் வீணை என 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பொருள் புவிசார் குறியீட்டைப் பெறுவதன் மூலம் அதன் தனித்துவம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இக்குறியீட்டைப் பெறுவதன் மூலம் அந்தப் பொருட்கள் இந்திய அளவில் கவனம் பெற முடியும். ஆனால், கள நிலவரம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டைப் பெற்ற பொருட்கள் முறையாக சந்தைப்படுத்தப்படுகிறதா, அப்பொருட்கள் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்படுகிறதா, புவிசார் குறியீட்டைப் பெறுவதில் பிற மாநிலங்களுடன் ஒப்பிட தமிழ்நாட்டின் இடம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம்

புவிசார் குறியீடு வழங்குவதன் முக்கிய நோக்கம், சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களை போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும் ஆகும். உதாரணமாக டார்ஜிலிங்கில் விளையும் தேயிலை பன்னாட்டு சந்தை மதிப்புடையதாகும். இந்த மதிப்பினை பயன்படுத்தி பல தேயிலை உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திக்கும் டார்ஜிலிங் தேயிலை என்று பெயரிட்டு சந்தைக்குள் நுழைவது காலம்காலமாக நடந்துவருகிறது. இதனால் நுகர்வோர் ஏமாறுவதுடன் உண்மையான உற்பத்தியாளர்களும் போலிகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் பட்டுச் சேலை பாரம்பரியமிக்கது. மதிப்புமிக்கது. ஆனால் உள்ளுர் கடைகளில் கூட ஓரு பட்டுப்புடவையில் காஞ்சிபுரம் லேபிளைபோட்டு, காஞ்சிபுரம் பட்டு என்று விற்றுவிடுவார்கள். உள்ளுர் விற்பனையாளருக்கும்கூட இது அசலா, போலியா என்று தெரியாத அளவுக்கு போலி பொருட்களின் தோற்றம் இருக்கும். இந்த முறைகேடுகளை புவிசார் குறியீடு கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவும் புவிசார் குறியீடும்

1995-ம் ஆண்டில் உலக வணிக அமைப்பு தொடங்கப்பட்டதை தொடர்ந்து இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாட்டிலும் புவிசார் குறியீடுகள் வழங்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1999 ஆம் ஆண்டு இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் 2002-ல் விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2004-ல் புவிசார் குறியீடு வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்தியாவில் முதன்முதலில் டார்ஜிலிங் தேயிலைக்குதான் புவிசார் குறியீடு கிடைத்தது. தமிழகத்திற்கான முதல் புவிசார் குறியீடு 2005-ல் சேலம் பேப்ரிக்சுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் கடந்த மார்ச் வரை 417 பொருட்களுக்கு இக்குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் 25 பொருட்கள் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களாகும்.
உலக வணிக அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் நாட்டுப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்த இந்தியாவில் புவிசார் குறியீடுகளை பெறுகின்றன. இத்தாலி தனது 14 தயாரிப்புகளுக்கு இந்தியாவி்ல் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இங்கிலாந்து தனது ஸ்காட்ச் விஸ்கிக்கு இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. பெரு, பிரான்ஸ், போர்ச்சுக்கல், தாய்லாந்து, கிரீஸ், செக், ஜெர்மனி போன்ற உலக நாடுகள் பலவும் இந்தியாவில் தங்கள் உற்பத்திக்கு புவிசார் குறியீட்டினை பெற்றுள்ளன.

தமிழ்நாட்டு நிலவரம்

இந்திய அளவில் புவிசார் குறியீடு வழங்கும் தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. காஷ்மீரிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும், ஏன் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும்கூட புவிசார் குறியீடு பெறுவதற்காக சென்னைக்கு வருகின்றனர். ஆனால் சென்னையில் புவிசார் குறியீடு வழங்கும் பணி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட, கடந்த மார்ச் வரை தமிழ்நாடு சார்ந்த 43 பொருட்களுக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், வேளாண் பொருட்களில் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளது. கேரளா தன் உற்பத்தியான நவரா அரிசி, பாலக்காடு மட்டை அரிசி, பொக்காளி அரிசி, வேநாடு சீரக சம்பா அரிசி, சாலா அரிசி என பல அரிசி வகைகளுக்கு குறியீடு பெற்றுள்ளது. இது போல் உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, அசாம், மேற்கு வங்கம் ஆகியனவும் அரிசி வகைக்கான குறியீட்டினை பெற்றுள்ளன.

ஆனால் தமிழகம் இதுவரை அரிசி வகைகளுக்கு குறியீடு பெறவில்லை. மாம்பழ வகைகளில் மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, குஜராத், கா்நாடகா ஆகிய மாநிலங்களே பெற்றுள்ளன. தமிழகத்தின் சேலம் மாம் பழம் இப்போதுதான் பரிசீலனையில் இருந்து வருகிறது. கும்பகோணம் வெற்றிலை பிரபலமானது. ஆனால் இதற்கு குறியீடு பெறவில்லை. அதுவும் இப்போதுதான் பரிசீலனையில் இருந்து வருகிறது. ஆனால் மைசூர் வெற்றிலைக்கு கர்நாடகா குறியீடு பெற்று பல ஆண்டுகளாகி விட்டது.

பயனிழக்கும் புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு பல பொருட்களுக்கு வாங்கப்படவில்லை என்பதைவிடவும் வருத்ததுக்குரிய விஷயம் என்னவென்றால், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் முறையாக சந்தைப்படுத்தப்படுவதில்லை என்பதுதான். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் பெரும்பாலானவை பெயரளவில் அங்கீகாரத்துடன் இருக்கின்றனவே தவிர, முழுமையான சந்தைப்படுத்துதல் நிகழவில்லை. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள்கூட அந்த அங்கீகாரத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர். ஆட்சியாளர்களுக்கும் இது குறித்து தெளிவான திட்டங்கள் இல்லை. பழனி பஞ்சாமிர்தத்தை எடுத்துக்கொள்வோம். பழனிக்கு யாத்திரை போகிறவர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, பழனி பஞ்சாமிர்தம் தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவலாகக் கிடைப்பதில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்துார் பால்கோவாவை வேன்களில் கொண்டுவந்து நகரங்களில் விற்பனை செய்கிறார்களே தவிர அதை முறையாக விநியோகிப்பதற்கான மையம் ஏதும் பிற நகரங்களில் இல்லை. இந்த நிலைதான் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும். கடைகளில் பல்வேறு கடலை மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றுள் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் எது என்பதற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற கன்னியா குமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி தென்னைக்கு மற்ற மாவட்டங்களில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்ற தகவல் வேளாண்மைத் துறையால் அளிக்கப்படவி்ல்லை.

ஈத்தாமொழி தென்னையை, பிற கடலோர மாவட்டங்கள் மற்றும் சமவெளிகளில் சாகுபடி செய்யலாமா என்பது குறித்து விவசாயிகளிடம் புரிதல் ஏற்படுத்தப்படவில்லை. கொடைக்கானல் மலைப் பூண்டு, கன்னியாகுமரி கிராம்பு என்று மளிகை கடைகளில் விற்பனை செய்கிறார்களே தவிர இவை உண்மையில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்தானா என்பதை நுகர்வோரால் உறுதி செய்துகொள்ள முடியவில்லை.

பற்பசையோ, ஷாம்புவோ புதிய லேபிளுடன் அறிமுகப்படுத்தப்பட்டால் அது அடுத்த மாதமே எல்லா ஊர்களிலும் கிடைத்துவிடுகிறது. ஆனால் தமிழகத்தில் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள், குத்து விளக்குகள் உட்பட சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கக்கூடிய பொருட்களை மாவட்ட அளவில் சந்தைப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அரசுத் துறைகளோ முன்வரவில்லை என்றால் புவிசார் குறியீட்டைப் பெறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

என்ன செய்ய வேண்டும்?

பல மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் குழுக்களின் சுயஉற்பத்தி பொருட்களுக்கு தனியானதொரு அங்காடி வளாகம் அமைத்து தரப்பட்டிருக்கிறது. அதேபோல் புவிசார் குறியீட்டுப் பொருட்களுக்கான விற்பனை மையத்தை மாவட்ட நிர்வாகங்களே தொடங்கலாம். அவ்வப்போது மாவட்ட அளவில் வேளாண்மை கண்காட்சி, பொருட்காட்சி, உணவுத் திருவிழாக்கள் ஆகியன அரசுத் துறைகளாலும் தனியார் துறைகளாலும் நடத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வுகளில், புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பொருட்களுக்கென்று அரங்கங்கள் அமைக்கலாம். மாவட்ட தலைநகரங்களி்ல் கூட்டுறவு தனியார் சிறப்பங்காடிகளில் இப்பொருட்களைக் கிடைக்கச் செய்யலாம். மாவட்ட அளவில் வேளாண்மை, கைத்தறி, கதர், கிராமத் தொழில்கள், தொழில்துறை உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அக்குழு மூலம் ஏற்கனவே குறியீடு வழங்கப்பட்ட பொருட்களின் சந்தையை விரிவாக்க வேண்டும். அதேபோல், புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள பொருட்களுக்கு குறியீடு பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். புவிசார் குறியீடு பெறுவதற்கான தகுதியுள்ள பொருட்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு குறியீடு பெற்றுத் தர வேண்டும். புவிசார் குறியீட்டை வெறும் அடை யாளமாக சுருங்கச் செய்யாமல், அதை அர்த்தமுள்ளதாக்குவது அரசு கையில்தான் இருக்கிறது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றபொருட்கள்

வேளாண் பிரிவு: ஈத்தாமொழி தென்னை, விருபாக்ஷி வாழை, சிறுமலை வாழை, மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் மலைபூண்டு, கன்னியாகுமரி கிராம்பு, மலபார் மிளகு, நீலகிரி தேயிலை

தயாரிப்புப் பிரிவு: கோவை வெட்கிரைண்டர்,ஈஸ்ட் இந்தியா லெதர்

உணவுப் பிரிவு: பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீவி்ல்லிப்புத்துார் பால்கோவா, கோயில்பட்டி
கடலை மிட்டாய்

கைத்திறன் பிரிவு: சேலம் பேப்ரிக்ஸ், காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்குடி சேலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் பெயிண்டிங்,தஞ்சாவூர் தட்டு, நாகர்கோயில் நகை, சேலம் வெண்பட்டு, கோவை கோரா காட்டன், ஆரணி பட்டு, சுவாமிமலை பித்தளை பொருட்கள், தோடா எம்பிராய்டரி, தஞ்சாவூர் வீணை, மகாபலிபுரம் கற்சிற்பம், திருபுவனம் பட்டு, பத்தமடை பாய், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, தஞ்சாவூர் நெட்டி, அரும்பாவூர் மரச் சிற்பம், கருப்பூர் கலம்காரி பெயிண்டிங், கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், நாச்சியார்கோயி்ல் குத்து விளக்கு, நரசிங்கபுரம் நாகேஸ்வரம், செட்டிநாடு காட்டன்

புவிசார் குறியீடுக்காக விண்ணப்பித்துள்ள பொருட்கள்

விருதுநகர் சம்பா மிளகாய், புளியங்குடி எலுமிச்சை, உறையூர் காட்டன் சேலை, ஆத்தங்குடி டைல்ஸ், பண்ருட்டி முந்திரி, கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி வாழை, ராமநாதபுரம் குண்டு மிளகாய், ஆத்துார் வல்லாரை வெற்றிலை, ஊத்தங்குடி பனங்கருப்பட்டி, சீரகச் சம்பா, மானாமதுரை கடம், ஊட்டி வரிக்கி, மணப்பாறை முறுக்கு, கன்னியாகுமரி கல்சிற்பம், சேலம் மாம்பழம், மதுரை மரிக்கொழுந்து, ராஜபாளையம் மாம்பழம், கம்பம் பன்னீர் திராட்சை, நெகமம் காட்டன் சேலை, மார்த்தாண்டம் தேன், துாயமல்லி அரிசி, துாத்துக்குடி மக்ரூன் ஆகியவையும் அடங்கும்.

- லெவின் ஆறுமுகம்
levinarumugam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in