

‘அடுத்த நூற்றாண்டு இந்தியாவுக்கான புது விடியலாக இருக்கும்’. இது ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில் கூறியது. இந்தக் கனவின் முதல் கட்டமாக, 1991-ல் முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தத்தை அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டுவந்தார். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் புதிய பொருளாதார அடித்தளங்கள் போடப்பட்டன. அந்த சீர்திருத்தத் திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளனவா, அடுத்த தலைமுறை சீர்திருத்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விரிவாகப் பேசுகிறது ‘அன்ஷேக்லிங் இந்தியா: ஹார்ட் ட்ரூத்ஸ் அண்ட் க்ளீயர் சாய்ஸஸ் ஃபார் எகானமிக் ரிவைவல்’(Unshackling India: Hard Truths and Clear Choices for Economic Revival). பிரபல பொருளாதார நிபுணர்களானஅஜய் சிப்பரும், சல்மான் அனீஸ் சோஸும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.
இந்த நூல் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 19 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம், வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலைமை அவர்களைப் பாதுகாப்பது எப்படி, தொழிலாளர்கள், நிலம், உள்கட்டமைப்பு, நகர்ப்புற மாற்றம், இந்தியாவின் நிதித் துறை, விவசாயம், சேவை வழங்கும் துறைகள், இந்தியாவின் வணிகக் கொள்கை, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகள், அதற்கான வரலாற்றுப் பின்புலம் பற்றி எடுத்துக்கூறி அந்தபிரச்சினைகளுக்கான தீர்வையும் கூறுகின்றனர்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து எழுதப்பட்ட மற்ற நூல்களுக்கும் இந்த நூலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவெனில், அரசு தவறவிட்ட வாய்ப்புகள் என்ன என்பதில் இந்நூலாசிரியர்கள் கவனம் செலுத்தியிருப்பதுதான்.
‘கூட்டுறவு கூட்டாட்சி’(cooperative federalism) என்கிற சொற்றொடர் இப்போது பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இந்தக் கோட்பாட்டை விரிவாக்குவதற்கான வாய்ப்பை அரசு எப்படி தவறவிட்டது என்பதை அவர்கள்இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள்.
‘மேக் இன் இந்தியா’ போன்ற முன்னெடுப்புகளின் மூலம் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சீனா, வங்கதேசத்துடன் ஒப்பிட நாம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடவில்லை. உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையில் உலகளாவிய நிலையில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். எனில், இனி நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குச் செய்யும் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.86 சதவீதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு 0.65 சதவீதமாக குறைந்திருக்கிறது.
ஆனால் சீனா 2.2 சதவீதமும், அமெரிக்கா 2.8 சதவீதமும் செலவிட்டு வருகின்றன. இதை நிவர்த்தி செய்ய நூலாசிரியார்கள், ‘தற்சமயம் இருக்கும் பெருங்குழும சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர் – CSR) திட்டங்களுக்கு நிறுவனங்கள் செய்யும் செலவு அனைத்தையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குச் செலவழிப்பதற்கு ஊக்குவிப்பதோடு அப்படி செலவு செய்யும் நிறுவனங்களுக்கு வரியில் சலுகை அளிக்க வேண்டும்’ எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
‘நீங்கள் எப்போதும் செய்து வருவதையே செய்துவந்தால் எப்போதும் என்ன முடிவு கிடைக்குமோஅதுதான் கிடைக்கும்’ என்பது ஐன்ஸ்டீனின் கூற்று. அரசும், கொள்கை வகுப்பவர்களும் ‘மாற்றி யோசிப்பது’ அவசியமாகும்.
ஒட்டுமொத்தத்தில் இந்நூல், இந்தியப் பொருளாதாரம் குறித்தும், அதன் தோல்விகள் குறித்தும் ஒரு பருந்துப் பார்வையை வாசகர்களுக்குக் கொடுக்கிறது.
- சித்தார்த்தன் சுந்தரம்
sidvigh@gmail.com
புத்தகம்: அன்ஷேக்லிங் இண்டியா
ஆசிரியர்கள்: அஜய் சிப்பர், சல்மான் அனீஸ் சோஸ்
பதிப்பாளர்:ஹார்ப்பர் கோலின்ஸ்
விலை: ரூ699
பக்கம்: 492