

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தக் கிளைகள் தனித்தனி வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் டெல்லி, மும்பை, அகமதாபாத் என 17 வட்டங்கள் இருக்கின்றன. இதில் சென்னை வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக பணி புரிபவர் ராதாகிருஷ்ணா. சென்னை வட்டம் என்பது தமிழ்நாட்டையும் பாண்டிச்சேரியையும் உள்ளடக்கியது. மொத்தம் 1,200-க்கு மேற்பட்ட வங்கிக் கிளைகள் சென்னை வட்டத்தின் கீழ் உள்ளன.
இந்த வங்கிகள் அனைத்தும் ராதாகிருஷ்ணாவின் தலைமையின் கீழ்தான் செயல்படுகின்றன. எஸ்பிஐயின் சென்ற நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு அறிக்கை சமீபத்தில் வெளியானது. ஒட்டுமொத்த அளவில் சென்ற நிதி ஆண்டில் அதன் நிகர லாபம் 55 சதவீதம் உயர்ந்து ரூ.31,676 கோடியாக உள்ளது. சென்னை வட்டத்தின் நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.730 கோடியாக உள்ளது. இந்தத் தருணத்தில் சென்னை வட்டத்தில் எஸ்பிஐயின் செயல்பாடுகள் குறித்தும், அதன் கடன் நிலவரம் குறித்தும், அதன் திட்டங்கள் குறித்தும் ராதாகிருஷ்ணாவிடம் விரிவாக உரையாடியதிலிருந்து…
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதையொட்டி எஸ்பிஐயும் கடனுக்கான வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக இருமுறை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு காரணமாக புதிதாக கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?
ரிசர்வ் வங்கி உயர்த்திய அளவுக்கு எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. கடந்த 2 மாதங்களில் 20 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறோம். மாதாந்திர தவணை செலுத்துபவர்களுக்கு சற்று சுமைதான் என்றாலும்கூட, ரிசர்வ் வங்கி அளவுக்கு நாங்கள் உயர்த்த வில்லை என்பதால், எங்கள் வாடிக்கையாளர்களின் சுமையை ஓரளவுக்கு நாங்கள் மட்டுப்படுத்தி இருக்கிறோம். அதேசமயம் வீட்டுக் கடன் பிரிவில் நாங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.
ஏன் வீட்டுக் கடன் பிரிவுக்கு மட்டும் விதிவிலக்கு?
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சியில் பயணிக்கிறது. இதனால் வீட்டுக் கடன் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம். சென்னை வட்டத்தை எடுத்துக்கொண்டால் வீட்டுக் கடன் பிரிவில் எஸ்பிஐ 28 சதவீதம் சந்தையைக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு வரையில் ரூ.50 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்ட, வரும் ஜூன் 3 தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கவிருக்கும் வீடு, மனை கண்காட்சியில் கலந்துகொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் என்ன?
கட்டுமான நிறுவனங்களையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், பொதுமக்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு மிக எளிதாக வீட்டுக் கடன் பெறலாம். கண்காட்சி அரங்கிலேயே வீட்டுக் கடனுக்கான ஒப்புதல் அவர்களுக்கு வழங்கப்படும். ஐந்து நாட்களுக்குள் கடன் வழங்கப்பட்டுவிடும்.
எஸ்பிஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.65 சதவீதம்தான். மிகக் குறைவான வட்டிவிகிதம் இது. சிறப்பு சலுகைகளை இந்தக் கண்காட்சியில் வழங்க இருக்கிறோம். உதாரணமாக, ஒப்புதல் பெற்றத் திட்டங்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாது. செயல்பாட்டுக் கட்டணத்தில்கூட 50 சதவீத தள்ளுபடி உண்டு. கட்டுமான நிறுவனங்களுக்கும் பல சலுகைகளுடன் கூடிய கடன் வழங்கவுள்ளோம். மாற்று எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதற்கு நாங்கள் கடன் உதவி வழங்குகிறோம்.
கரோனா பரவலால் ரியல் எஸ்டேட் துறை மிகப் பெரிய தேக்கத்துக்கு உள்ளானது. தற்போது அத்துறையின் நிலவரம் என்ன?
கரோனாவில் ரியல் எஸ்டேட் துறை தேக்கத்தைச் சந்தித்தது உண்மைதான். ஆனால், விரைவிலே அது மீண்டுவிட்டது. சொல்லப்போனால், கரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சிறப்பான வளர்ச்சியை ரியல் எஸ்டேட் துறை இப்போது எட்டி வருகிறது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வட்டத்துக்கும் ஆண்டுக்கு இவ்வளவு வைப்பு நிதி பெற்றிருக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு இவ்வளவு கடன் கொடுத்திருக்க வேண்டும் என்றும் இலக்குகள் உள்ளதா? சென்னை வட்டத்தில்
சென்ற நிதி ஆண்டில் எவ்வளவு கடன் வழங்கப்பட்டிருக்கிறது?
ஆம், இலக்குகள் உண்டு. அந்தந்தப் பிராந்தியத்தின் தொழில்வாய்ப்புகள், பணப்புழக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்படும். ஏனைய வட்டங்களை ஒப்பிட சென்ற நிதி ஆண்டில் சென்னை வட்டத்தில்தான் அதிக அளவு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற நிதி ஆண்டில் சென்னை வட்டத்தில் ரூ.19,000 கோடி வைப்பு நிதி பெறவும், ரூ.19,000 கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.
மொத்தத்தில் ரூ.14,556 கோடி கடன் வழங்கியுள்ளோம். இதில் தனிநபர் கடன் ரூ.4,563 கோடி, ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.5,834 கோடி, வேளாண் பிரிவில் ரூ.1,214 கோடி, சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.2,945 கோடி என்ற அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சென்னை வட்டத்தில் ரூ.21,000 கோடி வைப்புத் தொகை பெறவும், ரூ.19,600 கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன்களைப் பொருத்தவரையில், பெரு நகரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா அல்லது நடுத்தர மற்றும் சிறிய நகரங்களிலும் கவனம் செலுத்துகிறீர்களா?
முன்னதாக நாங்கள் பெருநகரங்களில் கூடுதல் கவனம் செலுத்திவந்தோம். குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில். ஆனால் தற்போது, ஏனைய நகரங்களிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறோம். நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஈரோடு, திருப்பூர், கரூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 13 நகரங்களில் வீட்டுக் கடன் மையம் அமைத்து வருகிறோம். இந்த நகரங்களில் வீட்டுக் கடனுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது.
ரியல் எஸ்டேட் தொடர்பான கடன் வழங்கலில் எஸ்பிஐயின் வரம்பு என்ன?
நாங்கள் முதன்மையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டுமான நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். ரூ.3 கோடி முதல் ரூ.50 கோடி என்பதாக கடன் வரம்பு வைத்துள்ளோம். சென்னையில் ரூ.100 கோடி வரையில் கடன் வழங்கப்படும்.
கரோனா சமயத்தில் சிறு, குறு நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகின. கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தத் துறையில் கடன் திருப்பிச் செலுத்துதல் எப்படி இருக்கிறது?
கரோனா மிகப் பெரும் பாதிப்பை எம்எஸ்எம்இ துறையில் ஏற்படுத்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி எம்எஸ்எம்இ துறையை நெருக்கடியிலிருந்து மீட்க குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டது. எம்எஸ்எம்இ துறை தற்போதும் சற்று நெருக்கடியில் இருந்தாலும்கூட, அதன் கடன் வரவு சம்பந்தமாக சுணக்கங்களை நாங்கள் உணரவில்லை.
எந்தப் பிரிவில் அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது?
இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் தொழிற்துறைக்கு. சென்னை வட்ட அளவில் ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கப்படுகிறது.
எந்தப் பிரிவில் வாராக் கடன் அதிகம் உள்ளது?
இந்திய அளவிலும் சரி, சென்னை வட்ட அளவிலும் சரி தொழிற்துறையிலும் வேளாண் துறையிலும் வாராக் கடன் அதிகம் உள்ளது. இத்துறைகள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிக்கக்கூடியது என்பதால் இவற்றில் வாராக் கடன் அதிகமாக இருப்பது இயல்பானதுதான்.
தொகையில் சொல்ல முடியுமா?
இந்திய அளவில் சென்ற நிதி ஆண்டு வரையில் எஸ்பிஐ வழங்கிய ஒட்டுமொத்தக் கடன் ரூ.23.96 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொழில் துறைக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.11.53 லட்சம் கோடி ஆகும். இதில் வாராக் கடன் ரூ.71,229 கோடி ஆகும். அதாவது தொழில்துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடனில் 6.18 சதவீதம் வாராக் கடனாக உள்ளது. வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.2.28 லட்சம் கோடி. இதில் வாராக் கடன் ரூ.30,268 கோடி. வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடனில் 13.24 சதவீதம் வாராக் கடனாக உள்ளது.
சென்னை வட்டத்தில் சென்ற நிதி ஆண்டு வரையில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்தக் கடன் ரூ.1.37 லட்சம் கோடி ஆகும். இதில் தொழிற்துறைக்கு ரூ.24,834 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாராக் கடன் ரூ.876 கோடி ஆகும். இது 3.53 சதவீதம் ஆகும். வேளாண் துறைக்கு ரூ.30,509 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாராக் கடன் ரூ.844 கோடி ஆகும். இது 2.77 சதவீதம் ஆகும்.
கிராமப்புற வங்கிக் கிளைகள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பொதுவாக சொல்லப்படுகிறது. எஸ்பிஐ-யின் நிலவரம் என்ன?
எஸ்பிஐ பொருத்தவரையில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நஷ்டத்தில் இயக்கும் கிராமப்புற வங்கி என்று எதுவும் இல்லை. நாங்கள் கிராமப்புறங்களில் இழப்புகளைத் தவிர்க்கும் வகையிலான வர்த்தக முறையைக் கையாளுகிறோம்.
யுபிஐ வந்த பிறகு எஸ்பிஐயின் வங்கிச் செயல்பாட்டில் என்ன விதமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. யுபிஐ மூலம் பணப் புழக்கம் பற்றிய துல்லியமான தரவுகள் கிடைக்கின்றன. இதனால் அந்தந்தத்துறை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்களால் திட்டங்களை உருவாக்க முடிகிறது.
எஸ்பிஐயின் முன்னிருக்கும் சவால்கள் என்ன?
வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் எங்கள் முன்னிருக்கும் சவால். அதாவது தொழில்நுட்பம் வளரவளர வாடிக்கையாளர்களின் தேவையும் மாறுபடுகிறது. அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் எங்கள் கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்தியாக வேண்டும். அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அதேபோல், எம்எஸ்எம்இ மற்றும் வேளாண் துறைகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.
வீடு, மனை கண்காட்சி
மக்களின் வீடு வாங்கும் கனவை நிஜமாக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ 2017 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘வீடு, மனை கண்காட்சி’ (Property Expo) நடத்திவருகிறது. பல்வேறு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும். வீடு வாங்கும் விருப்பத்தில் இருக்கும் மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வருகைதருவார்கள். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வீடு,மனை திட்டம் குறித்து மக்களிடம் விளக்குவார்கள்.
கண்காட்சி அரங்கிலேயே வங்கிகள் கடன் உதவிக்கான ஒப்புதல் பொதுமக்களுக்கு வழங்கும். இந்த ஆண்டு கண்காட்சி, வரும் ஜூன் 3 முதல் 5 வரையில் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் வீடு, மனை வாங்க விரும்பும் மக்களுக்கும், கட்டுமானம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் எஸ்பிஐ வீட்டுக் கடன் வழங்கவுள்ளது. இந்தக் கண்காட்சியை முன்னிட்டு எஸ்பிஐ சிறப்பு சலுகைகளையும் அறிவித்திருக்கிறது.
நேர்காணல்: முகம்மது ரியாஸ் riyas.ma@hindutamil.co.in