

கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்களைத் திருடி அதன் மூலம் பொருளீட்டும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரிந்ததே. ஒரு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கு சைபர் குற்றவாளிகளின் அச்சுறுத்தல் இப்போது உருவெடுத்துள்ளது அனைத்து நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் உலகறிந்த விஷயம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக சைபர் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது கோஸ்டாரிகா நாட்டின் மீது. ஏப்ரல் மாதம் 12-ம் தேதி தொடுக்கப்பட்ட இந்த போருக்கு இதுவரை முடிவு தெரியவில்லை. அந்நாட்டில் இன்று வரையும் அவசர நிலை பிரகடனம்தான்.
அரசுகளின் நிழல் உலகம்
ரஷ்யாவைச் சேர்ந்த ரான்சம்வேர் கம்ப்யூட்டர் வைரஸ் பரப்பும் குழுதான் இந்தச் செயலை செய்துள்ளது. அக்குழுவினர் கேட்கும் பணயத் தொகை 2 கோடி டாலர். இது போன்ற பெரு நாட்டிற்கும் இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு ஆதரவில் செயல்படும் கான்டி என்ற அமைப்பு உலகம் முழவதும் ஆயிரத்திற்கும் மேலான கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதலை நடத்தி பல கோடி டாலர்களை பணயத் தொகையாக பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் வைரஸ் கொள்ளையர்கள் குறித்த தகவல் தருவோருக்கு ஒரு கோடி டாலர் வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணரலாம்.
கோஸ்டாரிகாவின் 27 அரசுத் துறை கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்கை வைரஸ் மூலம் செயலிழக்க வைத்துவிட்டனர். இந்நிறுவனங்களின் கம்ப்யூட்டரில் உள்ள என்கிரிப்ஷன் உத்தி மூலம் கம்ப்யூட்டர்செயல்பாடுகளை முடக்கியுள்ளனர். கோஸ்டாரிகா அதிபரான ரோட்ரிகோ சாவெஸ் பதவியேற்ற ஒரு வார காலத்திலேயே அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணயத் தொகையைக் கொடுத்தாலும் அந்த டேட்டாக்களை கம்ப்யூட்டர் கொள்ளையர்கள் திரும்பத் தருவதற்கான உத்திரவாதம் இல்லை. இதனால் பிரச்சினை 45 நாள்களாக நீடிக்கிறது. ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலை நடத்துவது தனிநபர்கள் அல்ல. மிகப் பெரிய நிறுவனங்களாக அவை செயல்படுகின்றன. சீனா, ரஷ்யா,ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகள் சில இவற்றுக்கு ஆதரவு தருவது இந்நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்குக் காரணமாகியுள்ளது.
வைரஸ் சாம்ராஜ்யம்
நிறுவனங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடத்த ஒரு பிரிவு, பிணயத் தொகை கேட்டு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு, பணம் வசூலிக்க ஒரு பிரிவு, நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பிணயத் தொகை கணக்கு வழக்குகளை பார்க்க தனிப் பிரிவு என தனி ராஜாங்கமாகவே இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது தவிர இதில் கூலிப்படைகளும் உள்ளன. இவை டார்க் வெப் எனப்படும் இணையத்தில் குவிந்து இருக்கிறார்கள். இவர்களின் மூலம் தங்களது திட்டத்தை போட்டி நிறுவனங்கள் செயல்படுத்திக்கொள்கின்றன. பிணயத் தொகையை இவர்கள் டாலரில் கேட்டாலும் பெரும்பாலும் பிட் காயின் மூலமாகவே அதைப் பெறுகின்றனர். இதனாலேயே பணம் யாருக்குப் போகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. பிட்காயின் மதிப்பு உயரும் போதெல்லாம் சைபர் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதை உணரலாம்.
தொழில்நுட்பப் போர்
நிறுவனங்கள் இதுபோன்று சைபர் தாக்குதலுக்கு ஆளானால் அதற்கான பிணயத் தொகையைக் கொடுத்துவிடுகின்றன. இதை அவர்கள் சைபர் இன்சூரன்ஸ் மூலம் திரும்பப் பெற்று
விடுவதால், குற்றவாளிகள் எளிதாக இத்தகைய இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனங்களைத் தாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.
ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்த அதே சமயம் பெலாரஸ் நாட்டில் ரயில் போக்குவரத்தை கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் முடக்கினர். அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ரஷ்ய வீரர்கள் வடக்கு உக்ரைனுக்குள் நுழைவதற்கு பெலாரஸ்தான் முக்கிய வழி. அதை ஹேக்கர்கள் முடக்கியதிலிருந்தே அரசியல் தொடர்பை உணரலாம். மூன்றாம் உலகப் போர் என்பது தொழில்நுட்பப் போராக இருக்கும் என்பது நிதர்சனமாகி வருகிறது.