

இலங்கை எத்தகையதொரு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை; எரிபொருள் கிடைக்கவில்லை. நாடே ஸ்ம்பித்தது; மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. தற்போது கூடுதல் கவலையளிக்கக்கூடிய விசயம் என்னவென்றால், இலங்கையைப் போலவே பல நாடுகள் கடும் கடன் சுமையால் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக உலக நாடுகளின் கடன் நிலவரம் தொடர்பான அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டது. 70 நாடுகள் அதன் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளன என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்நாடுகள் மிகப் பெரும் சரிவை எதிர்கொள்ளும் என்றும் உலக வங்கி எச்சரித்திருந்தது. மார்ச் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக 107 நாடுகள் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளது என்றும் இவற்றில் 69 நாடுகள் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, கடும் நிதி நெருக்கடி ஆகிய மூன்று காரணிகளால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்த 69 நாடுகளில் 25 நாடுகள் ஆப்பிரிக்காவையும், 25 நாடுகள் ஆசியா பசிபிக்கையும், 19 நாடுகள் லத்தீன் அமெரிக்காவையும் சேர்ந்தவை ஆகும்.
விளிம்பில் இருக்கும் நாடுகள்
எகிப்தின் பொருளாதார நிலவரம் கவலைக்குரியதாக உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாட்டை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. எகிப்து அதன் கோதுமை தேவைக்கு ரஷ்யா மற்றும் உக்ரைனை பெரிதும் சார்ந்து இருந்தது. தற்போது அவ்விரு நாடுகளிடையிலான போரின் காரணமாக கோதுமை இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து உதவியை எதிர்பார்த்து இருக்கிறது எகிப்து.
துனிசியா வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 800 மில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. அந்நாட்டில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.
2020-ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் லெபனான் நாட்டின் மிகப் பெரிய உணவு கிடங்கு தீக்கிரையானது.விளைவாக, உணவுப் பொருள்களின் விலை 11 மடங்கு அதிகரித்ததோடு லெபனானின் நாணய மதிப்பு 90 சதவீதம் சரிந்தது. பொது மக்களின் கடன் சுமை அந்த நாட்டின் ஜிடிபியில் 360 சதவீதமாக உள்ளது. லெபனான் அதன் கோதுமை தேவையில் 80 சதவீதத்தை உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, லெபனானில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. உணவு பாதுகாப்புக்காக உலக வங்கியில் லெபனான் 150 மில்லியன் டாலர் கடனாக பெற்றுள்ளது. துருக்கி நாட்டின் கடன் சுமை அதன் ஜிடிபியில் 54 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் 70 சதவீதமாக உள்ளது. இது தவிர கடுமையான உணவு பற்றாக்குறையையும் துருக்கி எதிர்கொண்டுள்ளது.
அர்ஜென்டைனாவும் கடன் சுமையால் தள்ளாடுகிறது. கடன் தவணையை அடைப்பதில் 9 முறை தவறியது. இந்நிலையில் தற்போது சர்வதேச செலாவணி நிதியத்திடம் 45 பில்லியன் டாலர் கடன் கேட்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் எல் சல்வடார், பெரு போன்ற நாடுகள் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தீவிரமடைந்துள்ளன.
கானா, எத்தியோப்பியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. கென்யா நாட்டின் கடன் சுமை 70 பில்லியன் டாலர். இது அந்த நாட்டின் ஜிடிபியில் 70 சதவீதம் ஆகும். பொருளாதார சீர்குலைவை தவிர்ப்பதற்காக சென்ற வாரம் 244 பில்லியன் டாலர் கடனை சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து கென்யா பெற்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் கடன் சுமையும் அதன் ஜிடிபியில் 80 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
இந்நாடுகளில் விரைவிலே உள்நாட்டுக் கலவரம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏன் இந்த திடீர் நெருக்கடி?
இந்த நாடுகள் ஏற்கெனவே கடன் சுமையில்தான் இருந்துவந்தன. கரோனாவுக்குப் பிறகு இந்நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.கரோனா ஊரடங்குகளால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஊரடங்குகள் நீக்கப்பட்ட பிறகு, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் மீளத் தொடங்கியது. ஆனால், பின்தங்கிய நாடுகள் இன்னும் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீளமுடியாத நிலையிலே இருக்கின்றன. இந்தச் சூழலில் தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. போர் என்பது சம்பந்தப்பட்ட இருநாடுகளுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பதையே தற்போதைய சூழல் இன்னும் அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது.
தொடர்புக்கு: somasmen@gmail.com