கோதுமை ஏற்றுமதி தடை: விவசாயிகளை பாதிக்குமா?

 கோதுமை ஏற்றுமதி தடை: விவசாயிகளை பாதிக்குமா?
Updated on
3 min read

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. மே 13-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானபோது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனென்றால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான், கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகளை மத்திய அரசு அனுப்ப இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.

ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்தத் தடை விவசாயிகளை எந்த வகையில் பாதிக்கும்? ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிப்பதற்குப் பதிலாக வேறு வழிமுறைகளை மத்திய அரசு கையாண்டிருக்க முடியுமா? சற்று விரிவாகவே பார்ப்போம்.

இந்தியாவும் கோதுமை சாகுபடியும் கோதுமை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. அதேசமயம் கோதுமை சாகுபடி பரப்பளவு அடிப்படையில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, கோதுமை சாகுபடிப் பரப்பளவு இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. 1965-66-ல் 125.7 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடிப் பரப்பளவானது 2019-20-ல் 314.5 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் கோதுமை உற்பத்தி 1.4 கோடி டன்னிலிருந்து 10.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கோதுமை முக்கியமாகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த கோதுமை சாகுபடிப் பரப்பளவில், இந்த மாநிலங்களின் பங்கு 80 சதவீதமாகும்.

விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதா?

மொத்த கோதுமை உற்பத்தி தொடா்ந்து அதிகரித்தாலும், அதை சாகுபடி செய்யும் விவசாயிகள் கணிசமான லாபம் ஈட்டினார்களா என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை. 1970 முதல் வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தால் வெளியிடப்படும் தரவுகள், கோதுமை சாகுபடியில் மிகவும் குறைவான வருமானம் கிடைப்பது மட்டுமல்லாமல், அதில் ஆண்டுக்கு ஆண்டு அதிக ஏற்ற, இறக்கம் இருப்பதையும் காட்டுகிறது. உதாரணமாக, இந்தியாவின் மொத்தகோதுமை சாகுபடிப் பரப்பில் 30 சதவீதத்துக்கும் மேலான பங்கைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில், 1972-ல் ஒரு ஹெக்டேருக்குத் தேவைப்படும் சாகுபடி செலவானது ரூ.1,409- ஆக இருந்தது. அது 2019-ல் ரூ.65,201-ஆக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கோதுமையின் உற்பத்தி மதிப்பு ரூ.1,621-லிருந்து ரூ.67,949-ஆக அதிகரித்துள்ளது. எனினும், சாகுபடி செலவுக்கும் உற்பத்தி மதிப்பிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத்தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஹெக்டோ் சாகுபடி செலவானது ரூ.2,358-லிருந்து ரூ.74,231-ஆக அதிகரித்த நிலையில், உற்பத்தியின் மதிப்பு ரூ.3,217-லிருந்து ரூ.74,308-ஆக மட்டுமே உயா்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு இம்மாநிலங்களில் பெரிய லாபம் கிடைக்கவில்லை. இவ்விரு மாநி
லங்கள் போல் அல்லாமல், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், கோதுமை சாகுபடியில் ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.

ஆனால், 1970 முதல் 2019 வரையிலான காலவரிசைத் தரவுகளை எடுத்துக்கொண்டால், கோதுமை சாகுபடி மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருவாய் சற்று இருண்டதாகத் தெரிகிறது. சாகுபடி செலவின்படி, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில், கோதுமை பயிரிடும் விவசாயிகள் பல ஆண்டுகள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் 42 ஆண்டுகளுக்குக் கிடைத்த தரவுகளின்படி பார்த்தால், அம்மாநில விவசாயிகள் 18 ஆண்டுகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேச விவசாயிகள் 44 ஆண்டுகளில், 13 ஆண்டுகள் நஷ்டம் அடைந்துள்ளனர். பஞ்சாப் விவசாயிகள் 48 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஹரியானா மாநில விவசாயிகள் 45 ஆண்டுகளில், 7 ஆண்டுகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

ஏன் விவசாயிகளுக்கு லாபம் இல்லை?

ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் கோதுமை மகசூல் மெச்சத்தக்க அளவு உயர்ந்துள்ளபோதும், ஏன் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள் என்ற கேள்வி எழக்கூடும்? கோதுமை சாகுபடியில் குறைந்த லாபம் அல்லது இழப்பு ஏற்படுவதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இடுபொருள்களின் தொடா் விலை அதிகரிப்பால், சாகுபடி செலவு சமீப காலங்களில் கடுமையாக உயர்ந்துவிட்டது. கோதுமை மகசூல் அதிகரித்தபோதிலும் சாகுபடி செலவு உயர்வால், லாபம் கிடைப்பது அரிதாகிவிட்டது. இரண்டாவதாக கோதுமையின் மொத்தக் கொள்முதல் கணிசமாக அதிகரித்தபோதிலும், பெரும்பாலான விவசாயிகள் இப்பயிரை விற்பனை செய்வதற்கு சந்தையையே நம்பியுள்ளனர். ஆனால், சந்தை விலை பெரும்பாலான நாட்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட(எம்எஸ்பி) குறைவாக நிலவுவதால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. உதாரணமாக, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள 2020-21-ம் ஆண்டின் ரபி பருவத்திற்கான தரவுகளின்படி, மத்திய பிரதேசத்தில்120 நாட்களில் 14 நாட்கள், ராஜஸ்தானில் 113 நாட்களில் 19 நாட்கள், உத்தரப் பிரதேசத்தில் 120 நாட்களில் 44 நாட்கள் மட்டுமே கோதுமைக்கான சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக இருந்தது எனக் கூறியுள்ளது. இவை சொல்வது என்னவென்றால், சாதாரண சூழ்நிலை நிலவும் காலங்களில் குறைந்தபட்ச ஆதரவுவிலைக்குக் கீழ் விவசாயிகள் கோதுமையை சந்தையில் விற்க நேரிடுகிறது.

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தா?

நாட்டின் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கையுடன் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசு கூறியுள்ளது. கோதுமைப் பயிருக்கு ஏற்றுமதித் தடை விதிக்கப்படாவிட்டால், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ஏற்பட்ட அதிக வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டின் மொத்த கோதுமை உற்பத்தி சுமார் 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆரம்ப உற்பத்தி மதிப்பீட்டான 11.1 கோடி டன்னை விடப் பெரிதும் வேறுபடவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடிய கோதுமைக் கொள்முதல் இலக்கான 1.9 கோடி டன்னை அரசால் அடைய முடியாமல் போனதற்கும், அதன் உற்பத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உக்ரைன்-ரஷ்யா இடையே தொடரும் போர் காரணமாக, சந்தையில் கோதுமையின் விலை மேலும் உயரும் என எதிர்பார்த்து விவசாயிகள் கோதுமையை விற்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இது ஒன்றும் அசாதாரணமானதல்ல! கடந்த காலங்கள் போல் அல்லாமல், இம்முறை விவசாயிகள் மிகவும் அறிவுபூா்வமாக சிந்தித்து சந்தை விலை மேலும் உயரும் எனக் காத்திருப்பதில் என்ன தவறு?

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கோதுமை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசால் தற்போது கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (ரூ.2,015) விட ஒரு குவிண்டாலுக்கு ரூ.300-500 அதிகம் கிடைத்தது. இப்போது, கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால், சந்தையில் இதன் விலை குறைய ஆரம்பித்துவிட்டது. இத்தடையானது கோதுமைக் கொள்முதல் மிகவும் மோசமாக இருக்கும் மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கு வருமானக் குறைவை ஏற்படுத்தும்.

அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

ஏற்றுமதிக்கு முழுமையாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக, அரசு இரண்டு வழிகளைப் பின்பற்றி இருக்கலாம். ஒன்று, யூக வணிகத்தைத் தடுக்கும் நோக்கில், சில நிபந்தனைகளுடன் கோதுமை ஏற்றுமதியைப் படிப்படியாகக் குறைத்திருக்கலாம். இரண்டு, விவசாயிகளின் வருமான பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கோதுமைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இப்போது கோதுமை ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, எனவே, ஏற்றுமதித் தடையால் விவசாயிகளுக்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுசெய்ய, கோதுமை க்கான குறைந்தபட்ச விலையை உலகச் சந்தை விலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.

சிக்காகோ வர்த்தக வாரியத்தில் கோதுமைக்கு மே16-ல் ஒரு டன்னுக்கு நிலவிய பெஞ்ச் மார்க் விலை 454.47 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,244. ஆனால் விவசாயிகளுக்கு நாம் கொடுக்கும் விலை வெறும் ரூ.20,150. விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக விவசாயிகளை எப்பொழுதும் கருதக் கூடாது. விவசாயிகளுக்கு வருமானப் பாதுகாப்பை வழங்காமல், எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் உணர வேண்டும்!

தொடர்புக்கு: narayana64@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in