

பள்ளிக் காலத்தில் என்னை என் பாட்டி பாதித்தூக்கத்தில் தட்டி எழுப்பி ‘தூங்கினது போதும், போய் கிருஷ்ணா ஸ்டோர்லேருந்து பெருங்காயம் வாங்கிண்டு வா சீக்கிரம்’ என்று துரத்துவாள். தூக்கக்கலக்கத்தில் ‘அர்த்த ராத்திரில யார் கடை திறந்து வச்சிருப்பா, ஏன் படுத்தற’ என்று கத்துவேன். ‘மணி எட்டாறது, அண்ணாச்சி உன்னை மாதிரி இல்ல, கடைய திறந்து காத்துண்டிருக்கார்’ என்று விரட்ட, தூக்கத்தை கெடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாய் கடைக்குப்போய் வாங்கி வருவேன்.
இது ஏதோ ஒரு நாள் நடந்த கூத்தல்ல. அனுதினம் என் ஆனந்த அனந்தசயனம் அநியாயமாய் அவ்வாறே அழிக்கப்பட்டது. என் தூக்கம் இப்படி பெருங்காயத்தில் கரைந்திருக்க வேண்டாம்! இக்கட்டுரை என் தூக்கம் பற்றியதல்ல. ‘ஆத்திர அவசரத்திற்கு உப்பு, மிளகாய், சீயக்காய், சோப், சானிடரி நாப்கின் தேவை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள், பத்து நிமிடத்தில் உங்கள் வீட்டுக்கேவந்து டெலிவரி செய்கிறோம்’ என்று கிளம்பியிருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்பற்றியது. இந்த நிறுவனங்கள்என் பள்ளி காலத்தில் பிறந்திருந்தால் நிம்மதியாய் தூங்கியிருப்பேன். தற்போதைய தலைமுறையினரின் தூக்கத்தையாவது பாட்டிகளிடமிருந்து காப்பாற்ற அவதரித்தார்கள் ஆபத்பாந்தவர்கள் என்று திருப்திபட வேண்டியதுதான்.
பத்து நிமிட பந்தம்
இந்த ஆன்லைன் டெலிவரி எல்லாம் பழைய இ-காமர்ஸ் மேட்டர்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லையாம். இது அதன் அடுத்த கட்ட அவதாரமாம். இவ்வகை பத்து, பதினைந்துநிமிட அவசரடி ஆன்லைன் டெலிவரி சமாச்சாரத்தை‘க்யூ காமர்ஸ்’(Q-Commerce) என்கிறார்கள். அதாவதுக்விக் காமர்ஸ். தமிழில் சொன்னால் விரைவு வணிகம். இந்த க்யூ காமர்ஸ் மேட்டர் ஒரு சமீபத்திய ஜனனம். பல புதிய நிறுவனங்கள் குபீரென்று பிறக்க ஏற்கனவே இருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள் சில குப்பென்று இந்த ஜோதியில் ஐக்கியமாகத் தொடங்கியுள்ளன.
இவ்வகை அவசரடி ரங்காக்கள், சில முக்கியமானநகரங்களில் அதிகம் வீடுகள் நிறைந்த ஏரியாக்களில் நூற்றுக்கணக்கான ‘டார்க் ஸ்டோர்’களைத் திறந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் சதுர அடி அளவிலான இவ்வகை ஸ்டோர்களில்அதிக டிமாண்ட் உள்ள அன்றாட தேவைக்கான பொருட்களை மட்டும் வாங்கி அடுக்குகிறார்கள். ஆர்டர் வந்தவுடன் அங்கிருந்து வீடுகளுக்கு விரைவில் டெலிவரி தரமுடியும் என்கிறார்கள்.
ஆர்டர் வந்த பொருளைப்பார்த்துஎடுக்கவேபத்துநிமிடம் ஆகிவிடாதா? இங்குதான் அவர்கள் உதவிக்கு வருகிறது தொழில்நுட்பம். ஆர்டர் வந்த மாத்திரம் க்யூ காமர்ஸ் நிறுவனத்தின் சிஸ்டம் முடுக்கி விடப்படும். டார்க் ஸ்டோரின் ஊழியரின் கையில் இருக்கும் நவீன டேப்லெட் எந்த ஆர்டர் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அவருக்கு படம் வரைந்து பாகங்களை குறிப்பிட்டு காட்டுகிறது. பொதுவாக எந்த ஏரியா மக்கள் எந்தெந்த பொருட்களை அதிகம் ஆர்டர் செய்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்துவைத்திருப்பதால் அதற்கேற்ப அந்தந்த டார்க் ஸ்டோர்களில் பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால் இது எளிதாகிறது. வாடிக்கையாளர் அட்ரஸ், அங்கு விரைவாய் சென்று சேரஈசியான ரூட்டையும் தந்துவிட பிறகென்ன பத்துநிமிட டெலிவரி ஜூஜுபி என்கிறார்கள்.
இது சாத்தியப்படுமா?
சாட்சாத் சாத்தியம் என்று கிளம்பியிருக்கின்றன ‘செப்டோ’ போன்ற புதிய நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள்பத்தாதுஎன்று ஏற்கனவே இருக்கும் ‘ஸ்விக்கி’, ‘க்ரோஃபர்ஸ்’, ‘டன்ஸோ’ போன்ற நிறுவனங்களும் இந்தப்பத்து நிமிட கோதாவில் குதித்திருக்கின்றன. இந்த மார்கெட்தான் அடுத்த குபேர ஐஸ்வர்யம் என்று பலர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். 2021-ல் 25பில்லியன் டாலராக இருந்த க்யூ காமர்ஸின் சந்தை2025-க்குள் 72பில்லியன் டாலராக வளரும் என்கிறது ஒரு சர்வதேசப்புள்ளி விவரம். இவர்கள் செய்யும் டெலிவரி மட்டுமல்ல, இந்தத்தொழில் பிரிவே வேகமாக வளரும் ஜாதி போலிருக்கிறது. அதனால்தானோ என்னவோ முதலீட்டாளர்கள் கோஷ்டிகானமாய் இவ்வகை நிறுவனங்களில் பணத்தைக்கொட்டு கிறார்கள். ‘செப்டோ’ இதுவரை700 மில்லியன் டாலரைமுதலீடாய் பெற்றிருக்கிறது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறைமுதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை இறைக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் 19 வயது இளைஞர்கள் இருவர்தான். கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வயதில் என் அப்பாஎன்னிடம் பத்து ரூபாய் தரவேபத்துமுறை யோசிப்பார்- நான் தொலைத்துவிடுவேன் என்று பயந்து. ஸ்விக்கி700 மில்லியன் டாலரை கொண்டு ‘இன்ஸ்டாமார்ட்’ என்ற க்யூ காமர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. ‘சோமாட்டோ’ தன் பங்கிற்கு ‘ப்ளிங்கிட்’ என்ற நிறுவனத்தில் பல மில்லியன் போட்டிருக்கிறது. க்யூ காமர்ஸ் என்பதலோ என்னவோ இந்த தொழில் பிரிவில் நுழைய ஏகப்பட்ட க்யூ!
யதார்த்தம் எப்படி இருக்கிறது?
ஆன்லைனில் மளிகை சாமான் வாங்குவோரிடம் செய்யப்பட்ட ஆய்வில் 49% பேர், தங்களுக்கு தேர்வு செய்ய நிறைய பொருள்கள் இருப்பதுதான் முக்கியம் என்று கூற, 37% பேர் தங்களுக்கு விலைதான் பிரதானம் என்றிருக்கிறார்கள். ‘வாம்மா மின்னலு’ என்று வேகமாக தங்களுக்கு பொருட்கள் வேண்டும்என்று கூறியவர்கள் வெறும்8% பேர்மட்டுமே. பொதுவாகவே நம்மவர்கள் மளிகை பொருட்களை திட்டமிட்டு லிஸ்ட் போட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்கள். அவசரத்திற்கு ஒரு சில பொருட்களை ஆன்லைனில் வாங்குவார்களே ஒழிய மொத்த பொருள்களையும் பத்து நிமிடத்தில் கொண்டு வந்தால்தான் உண்டு என்பார்களா? தெரியவில்லை.
அப்படியே அவசரத்திற்கு ஓரிரு பொருள்கள் வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது அருகில் உள்ள அண்ணாச்சி கடை. வீட்டு கதவை திறந்து கத்தினாலேஅவருக்குக் கேட்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அளவுக்கு கூட நேரம்ஆகாது. அப்படியே இந்த ஓரிரு பொருள்களை மட்டுமேடெலிவரி செய்வதால் க்யூ காமர்ஸ் நிறுவனங்களுக்கு என்ன பெரிய லாபம் வந்துவிடப்போகிறது? இத்தனைக்கும் செப்டோ போன்ற நிறுவனங்கள் டெலிவரி சார்ஜ் கூட போடுவதில்லை. வாங்கும் உப்பு பாக்கெட்டை விட டெலிவரி சார்ஜ் அதிகமாக இருந்தால் மக்கள் வாங்குவார்களா? இதில் மக்களை கவர ஏகப்பட்ட டிஸ்கவுண்ட் வேறு தருகிறார்கள்? அவர்களுக்கு கடைசியில் என்ன மிஞ்சும்? தெளிவில்லை. க்யூ காமர்ஸ் கம்பெனிகள் தருவது ஒரு பயன் என்பதுவாஸ்தவம்தான். ஆனால் அதற்கு காசு கொடுக்க ரெடியாய் இருக்கும் அளவிற்கு மக்களுக்கு தேவைஇருக்கிறதா? பதிலில்லை.
அண்ணாச்சிக் கடைகள் களமிறங்க வேண்டும்
இந்த அதிரடி அர்ஜண்ட் க்யூ காமர்ஸ் நிறுவனங்கள் அண்ணாச்சிக் கடைகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. ஆனால், அண்ணாச்சிக் கடைகளால் க்யூ காமர்ஸ் போட்டியை எளிதாக சமாளிக்க முடியும். ஏனென்றால், அவசர அடியாய் டெலிவரி செய்ய அளவெடுத்துசெய்ததுபோல் உள்ளவர்கள் தடுக்கி விழுந்தால் இருக்கும் நம் அண்ணாச்சி கடைகள்தான். கஸ்டமர் தேவைகளை அவர்களை விட யாருக்கு தெளிவாய் தெரியும்?அவரை விட யாரால் கடையிலிருந்துபத்தடி தூரத்தில் உள்ள வீடுகளுக்கு விரைவாய் டெலிவரி செய்ய முடியும்?
அண்ணாச்சி ஸ்டோர்களுக்கும் மளிகை கடைகளுக்கும் முதலில் தேவை ஆன்லைன் நிறுவனங்களை வெல்ல முடியும் என்ற வைராக்கியம். அடுத்து அவர்களுக்குத் தேவை நவீன தொழில்நுட்பம். பொருட்களின் இருப்பை நிர்வகிக்கவும், ஆன்லைன் ஆர்டரை எளிதாக டெலிவரிசெய்ய உதவும் பலசாஃப்ட்வேர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவை அதிக விலையும் கிடையாது.இதை வைத்துக்கொண்டு அண்ணாச்சிக்கடைகள் க்விக் காமர்ஸ் நிறுவனங்களைஆட்டம் காண வைக்கலாம். செய்தால் அவர்கள் தொழிலும் தழைக்கும். என் போன்றவர்களின்காலை தூக்கமும் காப்பற்றப்படும்!
- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com